*
தமிழகத்தின் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம்: 17 மாவட்ட அதிகாரிகளுக்கு இன்று முதல் பயிற்சி* தமிழகத்தின் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் இதையடுத்து சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 17 மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு இன்று முதல் பயிற்சி தொடங்குகிறது. தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நெருங்கி வருகிறது. இதையடுத்து தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை பணிகளை தமிழக தேர்தல் துறை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஜன.20-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைவழங்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதுதவிர, தமிழகத்தில் கூடுதலாக 30 ஆயிரம் வாக்குச்சாவடிகளை கண்டறியும் பணிகள் முடிக்கப்பட்டு, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலம் பட்டியலிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், ஒரு தொகுதிக்கு 4 பேர் வீதம் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு தமிழக அரசிதழில் நேற்றுவெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, மாவட்ட வருவாய் அலுவலர்கள், துணை ஆட்சியர்கள் நிலையில் உள்ளவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 17 மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள 116 தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கான பயிற்சி மற்றும் சான்றளித்தல் நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அண்ணா மேலாண்மை பயிற்சி மையத்தில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ இந்த பயிற்சியை இன்று தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, இதரமாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கான பயிற்சி திருச்சியில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment