Tuesday 11 July 2017

இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை: தமிழக மாட்டு வியாபாரிகள் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என தடை விதித்தும், மாடு வாங்கல், விற்றலை ஒழுங்குபடுத்தியும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் கடந்த மே மாதம் ‘மிருகவதை தடை தடுப்பு (கால்நடை சந்தை ஒழுங்குமுறை) விதிகள் 2017’ என்ற தலைப்பில் அறிவிக்கை வெளியிட்டது.
மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பல்வேறு தொண்டு நிறுவனத்தினரும், மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத்தினரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கின்றனர்.
சுப்ரீம் கோர்ட்டில் மனு
இந்த நிலையில், பொள்ளாச்சியைச் சேர்ந்த ‘தமிழ்நாடு மாட்டு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கம்’ சார்பில் மத்திய அரசின் அறிவிக்கையை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தொழில் பாதுகாப்பு உரிமை வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் மத்திய அரசின் அறிவிக்கை எங்களுடைய தொழிலை ஆபத்துக்கு உள்ளாக்கும் வகையில் அமைந்து இருக்கிறது. இது எங்களை நேரடியாக பாதிக்கக் கூடியது. இந்த புதிய அறிவிக்கை தனி மனித உரிமையை பறிக்கின்ற சட்டவிரோதமான செயல் மட்டுமின்றி, இந்திய அரசியல் அமைப்புக்கும் எதிரானது.
பொள்ளாச்சி மாட்டுச் சந்தை முக்கியமான மாட்டுச் சந்தையாகும். ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்பதும், வாங்குவதும் பல்லாண்டுகளாக நடந்து வரும் நிலையில் அரசின் தடை விவசாயிகள், மாட்டு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளதாக சங்கத்தினர் கூறுகின்றனர். எனவே அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தங்களது முறையீட்டில் கோரியுள்ளனர்.

No comments:

Post a Comment