Wednesday, 27 September 2017

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு அனுமதி


இஸ்லாமிய நாடான சவுதிஅரேபியாவில் ‘ஷரியத்’ சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. எனவே அங்கு பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அங்கு பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1990-ம் ஆண்டுகளில் இருந்தே பெண்கள் உரிமை சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மீறி கார் ஓட்டிய  பெண்கள் கைது செய்யப்பட்டனர். அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நீண்ட கால கோரிக்கையை ஏற்று பெண்கள் கார் ஓட்ட விதித்திருந்த தடையை  சவுதிஅரேபிய அரசு நீக்கியுள்ளது. அதை தொடர்ந்து வருகிற 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளித்துள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அமைச்சக அலுவலகங்கள் இன்னும் 30 நாட்களுக்குள் அதற்கான அறிக்கைகள் தயார் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மன்னர் சாலமனின் இளைய மகனும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சவுதி அரேபியாவில் கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அங்கு இதுவரை விளையாட்டு போட்டிகளை பெண்கள் நேரில் சென்று பார்க்க அனுமதி இல்லை. இந்த நிலையில் தலைநகர் ரியாத்தில் தேசிய தின கொண்டாட்டத்தின் போது நடந்த விளையாட்டு போட்டியை பார்க்க பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது கார் ஓட்ட அனுமதி வழங்கியுள்ளது.

சவுதிஅரேபியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. நல்ல நோக்கத்தில் எடுக்கப்பட்ட மிகப் பெரிய நடவடிக்கை என தெரிவித்துள்ளது. ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டாசும் இதை வரவேற்றுள்ளார்.

அமெரிக்காவுக்கான சவுதி அரேபியா தூதர் இளவரசர் காவித் பின் சல்மான் வரவேற்றுள்ளார். இது வரலாற்றில் மிகப் பெரிய நாள். நல்ல நேரத்தில் எடுக்கப்பட்ட நல்ல முடிவு என வர்ணித்துள்ளார். பெண்கள் டிரைவிங் செய்யவும் லைசென்சு பெறவும் தனது கணவரையோ, ஆண் பாதுகாவலரையோ நாட வேண்டியதில்லை. இனி அவர்கள் விருப்பப்பட்ட இடத்துக்கு கார் ஓட்டிச் செல்லலாம் என்றார்.

Tuesday, 26 September 2017

எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் ரூ.650 கோடி சொத்துக்கு வரி ஏய்ப்பு


கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. இவர், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார். இவருடைய மருமகன் சித்தார்த். தொழில் அதிபரான இவர் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார்.

இந்த நிலையில், சித்தார்த்துக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், காபி டே, நட்சத்திர ஓட்டல்கள், காபி தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களில் கடந்த 21-ந்தேதி வருமான வரி சோதனை தொடங்கியது. பெங்களூரு, சிக்கமகளூரு, சென்னை, மும்பை உள்பட 24 இடங்களில் இந்த சோதனை தீவிரமாக நடைபெற்றது. சோதனையின்போது பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் பரிசீலனை செய்து வந்தனர்.

ரூ.650 கோடி சொத்துக்கு வரி ஏய்ப்பு

நேற்று முன்தினம் 4-வது நாளாக சித்தார்த்துக்கு சொந்தமான வீடு, நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரி சோதனை நீடித்தது. அப்போது, பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

சோதனையின் முடிவில் சித்தார்த் கணக்கில் காட்டாத ரூ.650 கோடி சொத்துக்கு வரி ஏய்ப்பு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது, விதிகளை மீறி அவர் பணம் சம்பாதித்து கணக்கில் காட்டாமல் இருந்தது தெரியவந்துள்ளது. அவருடைய வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை தொடர்ந்து பரிசீலனை செய்யும்போது இந்த வரி ஏய்ப்பு மேலும் உயர வாய்ப்புள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர்.

Sunday, 24 September 2017

பெண் குழந்தை ஒன்றிற்கு பிறந்து 6 நிமிடங்களில் ஆதார் எண் கிடைத்தது

மகாராஷ்டிராவில் உஸ்மனாபாத் மாவட்டத்தில் உள்ள மகளிர் மருத்துவமனை ஒன்றில் இன்று மதியம் 12.03 மணியளவில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு பாவனா சந்தோஷ் ஜாதவ் என பெற்றோரால் பெயரிடப்பட்டு உள்ளது. பிறந்த குழந்தையும், தாயும் நலமுடன் உள்ளனர்.
இந்நிலையில், 12.09 மணியளவில் ஆன்லைன் வழியே அந்த பெண் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கிடைத்துள்ளது. ஆதார் எண்ணும் கிடைத்துள்ளது. இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ண கேம் தெரிவித்துள்ளார்.
இது உஸ்மனாபாத்திற்கு பெருமை சேர்க்கும் விசயம் என கூறிய அவர், ஆதார் எண் பெறுவதற்கு அனைத்து குழந்தைகளையும் விரைவில் பதிவு செய்வோம் என கூறியுள்ளார். அவற்றை பெற்றோரின் ஆதார் அட்டைகளுடன் இணைக்கும் பணியையும் மேற்கொள்வோம் என்றும் கூறியுள்ளார்.
இந்த மருத்துவமனையில் கடந்த ஒரு வருடத்தில் பிறந்த அனைத்து 1,300 குழந்தைகளும் ஆதார் எண்களை பெற்றுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

Tuesday, 19 September 2017

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு மெஜாரிட்டி பலம் கிடைத்தது

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழந்துவிட்டதைத் தொடர்ந்து சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 215 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், ஜெயலலிதா மறைந்த பிறகு ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது.
எனவே தற்போதுள்ள 233 எம்.எல்.ஏ. எண்ணிக்கையில் 18 பேரை கழித்தால் 215 எம்.எல்.ஏ.க்கள். உள்ளனர். அந்த எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கு மேல் இருக்கும் கட்சி, ஆட்சிக்கான பெரும்பான்மையைப்பெறும்.
அதாவது எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் நடக்கும் ஆட்சிக்கு 108 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால், அந்த அரசு பெரும்பான்மை பெற்றதாக கருதப்படும்.
சட்டசபையில் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்தும்போது, சபாநாயகரை தவிர்த்துவிட்டால் 116 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே ஆளும் கட்சி வசம் இருப்பார்கள். (இரண்டு பக்கமும் ஒரே எண்ணிக்கையில் ஓட்டுகள் இருந்தால் மட்டுமே சபாநாயகரின் ஓட்டு கோரப்படும்).
அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்களில் கருணாஸ் மட்டும் டி.டி.வி.தினகரனை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார். தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் தங்களின் ஆதரவு யாருக்கு இருக்கும் என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை.
எனவே பெரும்பான்மை ஓட்டெடுப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு எத்தனை ஓட்டுகள் கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. என்றாலும் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் தற்போது எண்ணிக்கையின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு மெஜாரிட்டி பலம் கிடைத்து உள்ளது.
எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கையான 98 (தி.மு.க.–89, காங்கிரஸ்–8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்–1), ஆளும் கட்சியின் ஆதரவு எண்ணிக்கையை ஒட்டி வருவதால், அரசு அமைதியாக ஆட்சி நடத்துவது என்பது நித்திய கண்டமாகத்தான் இருக்கும்.
ஒருவேளை அரசுக்குள்ள, சபாநாயகர் நீங்கலான 116 எம்.எல்.ஏ.க்களில் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய 3 பேருமே அரசுக்கு எதிராக வாக்களித்தாலும்கூட எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 113 எம்.எல்.ஏ.க்களின் வாக்கு அரசுக்கு கிடைத்து, தேவையான 108 வாக்கைவிட அதிகம் பெற்று அரசு தப்பித்துவிடும்.
ஆனால் அரசுக்கு எதிராக வாக்களித்தால் அந்த 3 பேர் மீதும் கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்வதற்கான உத்தரவை சட்டசபையிலேயே சபாநாயகர் பிறப்பிப்பதற்கும் வழிவகைகள் உள்ளன.

Sunday, 17 September 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 17/09/2017



கொடிக்கால்பாளையம் நடுத்தெரு ஹபிபுல்லாஹ்,தம்பி என்கிற குத்புதீன் இவர்களின் தகப்பனார் தக்கப்பா என்கிற முஹம்மது இப்ராஹிம் அவர்கள் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாசா 17/09/2017 ஞாயிறு மாலை 4மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா?



தமிழகத்தின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. குமரி, நெல்லை, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள காற்றாலைகள் மூலம் கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தினமும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இதன்மூலம் தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக மின்வெட்டு இல்லாமல் இருந்து வந்தது. தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி, 90 நாட்களுக்கும் மேலாக காற்றாலைகள் மூலம், சிறப்பான வகையில் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது. இதில் இருந்து தமிழகத்தின் மின் தேவைக்கு தினமும் 2,500 முதல் 3,500 மெகாவாட்டிற்கும் அதிகமான மின்சாரம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

மின்உற்பத்தி குறைந்தது

இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக காற்றாலை மின்உற்பத்தி குறைந்துள்ளது. கடந்த 10-ந்தேதி 674 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியான நிலையில், 11-ந்தேதி 285, 12-ந்தேதி 115, 13-ந்தேதி 129, 14-ந்தேதி 531, 15-ந்தேதி 1,503, நேற்று (16-ந்தேதி) 1,954 மெகாவாட் மின்சா

Saturday, 16 September 2017

ரோஹிங்கியாவை முஸ்லீம்களாக பார்க்காதீர்கள் அகதிகளாக பாருங்கள் மத்திய அரசுக்கு அசாதுதின் ஓவைசி கோரிக்கை


ஹைதராபாத் எம்.பி., அசாதுதின் ஓவைசி சஞ்சல் குடாவில் பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:-

ரோஹிங்கியாவை முஸ்லீம்களாக அவர்களை பார்க்காதீர்கள், அவர்கள் அகதிகள். வங்காள தேச தூதர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வங்காள தேச  எல்லைக்குள் மூன்று லட்சம் அகதிகள் இருப்பதாகக் கூறினார். நீங்கள் ஒரு பிராந்திய சக்தியாக இருந்தால்,   நீங்கள் தான்  நிலைமையை சமாளிக்க வேண்டும்.

பிஜேபி அரசாங்கம் தற்போதைய நெருக்கடியை ஒரு இனவாத  மூலம் பார்க்கக்கூடாது . இந்த நடவடிக்கை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவில், இந்தியா விரும்பும் ஆசனத்தை பாதுகாக்கும் என்று கேட்டார்.

தஸ்லீமா நஸ்ரீம் பிரதமர் மோடிக்கு சகோதரியாக இருக்கும் போது. ரோஹிங்கியா அகதிகள் ஏன் அவரது சகோதரர்களாக இருக்க கூடாது.

எல்லாவற்றையும் இழந்த மக்களை  மீண்டும் அனுப்புவது  மனித தன்மை தானா? இது தவறு. எந்த சட்டத்தின் கீழ் மத்திய அரசு  ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் அனுப்ப முடியும்? இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, 14 September 2017

உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்

கவல் தொழில்நுட்ப காலம் வந்தவுடன் பலரும் அலுவலகத்தில் அமர்ந்து பார்க்கும் வேலைக்கு மாறிவிட்டார்கள். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 10 மணி நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்கிறார்கள். அலுவலகத்தில் நீண்ட நேரம் இருக்கையில் அமர்ந்து பணிபுரிவது ஆசனப் பகுதியை பாதிக்கும் என்கிறார்கள், விஞ்ஞானிகள்.

‘டெஸ்க் டெர்ரீர்’எனப்படும் இந்தப் பாதிப்பு, சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டார்கள். அவர்கள், அதிக நேரம் இருக்கையில் அசையாமல் அமர்ந்து வேலைபார்ப்பவர்களின் ‘பின்புறத்தை’ ஸ்கேன் செய்தார்கள். அப்போது, அவர்களின் ஆசனப் பகுதி தசைகள் சுருங்கியும், சேதமடைந்தும் இருப்பது தெரிய வந்தது. அதிக நேரம் அமர்ந்து, அலட்டிக் கொள்ளாமல் வேலை பார்ப்பவர் களின் பின்புறத்தில் கொழுப்பு சேர்கிறது, அது தசை திசுக்களுக்குள்ளும் ஊடுருவுகிறது.

இதுதொடர்பாக நுபீல்டு ஆரோக்கிய மையத்தின் பிசியாலஜி துறைத் தலைவர் கிறிஸ் ஜோன்ஸ் கூறுகையில், “ஒருவர் நாள் முழுவதும் இருக்கையில் உட்கார்ந்திருந்தால், அவரது இடுப்பின் முன்புறத் தசைகள் அளவுக்கு அதிகமாகச் செயல்படுபவையாகவும், இறுக்கமாகவும் ஆகின்றன. அதன் விளைவாக, குறிப்பிட்ட நபர்களின் பின்புறத்தில் அந்த வடிவத்தைக் கொடுக்கும் மூன்று முக்கியத் தசைகளான குளூட்டியஸ் மாக்சிமஸ், குளூட்டியஸ் மீடியஸ், குளூட்டியஸ் மினிமஸ் ஆகியவை பாதிக்கப்படுகின்றன” என்கிறார்.

ஆண்களுக்குப் பெரும்பாலும் இடுப்பைச் சுற்றி கொழுப்புச் சேர்கிறது என்றால், பெண்களுக்கு பெரும்பாலும் பின்புறத்தில் கொழுப்பு திரள்கிறது என்றும் கூறுகிறார், ஜோன்ஸ்.

ஆகவே உட்கார்ந்து கொண்டு வேலை பார்ப்பவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் எழுந்து சிறிது தூரம் நடப்பது மிகவும் அவசியமாகும்.

Tuesday, 12 September 2017

நீல திமிங்கலம் விளையாட்டு: பெற்றோர்கள் விழிப்புடன் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும்

திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
நீல திமிங்கல விளையாட்டு மிகவும் அபாயகரமானது. இந்த விளையாட்டில் ஈடுபடுபவர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து தனிமைப்படுத்தப்படுகின்றனர். இவர்கள் தொடர்ந்து மகிழ்ச்சியற்ற மன நிலையில் இருப்பார்கள். கோபத்தை தன் மீதோ அல்லது மற்றவர்கள் மீதோ திடீரென வெளிப்படுத்துவார்கள். இணைய தளத்தில் அதிக நேரம் செலவிடுவார்கள். தேவையற்ற காயங்களை உடலில் ஏற்படுத்தி கொள்வார்கள். இப்படி குழந்தைகள், மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களை உடனடியாக நீல திமிங்கல விளையாட்டிலிருந்து மீட்க வேண்டும்.
எனவே உயிரிழப்பை ஏற்படுத்த கூடிய நீல திமிங்கலம் விளையாட்டில் இருந்து குழந்தைகளை, பெற்றோர்கள் விழிப்புடன் கண்காணித்து பாதுகாத்து கொள்ள வேண்டும். மேலும் இதுதொடர்பாக உதவி எதுவும் தேவைப்பட்டால் 8300087700 என்ற செல்போன்எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, 9 September 2017

வெளியூர் மௌத் அறிவிப்பு 9/9/2017



அடியக்கமங்கலம் ராஜாத்தெரு குலப்பி வீட்டு மர்ஹூம் A.S.மெய்தீன் அப்துல் காதர் அவர்களின் மகனார் A.S.M காதர் இலியாஸ் அவர்கள் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாசா 9/9/2017 மதியம் 12:45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

Friday, 8 September 2017

நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்த தடை விதிக்கவில்லை உச்சநீதிமன்றம்


நீட் தேர்வுக்கு விலக்கு கோரி நடக்கும் போராட்டத்திற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியிருப்பதாவது:

நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்த தடை விதிக்கவில்லை.   நீட் தேர்வுக்கு எதிராக  சட்டம், ஒழுங்கு பாதிக்காத வகையில் அமைதியான வழியில் போராட்டம் நடத்தலாம்.  சட்டம், ஒழுங்கு பாதித்தால் தமிழக தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் . அமைதியான முறையில் போராட்டம் நடத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு.  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில் போராட்டம் நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். 

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Thursday, 7 September 2017

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல்


அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதாவிற்கு நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக திருவாரூர் அருகே உள்ள திருநெய்ப்பேர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்பை புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். உயிரிழந்த மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Wednesday, 6 September 2017

காங், பாஜகவின் 77 சதவீத வருமானம் அடையாளம் தெரியாத இடங்களிலிருந்து வந்துள்ளது


கடந்த 2015-16 ஆம் ஆண்டின் கணக்கில் ரூ 646.82 கோடி இவ்வாறு அடையாளம் தெரியாத இடங்களிலிருந்து பெறப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அந்த ஆண்டில் இரு கட்சிகளும் சேர்ந்து ரூ 832.42 கோடிகளை கூப்பன்கள் மூலமும், நன்கொடைகள் மூலமும் வசூலித்துள்ளன. தேர்தல் மற்றும் கட்சிகளை பற்றி ஆராய்ந்து வரும் அசோசியேஷன் ஃபார் டெமாக்க்ரெடிக் ரைட்ஸ் எனும் அமைப்பு இரு கட்சிகளும் முறையே ரூ 570.86 கோடியையும், ரூ. 261.56 கோடியையும் பெற்றுள்ளன. பாஜகவின் அடையாளம் தெரியாத இடங்களிலிருந்து பெறப்பட்ட வருமானம் ரூ. 460.78 கோடியாகவும், காங்கிரஸ்சின் வருமானம் ரூ. 186.04 கோடியாகவும் இருந்துள்ளது. 

அடையாளம் தெரியாத இடம் என்பது ரூ 20,000 ற்கும் கீழே பெறப்படும் நன்கொடைக்கு கொடுக்கப்படும் பெயராகும். 

மொத்தமாக ஏழு தேசியக் கட்சிகளின் மொத்த வருமானம் ரூ. 1,033.18 கோடியாகும். இதில் பாஜகவே அதிகமாக ரூ 570.86 கோடியை பெற்றுள்ளது. காங்கிரஸிற்கு ரூ. 261.56 கோடி கிடைத்துள்ளது. 

Tuesday, 5 September 2017

வாகனம் ஓட்டுபவர்கள் நாளை முதல் அசல் உரிமம் வைத்து இருப்பது கட்டாயம்


செப்டம்பர் 1-ந்தேதி முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுனர் உரிமத்தை கட்டாயம் உடன் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி, கே.அஸ்வின் ஆகியோர் தனித்தனியாக பொதுநல வழக்குகளை தாக்கல் செய்தனர்.

இதேபோல தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் தனியாக ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எம்.துரைசாமி முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வாகன ஓட்டிகள் கட்டாயமாக அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை செப்டம்பர் 4-ந்தேதி (நேற்று) வரை அமல்படுத்தமாட்டோம் என்று அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் உத்தரவாதம் அளித்தார்.

இதை பதிவுச் செய்துகொண்ட நீதிபதி, ‘செப்டம்பர் 5-ந்தேதி (இன்று) வரை அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தக்கூடாது’ என்று உத்தரவிட்டிருந்தார். மேலும், இந்த வழக்கை, ஏற்கனவே தொடரப்பட்ட பொதுநல வழக்குகளுடன் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்து, நீதிபதி எம்.துரைசாமி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், டிராபிக் ராமசாமி தொடர்ந்த பொதுநல வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் எஸ்.கோவிந்தராமன், ‘தனி நீதிபதி எம்.துரைசாமி, இந்த பொதுநல வழக்குகளுடன், எங்களது வழக்கையும் சேர்த்து விசாரிக்க பரிந்துரை செய்திருந்தார். ஆனால், எங்களது வழக்கு இந்த வழக்குகளுடன் விசாரணைக்காக பட்டியலிடப்படவில்லை. எனவே, எங்கள் வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்’ என்றார்.

அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் எழுந்து, ‘இந்தியாவில் அதிக மோட்டார் வாகன விபத்துகள் நடைபெறும் மாநிலங்களில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. காலாவதியான ஓட்டுனர் உரிமங்களை வைத்துக்கொண்டு பலர் வாகனங்களை ஓட்டுகின்றனர். விபத்தை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக அவர்களது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டாலும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டாலும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் நகல் உரிமத்தை வைத்துக்கொண்டு வாகனங்களை தொடர்ந்து ஓட்டுகின்றனர். இவற்றை எல்லாம் மனதில் கொண்டு, அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது’ என்று வாதிட்டார்.

இதையடுத்து தலைமை நீதிபதி, ‘இந்திய மோட்டார் வாகனச் சட்டம் 130, விதி 139 அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்கவேண்டும் என்று தெளிவாக கூறுகிறது. விதி 139-ல், அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாதபோது, உரிய அதிகாரிகளின் சான்றொப்பம் பெறப்பட்ட நகல் உரிமத்தை வைத்திருக்கலாம் என்று கூறியுள்ளது.

அதற்காக, அசல் உரிமத்தை வீட்டில் வைத்துக் கொண்டு, நகலை மட்டும் வாகன ஓட்டிகள் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற அர்த்தம் இல்லை. நான் (தலைமை நீதிபதி) கூட வக்கீலாக இருந்தபோது, எந்நேரமும் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருப்பேன். இந்த அசல் ஓட்டுனர் உரிமத்தை போலீசாரிடம் காட்டுவதில், வாகன ஓட்டிகளுக்கு என்ன சிரமம் உள்ளது?’ என்று கேள்வி எழுப்பி கருத்து தெரிவித்தார்.

பின்னர், ‘இந்த வழக்குகளை எல்லாம் வருகிற வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறோம்’ என்று நீதிபதிகள் கூறினார்கள்.

அப்போது வக்கீல் கோவிந்தராமன், ‘செப்டம்பர் 5-ந்தேதி வரை அசல் உரிமத்தை கேட்கும் உத்தரவை அமல்படுத்தக்கூடாது என்று தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை வரும் வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால், இந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். தனி நீதிபதியின் உத்தரவை வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை. வெள்ளிக்கிழமை இந்த வழக்குகளை விசாரித்து, அதன்பின்னர் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிபதிகளின் இந்த உத்தரவினால், நாளை (புதன்கிழமை) முதல் வாகன ஓட்டிகள் அரசு உத்தரவின்படி, கண்டிப்பாக அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மருத்துவமனையில் லிப்டில் சிக்கி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தவிப்பு

நாகப்பட்டினம் நம்பியார் நகர், அக்கரைப்பேட்டை கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 50 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 9 மீனவர்கள் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று அந்த மருத்துவமனைக்கு சென்றார். நாகை எம்.பி கோபால், தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
இவர்கள் அனைவரையும் மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் வரவேற்று மீனவர்களை சந்திப்பதற்காக 2–வது மாடிக்கு லிப்டில் அழைத்து சென்றார்.
அப்போது திடீரென பழுது காரணமாக லிப்ட், முதல் மற்றும் 2–வது மாடிக்கு இடைப்பட்ட பகுதியில் பாதி வழியில் நின்றது. இதனால் லிப்டில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் பரிதவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு இருந்த பணியாளர்கள் லிப்ட்டை முதல் மாடிக்கு இறக்கி, அமைச்சர் உள்ளிட்டோரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனாலும் லிப்ட்டை முதல் மாடிக்கு முழுமையாக கொண்டு வர முடியவில்லை. அதன் கதவையும் திறக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து லிப்டின் கதவை உடைத்து, அதில் சுமார் ½ மணி நேரத்துக்கும் மேலாக சிக்கி தவித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோரை மீட்டனர்.
அதன்பிறகு அமைச்சர், காயம் அடைந்த மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Monday, 4 September 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 4/9/2017

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

நமதூர் பர்மா தெரு துக்கான் விட்டு மர்ஹூம் சேக் அலாவுதீன் அவர்களின் மகனார் அப்துல் லத்தீப் அவர்கள் மௌத்

Sunday, 3 September 2017

சி.பி.எஸ்.இ.-க்கு இணையாக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

மத்திய அரசின் பொது நுழைவுத் தேர்வுகளை சந்திக்க மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதுடன், சி.பி.எஸ்.இ-க்கு இணையாக பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-

நெஞ்சத்தை உருக்கியது

மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எங்கள் நெஞ்சத்தை உருக்கிக் கொண்டு இருக்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். அதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற ஆணையிட்டு இருக்கிறார்.

அதன் அடிப்படையில் மத்திய அரசு கொண்டு வரும் பொதுநுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் சந்திக்கின்ற அளவுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் 412 மையங்கள் அமைத்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் 54 ஆயிரம் கேள்விகளும், அதற்கான பதில்களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டு இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

இந்த பயிற்சிக்கு பின்னர் நம்முடைய மாணவர்கள் இந்தியாவிலேயே முதன்மை மாணவர்களாக திகழ்வார்கள். இனி எதிர்காலத்தில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்குகின்ற வகையில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். அப்படி மாற்றி அமைக்கும் போது சி.பி.எஸ்.இ.க்கு இணையாக, அதே நேரத்தில் நம்முடைய பண்பாடு, கலாசாரம், தொன்மை அனைத்தும் அதிலே இடம் பெறும். அந்த அளவுக்கு நம்முடைய பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்.