Tuesday 5 September 2017

வாகனம் ஓட்டுபவர்கள் நாளை முதல் அசல் உரிமம் வைத்து இருப்பது கட்டாயம்


செப்டம்பர் 1-ந்தேதி முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுனர் உரிமத்தை கட்டாயம் உடன் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி, கே.அஸ்வின் ஆகியோர் தனித்தனியாக பொதுநல வழக்குகளை தாக்கல் செய்தனர்.

இதேபோல தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் தனியாக ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எம்.துரைசாமி முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வாகன ஓட்டிகள் கட்டாயமாக அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை செப்டம்பர் 4-ந்தேதி (நேற்று) வரை அமல்படுத்தமாட்டோம் என்று அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் உத்தரவாதம் அளித்தார்.

இதை பதிவுச் செய்துகொண்ட நீதிபதி, ‘செப்டம்பர் 5-ந்தேதி (இன்று) வரை அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தக்கூடாது’ என்று உத்தரவிட்டிருந்தார். மேலும், இந்த வழக்கை, ஏற்கனவே தொடரப்பட்ட பொதுநல வழக்குகளுடன் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்து, நீதிபதி எம்.துரைசாமி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், டிராபிக் ராமசாமி தொடர்ந்த பொதுநல வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் எஸ்.கோவிந்தராமன், ‘தனி நீதிபதி எம்.துரைசாமி, இந்த பொதுநல வழக்குகளுடன், எங்களது வழக்கையும் சேர்த்து விசாரிக்க பரிந்துரை செய்திருந்தார். ஆனால், எங்களது வழக்கு இந்த வழக்குகளுடன் விசாரணைக்காக பட்டியலிடப்படவில்லை. எனவே, எங்கள் வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்’ என்றார்.

அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் எழுந்து, ‘இந்தியாவில் அதிக மோட்டார் வாகன விபத்துகள் நடைபெறும் மாநிலங்களில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. காலாவதியான ஓட்டுனர் உரிமங்களை வைத்துக்கொண்டு பலர் வாகனங்களை ஓட்டுகின்றனர். விபத்தை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக அவர்களது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டாலும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டாலும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் நகல் உரிமத்தை வைத்துக்கொண்டு வாகனங்களை தொடர்ந்து ஓட்டுகின்றனர். இவற்றை எல்லாம் மனதில் கொண்டு, அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது’ என்று வாதிட்டார்.

இதையடுத்து தலைமை நீதிபதி, ‘இந்திய மோட்டார் வாகனச் சட்டம் 130, விதி 139 அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்கவேண்டும் என்று தெளிவாக கூறுகிறது. விதி 139-ல், அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாதபோது, உரிய அதிகாரிகளின் சான்றொப்பம் பெறப்பட்ட நகல் உரிமத்தை வைத்திருக்கலாம் என்று கூறியுள்ளது.

அதற்காக, அசல் உரிமத்தை வீட்டில் வைத்துக் கொண்டு, நகலை மட்டும் வாகன ஓட்டிகள் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற அர்த்தம் இல்லை. நான் (தலைமை நீதிபதி) கூட வக்கீலாக இருந்தபோது, எந்நேரமும் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருப்பேன். இந்த அசல் ஓட்டுனர் உரிமத்தை போலீசாரிடம் காட்டுவதில், வாகன ஓட்டிகளுக்கு என்ன சிரமம் உள்ளது?’ என்று கேள்வி எழுப்பி கருத்து தெரிவித்தார்.

பின்னர், ‘இந்த வழக்குகளை எல்லாம் வருகிற வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறோம்’ என்று நீதிபதிகள் கூறினார்கள்.

அப்போது வக்கீல் கோவிந்தராமன், ‘செப்டம்பர் 5-ந்தேதி வரை அசல் உரிமத்தை கேட்கும் உத்தரவை அமல்படுத்தக்கூடாது என்று தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை வரும் வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால், இந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். தனி நீதிபதியின் உத்தரவை வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை. வெள்ளிக்கிழமை இந்த வழக்குகளை விசாரித்து, அதன்பின்னர் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிபதிகளின் இந்த உத்தரவினால், நாளை (புதன்கிழமை) முதல் வாகன ஓட்டிகள் அரசு உத்தரவின்படி, கண்டிப்பாக அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment