Friday, 14 April 2017

வருமான வரித்துறை புகாரில் மூன்று தமிழக அமைச்சர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 35 இடங்களில் கடந்த 7-ந் தேதி அன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அமைச்சர் மீது வருமானவரித்துறை சார்பில் போலீசில் புகார் அளிக்கப்படும் என்று வருமான வரித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சென்னை காவல் ஆணையரிடம் வருமான வரித்துறையினர் புகார் தெரிவித்தனர். அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்தபோது, பெண் அதிகாரி உள்பட வருமானவரித்துறை அதிகாரிகள் மிரட்டப்பட்டதாகவும், வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களை அழித்ததாகவும், அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாகவும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

சரத்குமார் வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வருமானவரித்துறை சார்பில் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது. சோதனையில் ஈடுபட்ட பெண் அதிகாரி ஒருவர் துன்புறுத்தப்பட்டது குறித்து அவரும் தனியாக ஒரு புகார் மனுவை காவல் ஆணையரிடம் கொடுத்து உள்ளார். புகாரின் பேரில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர் என செய்திகள் வெளியாகியது.

இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் புகாரின் அடிப்படையில் மூன்று தமிழக அமைச்சர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்து உள்ளது. வருமான வரித்துறை புகாரில் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், கடம்பூர் ராஜூ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுத்தரத்தின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆதாரங்கள் அழிப்பு, அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் அமைச்சர்கள் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது, 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment