Monday, 2 April 2018

திருவாரூர்-சென்னை புறவழிச்சாலையில் கம்பிவேலி அமைத்த விவசாயி


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் திருவாரூர்-சென்னை புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலை அமைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறையினர் நிலங்களை கையகப்படுத்தினர். அப்போது கருப்பூரை சேர்ந்த கோபால் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் 22 ஆயிரம் சதுர அடி கையகப்படுத்தப்பட்டது. ஆனால் வழங்கப்பட்ட இடத்தை விட 12 ஆயிரம் சதுர அடி இடத்தை கோபாலின் அனுமதியின்றி கூடுதலாக கையகப்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இதனால் நெடுஞ்சாலைத்துறை மீது மதுரை ஐகோர்ட்டில் கோபால் கடந்த 2015-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, நெடுஞ்சாலைத்துறையினர் கூடுதலாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை கோபால் பயன்படுத்தி கொள்ளலாம் என உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து கோபால் தனக்கு சொந்தமான இடத்தில் சாலையின் இருபுறமும் வேலி அமைத்தார். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அப்போதைய தாசில்தார், போலீஸ் துணை சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகள் கோபாலிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி 10 நாட்களில் தீர்வு காணப்படும் என உறுதியளித்து வேலியை பிரித்தனர். அதன் பின்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டில் கோபால் மீண்டும் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு, அனுமதியின்றி நெடுஞ்சாலை துறையினர் கையகப்படுத்திய நிலத்தை கோபால் பயன்படுத்திக்கொள்ளலாம் என உத்தரவிட்டது. அதனையடுத்து நேற்று காலை கிருஷ்ணாபுரத்தில் திருவாரூர்-சென்னை புறவழிச்சாலையின் இருபுறமும் உள்ள பிரிவு சாலையில் வாகனங்கள் செல்லமுடியாதபடி கம்பிவேலி அமைத்தும், மணல் மூட்டைகளை வரிசையாக வைத்தும் கோபால் அடைத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த திருவிடைமருதூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கோபாலிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எதுவும் ஏற்படாததால் அதிகாரிகள் திரும்ப சென்றனர்.

எப்போதும் அதிக அளவில் வாகன போக்குவரத்து நடைபெறும் திருவாரூர்-சென்னை புறவழிச்சாலையில் கம்பிவேலி அமைத்து விவசாயி அடைத்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment