பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கை உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விசாரணையை முடித்து வைத்து தீர்ப்பை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வழங்குமாறு லக்னோ சிறப்பு நீதிமன்றமன்றதுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தேசிய அளவில் பொதுமுடக்கம் நடைமுறையில் இருப்பதால் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு காலக்கெடுவை சுப்ரீம் கோர்ட்டு நீட்டித்திருக்கிறது.
பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் வெடித்த கலவரத்தால் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பா.ஜனதா மூத்த தலைவர்களானஎல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அப்போதைய உத்தரபிரதேச முதல்வர் கல்யாண்சிங், வினய் கத்தியார், விஹெச்வி தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பை இந்த ஆண்டு ஏப்ரல் இறுதிக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்புகள் காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் மேலும் தாமதம் ஏற்பட்டதால் வழக்கின் காலக்கெடுவை நீட்டிக்க சிறப்பு நீதிமன்றம் சார்பில் அனுமதி கோரப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளான ஆர் எப் நாரிமன், சூர்ய காந்த் ஆகியோர் முன்னிலையி்ல் காணொலியில் இன்று நடைபெற்றது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், “ பாபர் மசூதி வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம் காலக்கெடுவை நீட்டிக்க எழுதிய கடிதம் கடந்த 6-ம் தேதி கிடைத்தது. நீதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கிட காலக்கெடுவை நீட்டிக்கிறோம். சாட்சியங்களை உறுதி செய்யவும், விசாரிக்கவும் தேவைப்பட்டால் நீதிபதி யாதவ், காணொலிமுறையை பயன்படுத்திக்கொள்ளலாம். விசாரணை அனைத்தும் ஏறக்குறைய முடியும் நிலைக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள்ளாக அனைத்து விசாரணைகளையும் முடித்து தீர்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தனர்
No comments:
Post a Comment