Friday 10 June 2016

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு



திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எம்.மதிவாணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முதல்வர் ஜெயலலிதா சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது என்ற புதிய விருது உருவாக்கப்படுமென்று அறிவித்திருந்தார்.
அதன்படி, 15 முதல் 35 வயதுள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று இவ்விருது வழங்கப்படும். இந்த விருது ரூ.50,000, பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும்.
2016-ஆம் ஆண்டுக்கான இவ்விருதுக்கு 15 முதல் 35 வயதுக்குள்பட்ட ஆண், பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் கடந்த ஏப்ரல் 1 அன்று 15 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் அல்லது மார்ச் 31-ஆம் தேதியன்று 35 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும். சமுதாய நலனுக்காக தொண்டாற்றியிருப்பவர்களாக இருக்க வேண்டும்.
அவர்கள் செய்த தொண்டு சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி பொதுத்துறை நிறுவனம் மத்திய- மாநில அரசுப் பணியில் உள்ளவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. விண்ணப்பம் மற்றும் இதர விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட விளையாட்டு அலுவலகம் அல்லது இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, ஜூன் 20-ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04366-227158, 7401703500 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment