Thursday, 27 February 2020

டெல்லி வன்முறை: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு; பதற்றம் தணிந்தது

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத், மவுஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் புதிதாக போராட்டங்கள் தொடங்கின. இந்த போராட்டத்துக்கு எதிராக மற்றொரு பிரிவினரும் கடந்த 23-ந்தேதி போராட்டம் நடத்த முயன்றனர்


இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது. ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் வன்முறை பரவியது. வன்முறையாளர்கள் கடைகள், வீடுகளுக்கு தீ வைத்தும், சாலைகளில் வாகனங்கள், டயர்களை எரித்தும் வெறியாட்டம் போட்டனர்.

சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடந்தது. இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். உயிரிழப்புகளும் நிகழ்ந்தது. இதையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவம்  வரவழைக்கப்பட்டது. மேலும் வன்முறை பாதித்த பகுதிகளில் ‘144’தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே வன்முறையில் சிக்கி காயமடைந்தவர்களில் பலர், சிகிச்சை பலனளிக்காமல் ஆஸ்பத்திரிகளில் மரணமடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்  நேற்று வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு  நேரில் சென்று பார்வையிட்டார். பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் பகிரங்க அறிக்கையை வெளியிட்டு, "அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கு" அழைப்பு விடுத்துள்ளார்

அமித்ஷா பல ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார். வன்முறை தொடர்பாக டெல்லி காவல்துறை 18 வழக்குகள்  பதிவு செய்து 106 பேரை கைது செய்துள்ளது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், பதற்றம் தணிந்து உள்ளதாகவும் போலீசார் கூறி உள்ளனர்.

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது  34 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 30 பேர் உயிரிழந்த நிலையில் வன்முறையில் படுகாயமடைந்து மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 270 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

தீயணைப்புத் துறை இயக்குநர் அதுல் கார்க் கூறும் போது,  பாதிக்கப்பட்ட பகுதிகளை மூத்த அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். வடகிழக்கு டெல்லியின் வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது  நாங்கள் எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளவில்லை.

வடகிழக்கு டெல்லியின் வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளிலிருந்து இன்று காலை 12 மணி முதல் காலை 8 மணி வரை 19 அழைப்புகள் வந்தன. 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த பகுதிகளில் உள்ள நான்கு தீயணைப்பு நிலையங்களுக்கு கூடுதல் தீயணைப்பு வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. என கூறி உள்ளார்

No comments:

Post a Comment