Sunday, 24 November 2013

பைக் மூலம் நீர் இறைக்கும் பம்ப் செட்!


மின்சாரத்தின் உதவியின்றி, 'பைக்' மூலம் நீர் இறைக்கும், 'பம்ப் செட்'டை உருவாக்கிய கல்லூரி மாணவன், ஷேக் அமினுதீன்: நான், நாகப்பட்டினத்தில் உள்ள, இ.ஜி.எஸ்., பொறியியல் கல்லூரி மாணவன். கடந்த சில ஆண்டுகளாக, பருவ மழை இல்லாததால், விவசாயிகள் கிணற்றுப் பாசனத்திற்கு மாறினர். ஆனால், கடுமையான மின்வெட்டு காரணமாக, சரிவர நீர் இறைக்க முடியாமல் பயிர்கள் கருகியதால், பல ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதித்தது.ஓரளவு வசதியுள்ள விவசாயிகள், டீசல் மோட்டார் மூலம் நீர் இறைத்து, விவசாயம் செய்து வரும் நிலையில், டீசலின் விலையும் அதிகரித்ததால், இப்பிரச்னைக்கு தீ்ர்வு காண முயற்சித்தேன். இதன் பயனாக, மின்சார மோட்டாருக்கு மாற்றாக, இருசக்கர மோட்டார் சைக்கிள் உதவியுடன், நீர் இறைக்கும் பம்ப் செட்டை, நண்பர்கள் உதவியுடன் கண்டுபிடித்தேன்.நீர் இறைக்க வேண்டிய இடத்தில், பைக்குடன், பம்ப் செட்டையும் இணைத்தால், 40 முதல், 50 அடி ஆழத்தில் உள்ள தண்ணீரை இறைக்கலாம். 10 நிமிடத்திலேயே பைக்கையும், பம்ப் செட்டையும் எளிதில் இணைக்கும் வகையில் உருவாக்கியுள்ளதால், கூடுதல் இணைப்பை கழற்றி, மாட்டுவதில் பிரச்னை இருக்காது.பைக்கில் உள்ள, 'செயின் ஸ்பிராக்கெட்'டுடன் கூடுதலாக மற்றொரு செயின் ஸ்பிராக்கெட் இணைக்கப்பட்டுள்ளதால், பைக்கை இயக்குவதில் எவ்வித சிக்கலும் இருக்காது. மேலும், குறைந்த சுழற்சியில் அதிக அளவு தண்ணீரை இறைக்கும் வகையில், பம்ப் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.இந்த பம்ப்பை, மாற்றம் செய்யப்பட்ட பைக்குடன் இணைத்து, பைக்கை ஸ்டார்ட் செய்தால், பம்ப் செட் நீர் இறைக்க துவங்கும். இந்த பம்ப் செட்டின் மொத்த எடை, 10 கிலோ என்பதால், எளிதில் எங்கும் தூக்கி செல்லலாம். 1 லிட்டர் பெட்ரோல் மூலம், 2 மணி நேரத்தில், 72 ஆயிரம் லிட்டர் தண்ணீரை இறைக்கலாம். ஆனால், டீசல் மோட்டரில், 2 மணி நேரத்தில், 60 ஆயிரம் லிட்டர் தண்ணீரை மட்டுமே இறைக்க முடியும். இக்கண்டுபிடிப்பின் மூலம் விவசாயிகள் தாங்கள் ஓட்டும் பைக்கை இனி, 'டூ இன் ஒன்னாக' பயன்படுத்தலாம். தொடர்புக்கு: 98943 54438

No comments:

Post a Comment