Monday 29 February 2016

திருவாரூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் தேர்வை 13 ஆயிரத்து 624 பேர் எழுதினர்


திருவாரூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலருக்கான தேர்வை 13 ஆயிரத்து 624 பேர் எழுதினர்.

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கிராம நிர்வாக அலுவலருக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இதற்காக திருவாரூர் மாவட்டத்தில் 43 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில் 60 தேர்வு அறைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 மாவட்டம் முழுவதும் 17 ஆயிரத்து 560 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 13 ஆயிரத்து 624 பேர் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 936 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் 60 முதன்மை கண்காணிப்பாளர்களும், 878 அறை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். 11 பறக்கும் படையினரும், 60 ஆய்வாளர்களும், 43 வீடியோகிராபர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவாரூரில் பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பொதுமக்கள் அவதி



திருவாரூரில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
பாதாள சாக்கடை திட்டம்திருவாரூர் நகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி நகரின் பல்வேறு இடங்களில் தரைக்கு அடியில் குழாய்கள் போடப்பட்டு, கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல இடங்களில் பாதாள சாக்கடை குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் குடியிருப்பு பகுதியை சூழ்ந்துள்ளது. குறிப்பாக தியாகராஜர் கோவில் எதிரே உள்ள சன்னதி தெரு, பனகல் சாலையில் உள்ள சிவம் நகர் ஆகிய இடங்களில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.
சிவம் நகரில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறி, அப்பகுதி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர். சாலையின் நடுவே தேங்கி நிற்கும் கழிவு நீரால் சிவம் நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.
கீழகோபுர வாசல்இதேபோல நகரின் பிரதான பகுதியான தியாகராஜர் கோவில் கீழகோபுர வாசல் அருகில் உள்ள சன்னதி தெரு பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறி வருகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், நடந்து செல்பவர்கள் முதல் வாகனங்களில் செல்பவர்கள் வரை தேங்கி நிற்கும் கழிவுநீரால் அவதிப்பட்டு வருகிறோம். கழிவு நீரில் இருந்து அதிக அளவில் கொசு உற்பத்தியாகி, சுகாதார கேடு ஏற்பட்டிருக்கிறது. எனவே பாதாள சாக்கடை பழுதுகளை உடனடியாக சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Sunday 28 February 2016

பாசன வாய்க்கால்களை கோடைகாலத்திலேயே தூர்வார வேண்டும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்






























திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால்களை கோடைகாலத்திலேயே தூர்வார வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சிறப்பு நிதி

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் மதிவாணன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், வேளாண்மை இணை இயக்குனர் மயில்வாகணன், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜேந்திரபிரசாத், வெண்ணாறு கோட்ட செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

பாண்டியன் (விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்): தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக தூர்வாரும் பணிகளுக்கு சிறப்பு நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது. விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

சுந்தரமூர்த்தி (விவசாயிகள் சங்க நிர்வாகி): குடவாசல் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு பணம் குறைவாக வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகளிடம் இருந்து குறைந்த அளவே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதை கண்காணித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூர்வார வேண்டும்

சேதுராமன் (மாவட்ட விவசாயிகள் நலச்சங்க தலைவர்): விவசாயிகள் 2012-13-ம் ஆண்டு பெற்றுள்ள பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால்களை கோடை காலத்திலேயே தூர்வார வேண்டும்.

பாலகுமாரன் (பேரளம்): நன்னிலம் ஒன்றியத்தில் உழவு பணிக்கு தேவையான எந்திரத்தை மானியத்தில் பெற விவசாயிகள் அதிகம்பேர் பதிவு செய்து உள்ளனர். இவ்வாறு பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு இதுவரை எந்திரம் வழங்கப்படவில்லை. காத்திருப்போர் பட்டியலில் உள்ள விவசாயிகளுக்கு விரைவாக எந்திரம் வழங்க வேண்டும்.

சேகர் (எடமேலையூர்): விவசாயிகளிடம் இருந்து உளுந்து, பயறு வகைகளை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

தம்புசாமி (கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்): கடந்த 2 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு கரும்புக்கான நிலுவை தொகை வழங்கப்படவில்லை. நடப்பாண்டில் கரும்புக்கு அறிவித்துள்ள பரிந்துரை விலையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். குளிக்கரை ஒட்டக்குடி வாய்க்காலை முழுமையாக தூர்வார வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் தேங்காய் விலை வீழ்ச்சியடைந்து உள்ளது. எனவே தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

கட்டுமான பணி

ஜெயராமன் (நமது நெல்லை காப்போம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்): கட்டிமேடு பாசன பெரிய வாய்க்காலில் உள்ளாட்சித்துறை, கல்வித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுமக்கள் ஏற்படுத்தி உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

மயில்வாகணன் (வேளாண்மை இணை இயக்குனர்): திருவாரூர் மாவட்டத்தில் 10 இடங்களில் தலா ரூ.1½ கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணி தொடங்கி உள்ளது. வடுவூரில் 15 ஏக்கர் பரப்பில் தென்னை நாற்றாங்கால் உருவாக்கப்பட உள்ளது.

மதிவாணன் (கலெக்டர்): திருவாரூர் மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்பு நிவாரண தொகை ரூ.62 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ரூ.46 கோடிக்கு பட்டியல் தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டு இதுவரை ரூ.28 கோடி மதிப்பிலான நிவாரணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள ரூ.16 கோடிக்கு பட்டியல் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்றிருக்கின்றன. எனவே விவசாயிகளுக்கு வருகிற 29-ந் தேதிக்குள் நிவாரணம் வழங்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது. 

Saturday 27 February 2016

விவசாய நிலங்கள் குறைந்துள்ளன: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

நாட்டில் உள்ள விவசாய நிலங்களின் அளவு முன்பைக் காட்டிலும் தற்போது குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் வெள்ளிக்கிழமை பதிலளித்துப் பேசியதாவது:
 இந்தியாவில் உள்ள விவசாய நிலங்களின் அளவு கடந்த 2005-06-ஆம் நிதியாண்டில் 18.27 கோடி ஹெக்டேராக இருந்தது. அந்த அளவு 2012-13-இல் 18.2 கோடி ஹெக்டேராகக் குறைந்தது.
 அதாவது, 7 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் வேறு சில பயன்பாட்டுக்காக மாற்றப்பட்டுள்ளன. நகரமயமாக்கல், சாலைத் திட்டங்கள், வீட்டு வசதி மற்றும் தொழில் நிறுவனங்கள் அமைத்தல் உள்ளிட்ட காரணங்களால் விவசாய நிலங்களின் அளவு குறைந்துள்ளது.
 அதேவேளையில் தற்போது உள்ள அளவு மேலும் குறையாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலப்பரப்பு குறைந்தபோதிலும் வேளாண் உற்பத்தி முன்பை விட அதிகரித்துள்ளது என்றார் அவர்.

Friday 26 February 2016

ரயில்வே நிதிநிலை அறிக்கை: திருவாரூர் மக்கள் ஏமாற்றம்


ரயில்வே நிதிநிலை அறிக்கையில் திருவாரூர் பகுதிகளில் எவ்வித ரயில்வே திட்டங்களுக்கும் அறிவிப்பு இல்லாததால் ரயில் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு வியாழக்கிழமை தாக்கல் செய்த இடைக்கால ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத அறிக்கையாக உள்ளது.
திருவாரூர் பகுதி ரயில் பயணிகளின் கோரிக்கையான, திருவாரூர் ரயில் நிலையம் முன்னோடி ரயில் நிலையமாக மாற்றாதது, திருவாரூர் - காரைக்குடி அகல ரயில்பாதை பணி நிறைவேற்றாதது உள்ளிட்ட எவ்வித திட்டமும் அறிவிப்பு இல்லாததால் திருவாரூர் ரயில் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ரயில் மற்றும் பேருந்து பயணிகள் சங்கத் தலைவர் ஆர். தட்சிணாமூர்த்தி கூறியது:
திருவாரூரிலிருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில் விடாதது ஏமாற்றம். இதேபோல், மீட்டர்கேஜ் வழித்தடம் இருக்கும்போது இயங்கிய நாகூர் - கொல்லம் ரயில், நாகூர் - விழுப்புரம் பயணிகள் விரைவு ரயில் விடாதது ரயில் பயணிகளிடையே ஏமாற்றம் அளிக்கிறது.
திருவாரூர் வழியாகச் செல்லும் என்று அறிவிக்கப்பட்ட மன்னார்குடி - சென்னை விரைவு ரயில் திருவாரூர் வழியாக இயக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கீழ்தஞ்சை மாவட்டம் ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் மத்திய ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தி ரயில் பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

Thursday 25 February 2016

கிரெடிட், டெபிட் அட்டை பரிவர்த்தனைகளுக்கு இனி சேவைக் கட்டணம் இல்லை


கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளில் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும்போது வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம், உபரிக் கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 ரொக்கப் பரிவர்த்தனைகளைக் குறைத்து வங்கி அட்டைகளைப் பயன்படுத்தும் நடைமுறை அதிகரிப்பதற்காக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 ரொக்கமாகப் பணம் செலுத்துவதற்குப் பதிலாக கிரெடிட், டெபிட் அட்டைகளைப் பயன்படுத்தும்போது, அதற்கென பிரத்யேகமாக சேவைக் கட்டணம், சிறப்பு வசதிக் கட்டணம், உபரிக் கட்டணம் ஆகியவை வசூலிக்கப்படுகின்றன.
 இதன் காரணமாக ரொக்கப் பரிவர்த்தனைகளையே மக்கள் அதிக அளவில் மேற்கொள்கின்றனர். இதைத் தவிர்க்கும் பொருட்டு கிரெடிட், டெபிட் அட்டைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்களை ரத்து செய்ய மத்திய அரசு முன்வந்துள்ளது.
 பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
 அதேபோல், குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளை வங்கி அட்டைகளின் மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேணடும் என்ற பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
 இதைத் தவிர கிரெடிட், டெபிட் அட்டைகள் மூலமாக பொருள்களை வாங்கும்போது நுகர்வோருக்கு வழங்கப்படும் தள்ளுபடி விகிதத்தை மாற்றியமைப்பதற்கும் மத்திய அமைச்சரவை இசைவு தெரிவித்துள்ளது.

Wednesday 24 February 2016

அஞ்சல்தலைகள் விற்பனை: 3 ஆண்டுகளில் 50% சரிவு

நூற்றாண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் இருந்து வரும் அஞ்சல்தலைகளின் விற்பனை கடந்த 3 ஆண்டுகளில் 50 சதவீதம் அளவுக்கு சரிவு அடைந்துள்ளது.
 இந்தியாவில் 1854-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அஞ்சல் தலை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. நூற்றாண்டுகளுக்கும் மேலாக, பயன்பாட்டில் உள்ளது.
 ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளின் (ஸ்ஹழ்ண்ர்ன்ள் ள்ன்க்ஷத்ங்ஸ்ரீற்ள்) கீழ், சுதந்திரப் போராட்ட தியாகிகள், தேசிய விலங்குகள், பறவைகள், முக்கிய நிகழ்வுகள், பழம்பெரும் அரசியல் தலைவர்களின் சாதனை போன்றவற்றை நினைவுகூரும் வகையில் (இர்ம்ம்ங்ம்ர்ழ்
 ஹற்ண்ஸ்ங் ள்ற்ஹம்ல்ள்) 50-க்கும் மேற்பட்ட அஞ்சல் தலைகளை அச்சிட்டு வெளியிடுகிறது.இருப்பினும், தகவல் தொழில்நுட்பப் புரட்சி அஞ்சல், அஞ்சல் தலைகள் பயன்பாட்டை குறைத்துள்ளது.
 அஞ்சல், பார்சல்கள் அனுப்புவதற்கு அஞ்சல் தலைகள் ஒட்ட வேண்டும். உலகளவில் ஒரு சில நாடுகள் அஞ்சல் சார்ந்த தேவைகளுக்கு மட்டுமின்றி, சேகரிப்பாளர்களுக்காகவே அஞ்சல் தலைகளை வெளியிடுகின்றன.
 இது, அந்த நாடுகளின் வருமானத்தில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பாக இருப்பதும் காரணமாகவும் உள்ளது. இதனால், சேவை, வணிகம் சார்ந்த நடவடிக்கைகளில் அஞ்சல் தலைகள் முக்கிய இடம் பெறுகின்றன.
 வருமானத்தில் முக்கியப் பங்கு.: இந்திய அஞ்சல் துறையின் பாரம்பரியச் சேவைகளில், அஞ்சல் தலை விற்பனை முக்கிய இடம் வகிக்கிறது. இதன் விற்பனை பிரதான இடம் வகிக்கிறது.
 செல்லிடப்பேசி, இணையம் போன்ற தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சியால் இ-மெயில், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களின் பெருக்கம் ஆகியவற்றால், இளம் தலைமுறையினர் மத்தியில் கடிதம் எழுதும் பழக்கம் அருகி வருகிறது.
 50 சதவீதம் சரிவு...: அஞ்சல் பயன்பாடு குறைந்து வருவதால், அஞ்சல் தலை பயன்பாடு, விற்பனையும் பெருமளவில் குறைந்து வருகிறது. 
 கடந்த 3 ஆண்டுகளில், அஞ்சல் தலைகள் விற்பனை 50 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது என, இந்திய அஞ்சல் துறை அண்மையில் வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 இதுகுறித்து, அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
 2013-14ஆம் ஆண்டில் ரூ.670.7 கோடிக்கும், 2014-15-இல் ரூ.576.2 கோடிக்கும், 2015-16-இல் நவம்பர் வரை ரூ.345.7 கோடிக்கும் அஞ்சல் தலைகள் விற்பனையாகி உள்ளன.
 இவற்றை ஒப்பிடும் போது, அஞ்சல் தலை விற்பனை வாயிலாகக் கிடைக்கும் வருவாயானது பாதியாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில், பார்சல் மூலம் கிடைக்கும் வருவாயானது, அக்டோபர் வரை (2015) 117 சதவீதம் உயர்ந்துள்ளது என்றனர்.

Tuesday 23 February 2016

அரசு இ - சேவை மைய 'பேஸ்புக்' துவக்கம்

அரசு இ - சேவை மையம் தொடர்பான தகவல்களை அறிய, 'மொபைல் ஆப்' மற்றும் 'பேஸ்புக்' துவக்கப்பட்டு உள்ளன.

தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் சார்பில், 470 இடங்களில், அரசு இ - சேவை மையங்கள் துவக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில், வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் பெறுதல் உட்பட, 54 சேவை வழங்கப்படுகின்றன.இ - சேவை மையம் தொடர்பான தகவல்களை, மொபைல் போனில் தெரிந்து கொள்ள, 'TACTV' என்ற, 'மொபைல் ஆப்' வசதியை, 'கூகுள் ப்ளே ஸ்டோரில்' இருந்து, இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். இதுவரை, 7,832 பேர், இந்த வசதியை பதிவிறக்கம் செய்துள்ளனர். 

இதன்மூலம், இ - சேவை மையங்களின் முகவரி, வரைபடம், மையத்திற்கு செல்லும் வழி, அங்கு வழங்கப்படும் சேவைகளை அறியலாம். இதுதவிர, இ - சேவை மையங்களுக்கு என, தனியே, 'TACTV' என்ற பெயரில், 'பேஸ்புக்' பக்கம் துவக்கப்பட்டு உள்ளது. 'இதில், பொதுமக்கள், இ - சேவை மையம் தொடர்பான ஆலோசனை மற்றும் குறைகளை தெரிவிக்கலாம். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாடகைதாரர்களிடம் இனி அதிக முன்பணம் வசூலிக்க முடியாது: வருகிறது வாடகை மாதிரிச் சட்டம்


வாடகைதாரர்களிடம் அதிக முன்பணம் வசூலிப்பதைத் தடுக்க வாடகை மாதிரி சட்டம் ஓரிரு ஆண்டுகளில் வர உள்ளது என தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
 சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அலுவல், கல்வி, பணியிட மாற்றம், வசதி வாய்ப்புகளுக்கு ஏற்ப மக்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு குடியேறுகின்றனர். இதனைப் பயன்படுத்தி, வீட்டு உரிமையாளரும் வசதிகளுக்கு தகுந்தாற்போல் வாடகையை நிர்ணயித்துக் கொள்கின்றனர். அதோடு, இடைத்தரகர் (புரோக்கர்), சிறு வீடுகள் விற்பனை செய்வோர் உள்ளிட்டோரால் வீöடுகளின் வாடகை பன் மடங்கு உயர்ந்துள்ளன. 
 இதனால், பெருநகரங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் வாடகைக்கு வீடு தேடுவது என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. இதனை கட்டுப்படுத்தவே மத்திய அரசு கடந்த ஆண்டு வாடகை மாதிரிச் சட்டத்தை ஏற்படுத்தியது. அதன்மூலம், அனைத்து மாநிலங்களிலும் சட்ட மசோதாவைக் கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளன.
 அதிக முன்பணம் வசூலிக்க முடியாது: வாடகை மாதிரிச் சட்டத்தை கொண்டு வரும் நிலையில், இனி வீட்டு உரிமையாளர்கள் 10, 12 மாத வாடகையை முன்பணமாகப் பெறுவது தடுக்கப்படும். அதேபோல, குறைந்தது 3 மாத முன்பணம் வசூலிப்பது, வாடகை உயர்த்துவதை முன்கூட்டியே தெரிவிப்பது, இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, பிரச்னைகளை விசாரிக்க தனி ஆணையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. 
 இதுகுறித்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்தது:
 மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தச் சட்டம் குறித்து தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் ஆராய்ந்து வருகின்றன. இந்தச் சட்டத்தை முழுமையாக கொண்டு வரும் பட்சத்தில் வீட்டு உரிமையாளர்கள், வாடகைதாரர்கள் ஆகியோரின் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றனர்.

Monday 22 February 2016

சிறுபான்மை மொழிப் பாடம்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு


சிறுபான்மை மொழிப் பாடத்தை முதன்மைப் பாடமாகக் கொண்டு தேர்வு எழுத அனுமதி பெற்றவர்கள், விரும்பினால் தமிழை முதன்மைப் பாடமாகக் கொண்டு தேர்வு எழுதலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் அமுதவல்லி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் (மார்ச் 2016), தமிழ்நாடு தமிழ் கற்பித்தல் சட்டத்தின் படி, அனைத்து மாணவர்களும் பகுதி-1இல் தமிழை முதற்பாடமாகக் கொண்டு தேர்வு எழுத வேண்டும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, பெயர்ப் பட்டியலிலும் தமிழே முதன்மை மொழிப்பாடமாகப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த 7,889 மாணவர்களுக்கு மட்டும் தமிழ் மொழிப் பாடம்  எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அவர்களின் சிறுபான்மை மொழிப் பாடத்தை  முதன்மை மொழிப் பாடமாகக் கொண்டு தேர்வு எழுத அனுமதி அளித்து பெயர்ப் பட்டியலிலும் திருத்தம் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வேலூர் மற்றும் சென்னை மாவட்டங்களுக்கு உள்பட்ட பள்ளிகளில் படித்து வரும் சில மாணவர்கள் (உயர்நீதிமன்ற தீர்ப்பு பெற்றவர்கள்) தமிழ் மொழியையே முதல்  மொழிப் பாடமாகக் கொண்டு பகுதி-1இல் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளதாக, அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தெரியவந்துள்ளது.
எனவே, சென்னை உயர்நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பு பெற்ற 7,889 மாணவர்களில் எவரேனும் தமிழ் மொழியையே முதல் மொழிப் பாடமாகக் கொண்டு பகுதி-1இல் தேர்வு எழுத விரும்பினால், அவர்களை அவ்வாறே தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கலாம். அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அந்த மாணவர்களின் விருப்பக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு தமிழை முதல் மொழிப் பாடமாகக் கொண்டு தேர்வு எழுத அனுமதிக்கலாம். பெயர்ப் பட்டியலில் சிறுபான்மை மொழிப்பாடத்தை திருத்தம் செய்ய வேண்டாம் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Sunday 21 February 2016

இன்று 1.16 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து


திருவாரூர் மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட 1.16 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை புகட்டப்படுகிறது. இதற்காக 870 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சொட்டு மருந்து வழங்க ஊரக பகுதிகளில் 800, நகர்பகுதிகளில் 70 என 870 முகாம்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், வளர்கல்வி மையங்கள், பள்ளிகள், புகைவண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர நடமாடும் குழுக்கள் மூலம் போக்குவரத்து வசதி இல்லாத இடங்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி அளிக்கும் திட்டத்தின்கீழ் பணிகள் நடைபெறும் இடங்களிலும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காய்ச்சல் கண்ட குழந்தைகள், முகாம் அன்று பிறந்த குழந்தைகள், ஏற்கெனவே எத்தனை முறை சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் தற்போது சொட்டு மருந்து தவறாமல் கொடுக்க வேண்டும். பணி நிமித்தம் காரணமாக இடம் பெயர்ந்து செல்லும் கீழ்க்கண்ட மக்களுக்கு சிறப்ப கவனம் செலுத்தி அவரவர்கள் பணியிடத்தில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
செங்கல் சூளை தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சாலைப்பணி தொழிலாளர்கள், கைரேகை பார்ப்பவர்கள், ஆடு, மாடு மற்றும் வாத்து மேய்ப்பவர்கள், பிற மாநில தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும். (பொம்மை செய்பவர்கள்).
இப்பணியில் சுகாதாரம், ஊட்டச்சத்து, ஊரக வளர்ச்சி, கல்வித்துறை, வருவாய்த் துறை, மாணவர்கள், தன்னார்வலர்கள் ரோட்டரி சங்கத்தினர் ஆகியோர் சொட்டு மருந்து வழங்குபவர்களாகவும், மேற்பார்வையாளர்களாகவும், கண்காணிப்பாளர்களாகவும் 3,480 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பணியை மேற்பார்வையிட ஆரம்ப சுகாதார நிலைய அளவில் 112 மேற்பார்வையாளர்களும், வட்டார அளவில் 10 கண்காணிப்பாளர்களும், மாவட்ட அளவில் 7 மேற்பார்வையாளர்கள் என மொத்தம் 129 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். பொதுமக்கள்  இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்க ஒத்துழைக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என அதில் தெரிவித்துள்ளார்.

Saturday 20 February 2016

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு


பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தேர்வில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
 இந்த பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே பிப்ரவரி 22 முதல் மார்ச் 2 வரை நடைபெற உள்ளன. இதுகுறித்த அறிவிப்பு கிடைக்கப்பெறாத தனித் தேர்வர்கள், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது மாவட்ட கல்வி அலுவலரை நேரில் தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Friday 19 February 2016

சென்னையில் அரசு பஸ்களில் மாதம் 10 முறை பயணம் செய்ய மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ்; சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு



சென்னையில் அரசு பஸ்களில் மூத்த குடிமக்களுக்கு இலவச 
பஸ் பாஸ் திட்டம் 24-ந்தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு, 110-விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

எம்.ஜி.ஆர். காட்டிய வழி

கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க., தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின் தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் எவ்வாறெல்லாம் செயல்படும் என்பது பற்றி அப்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மிகத் தெளிவாக நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். எம்.ஜி.ஆர். காட்டிய வழியில் எங்களது புனிதப் பயணம் அமையும் என்ற வாக்குறுதியை அளித்திருந்தோம்.

தமிழகம் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கல்வி, மருத்துவம், விவசாயம், நதிநீர், அடிப்படைக் கட்டமைப்பு, வீடு, மின்சாரம் மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும், தமிழ் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தலை நிமிர்ந்து சொந்தக்காலில் நிற்பதற்கான வழி உருவாக்கப்படும் என்றும் எங்களது லட்சியத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த லட்சியத்தை எய்துவதற்கு துறை தோறும் எடுக்க உள்ள நடவடிக்கைகள் பற்றியும் தெளிவாக குறிப்பிட்டிருந்தோம்.

மூத்த குடிமக்களுக்கு பஸ் பாஸ்

எங்களது தேர்தல் அறிக்கையில் முதன்மை துறை, உற்பத்தித்துறை மற்றும் சேவைத்துறை ஆகியவை எவ்வாறு மேம்படுத்தப்படும் என்பது பற்றி தெரிவித்திருந்ததோடு, மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள், முதியோர்கள், ஆதரவற்றோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என ஒவ்வொரு பிரிவினருக்கும் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் பற்றியும் வாக்குறுதி அளித்திருந்தோம்.

மூத்த குடிமக்களுக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்ய கட்டணமில்லா பஸ் பாஸ் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் அறிக்கையில் நாங்கள் அளித்திருந்தோம். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதற்கட்டமாக சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையிலான ஒரு திட்டம் செயல்படுத்தப்படும்.

10 டோக்கன்கள்

இதன்படி, 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் குளிர் சாதன வசதி இல்லாத சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அனைத்து பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்.

இதற்கென மாதத்திற்கு 10 டோக்கன்கள் வழங்கப்படும். பேருந்து நடத்துனரிடம் இந்த டோக்கன்களை கொடுத்து கட்டணம் ஏதும் இல்லாமல் மூத்த குடிமக்கள் பயணம் செய்யலாம்.

இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள் அதற்குரிய படிவத்தில் தங்களது புகைப்படத்தினை இணைத்து அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம்.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை போக்குவரத்து துறையின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இணையதளத்தில் வெளியீடு

இந்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பஸ் டெப்போக்களிலும் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பஸ் டெப்போக்களில் கொடுத்து அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம்.

எந்தெந்த பஸ் டெப்போக்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் போக்குவரத்துத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பங்கள் கொடுப்பதற்கென கடைசி தேதி என்று எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. தேவைப்படுவோர் இதற்கான விண்ணப்பத்தை எப்போது வேண்டுமானாலும் அளிக்கலாம்.

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றம்

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் இந்த திட்டம் 24-2-2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த புதிய திட்டத்திற்கு பொதுமக்களிடையே உள்ள வரவேற்பைக் கண்டறிந்து மற்ற இடங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.

என்னுடைய இந்த அறிவிப்பின் மூலம் 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் எங்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளுக்கும் மேலாக பல்வேறு நலத் திட்டங்களையும் எனது தலைமையிலான அரசு செயல்படுத்தியுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்-அமைச்சர் அறிவிப்பு செய்து பேசி முடித்த உடன், இந்திய குடியரசு கட்சி உறுப்பினர் சே.கு.தமிழரசன், கொங்கு இளைஞர் பேரவை உறுப்பினர் தனியரசு, பார்வார்டு பிளாக் கட்சி உறுப்பினர் பி.வி.கதிரவன், உறுப்பினர் எர்ணாவூர் நாராயணன், புதிய தமிழகம் (அதிருப்தி) உறுப்பினர் ராமசாமி, மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாருல்லா, தே.மு.தி.க (அதிருப்தி) உறுப்பினர் மா.பா.பாண்டியராஜன், நியமன உறுப்பினர் நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் மற்றும் அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். 

Kodikkalpalayam - பாச்சோற்று பெருவிழா 2016

திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெறும் வருடாந்திர பாச்சோற்று பெருவிழா ஹிஜ்ரி 1437ம் ஜமாத்துல் அவ்வல் பிறை 9 வியாழன்  (18/02/2016)  பிற்பகல் 3 மணிக்கு ஜமாஅத் தலைவர் ஜலாலுதீன் தலைமையில் துவங்கியது .

இதில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து பாச் சோற்று மடக்கள்  பள்ளிவாசல் மகாசும் மஹாலில் நடைபெற பாத்திஹா வில் கலந்து கொண்டது .
இது மத நல் இணக்க பெரு விழாவாக பல நூர் ஆண்டுகளாக கொடிநகரில் நடைபெற்று வருகிறது

https://www.youtube.com/watch?v=JyZvhkIIpVI







 


Thursday 18 February 2016

வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம்


திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியலை  செம்மைப்படுத்துவது குறித்து அனைத்துக் கட்சிப்  பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கோட்டாட்சியர் முத்துமீனாட்சி தலைமை வகித்து பேசியது: இந்திய தேர்தல் ஆணைய  அறிவுரைப்படி வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி பிப். 15 முதல் 29 உம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள், ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண் கொண்டு ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் உள்ள பதிவுகளை நீக்கம் செய்வது ஆகிய பணிகள் நடைபெறுகிறது.
எனவே, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு, ஒத்துழைக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார் முத்துமீனாட்சி

Wednesday 17 February 2016

வரிகள் இல்லாத இடைக்கால பட்ஜெட்: வருவாய் பற்றாக்குறை ரூ.9154 கோடி

புதிய வரிகள், திட்டங்கள் இல்லாத இடைக்கால நிதிநிலை அறிக்கையை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதேசமயம், வரும் நிதியாண்டில் (2016-17) ரூ.9 ஆயிரத்து 154.78 கோடிக்கு வருவாய் பற்றாக்குறை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 கடந்த 5 நிதியாண்டுகளில்...அதிமுக அரசில் கடந்த 2011-12-ஆம் நிதியாண்டு முதல் 2015-16-ஆம் நிதியாண்டு வரை செயல்படுத்திய அனைத்துத் திட்டங்களையும் பட்டியலிட்டார், நிதி-பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். வரும் நிதியாண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு அவர் தாக்கல் செய்தார்.
 இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தின் வழக்கமான மரபைப் பின்பற்றி, எந்தப் புதிய அறிவிப்புகளையும் இந்த நிதிநிலை அறிக்கையில் அரசு மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்து அவர் தனது அறிக்கையை வாசிக்கத் தொடங்கினார்.
 வருவாய்ப் பற்றாக்குறைக்குக் காரணம்: வரும் 2016-2017-ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மொத்த வருவாய் வரவுகள் ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 4 கோடியே 23 லட்சம் ரூபாயாக இருக்கும் எனத் தெரிவித்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய் செலவுகள், ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்து 159 கோடியே 1 லட்சம் ரூபாயாக இருக்கும் என்றார். இதன் மூலம், வரும் நிதியாண்டில் ரூ.9 ஆயிரத்து 154.78 கோடி வருவாய்ப் பற்றாக்குறை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
 பசுமை வீடுகள் திட்டம், விலையில்லாத மின் விசிறிகள், மிக்ஸிகள், கிரைண்டர்கள், மடிக் கணினிகள் வழங்குதல் போன்ற பல முன்னோடித் திட்டங்களை தமிழகம் செயல்படுத்தி வருவதும் இதற்குக் காரணம் எனக் கூறிய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இத்தகைய சமூக பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தாத பல மாநிலங்களும் பெரும் வருவாய்ப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் கொண்டாடப்பட்டு வரும் மகாமகத் திருவிழாவை இந்த ஆண்டு நடத்திட ரூ.135.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
 இலங்கை பிரச்னை குறித்து... மேலும், இலங்கைப் பிரச்னையில் நீதியை நிலைநாட்டவும், பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை விரைவாக மறுகுடியமர்த்தவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு சர்வதேச அமைப்புகளின் உதவியோடு மேற்கொள்ள வேண்டுமென அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 அதிமுக அரசு பொறுப்பேற்றது முதல், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வரும் நிதியாண்டில் காவல் துறைக்கு மட்டும் ரூ.6 ஆயிரத்து 99 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
 தேசிய பேரிடர் நிவாரண நிதி: தமிழகத்தில் வெள்ள நிவாரணத்துக்காகவும், மறுசீரமைப்புப் பணிகளுக்காகவும் தேசிய பேரிடர் நிவாரண நிதியத்தில் இருந்து ரூ.1,773.78 கோடியை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்துக்கு வரும் நிதியாண்டில் வரவு-செலவுத் திட்டத்தில் ரூ.713 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 பொது விநியோகத் திட்டத்தில் உணவு மானியத்துக்காக ரூ.5,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சார வாரியத்துக்கு ரூ.13,819 கோடியும், போக்குவரத்துத் துறைக்கு ரூ.1,590 கோடியும் வரும் நிதியாண்டில் மானியமாக ஒதுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
 சிறப்புத் திட்டங்களின் செயலாக்கம் குறித்து பட்டியலிட்ட அவர், தமிழக அரசின் மடிக்கணினிகள் இதுவரை 31.78 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாத இறுதிக்குள் ரூ.7 ஆயிரத்து 755.73 கோடி செலவில் 1.76 கோடி எண்ணிக்கையில் மின்விசிறிகள், மிக்ஸிகள், கிரைண்டர்கள் கொடுக்கப்பட்டு விடும் என நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.
 ஏழாவது ஊதியக் குழு: 2017-18 ஆம் நிதியாண்டில் இருந்து ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கருதுவதாகத் தெரிவித்த அவர், அந்த ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை ஏற்படும் என கணிக்கப்படுவதாகக் கூறினார். இந்த கூடுதல் செலவினங்களைச் சமாளித்து நிதிப் பற்றாக்குறையை நிர்ணயிக்கப்பட்ட அளவிலேயே கட்டுப்படுத்த வேண்டுமெனில், மாநில அரசு கூடுதல் நிதி ஆதாரத்தைத் திரட்டுவது அல்லது செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
 கடன் அளவு: வரும் நிதியாண்டில் நிகர கடன் வாங்கும் அளவின் மதிப்பு ரூ.35,129 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், வரும் நிதியாண்டின் இறுதியில் (மார்ச் 2017) நிலுவையிலுள்ள கடன் ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 31 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். ஆனாலும், தமிழக பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அனைத்து வகையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் நலனுக்கு ரூ.2702 கோடி
 சென்னை, பிப்.16: ஆதிதிராவிடர் நலனுக்காக ரூ.2702.22 கோடி, பழங்குடியினர் நலனுக்காக ரூ.261.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
 சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:
 ஆதிதிராவிடர், பழங்குடியினர் உயர்கல்வி உதவித் தொகைக்காக 2016-2017-ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலையில் ரூ.1,430 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்கு ரூ.64.86 கோடி, மத்திய சிறப்பு உதவித் திட்டத்துக்காக ரூ.130 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 ஆதிதிராவிட மாணவர்கள் பயன்பெறும் வகையில் 1,314 விடுதிகளும், பழங்குடியின மாணவர்களுக்கு 42 விடுதிகளும், 302 பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. 
 கடந்த ஐந்து ஆண்டு அதிமுக ஆட்சியில் மட்டும் ரூ.142 கோடி செலவில், 198 தங்கும் விடுதிகளும், 55 பள்ளிக் கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன. இந்த மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கு ரூ. 103.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால நிதிநிலையில் ஆதிதிராவிடர் நலனுக்காக ரூ.2,702 கோடி, பழங்குடியினர் நலனுக்காக ரூ.261.66 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதிநிலை அறிக்கை: 2 மணி 17 நிமிஷங்கள் வாசித்த ஓ.பி.எஸ்.
 சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையை 2 மணிநேரம் 17 நிமிஷங்கள் வாசித்தார், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
 காலை 11.02 மணிக்கு நிதிநிலை அறிக்கையை அவர் வாசிக்கத் தொடங்கினார். பிற்பகல் 1.19 மணிக்கு அறிக்கையை அவர் வாசித்து முடித்தார். இந்த அறிக்கையை வாசித்து முடிக்கும் வரை, முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் எதிர்க்கட்சி வரிசையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக, மனிதநேய மக்கள் கட்சியினரும் இருந்தனர். 
பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்
 மகாமகம் திருவிழா சிறப்பாக நடத்த ரூ.135.38 கோடி 
 வரும் நிதியாண்டில் காவல் துறைக்கு ரூ.6,099.88 கோடி 
 மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்துக்கு ரூ.713 கோடி 
 உணவு மானியத்துக்கு ரூ.5,500 கோடி 
 மின் துறைக்கு மானியம் உள்பட ரூ.13,819.03 கோடி 
 போக்குவரத்துத் துறைக்கு ரூ.1,590 கோடி 
 சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ரூ.1,032.55 கோடி
 சத்துணவு திட்டத்துக்காக ரூ.1,645 கோடி 
 ஓய்வூதியம்-ஓய்வூதியப் பலன்களுக்கு ரூ.19,841 கோடி
வரவு-செலவு-ஒரு பார்வை...(ரூ.கோடியில்)
 வருவாய் வரவுகள் ரூ.1,52,004.23
 வருவாய் செலவு ரூ.1,61,159.01
 வருவாய் பற்றாக்குறை (-)9,154.78
 (வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை அளவானது, 
 இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிப்பது இதுவே முதல் முறை)
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை உடனடியாக செயல்படுத்த முதல்வர் உத்தரவு
 சென்னை, பிப்.16: அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை உடனடியாக செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று நிதியமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
 இது தொடர்பாக சட்டப்பேரவையில் அவர் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை ரூ.1,862 கோடியில் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை கடந்த 2011-ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. பில்லூர் அருகில் பவானி ஆற்றிலிருந்து 2,000 கன அடி வெள்ள உபரி நீரை எடுத்து கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள பொதுப்பணித்துறையின் 31 ஏரிகள், 40 ஊராட்சி ஒன்றிய குளங்கள், ஏனைய 538 நீர்நிலைகளில் நிரப்புவதற்கு இந்தத் திட்டம் வகை செய்கிறது.
 இதைத் தொடர்ந்து நிதியுதவி கோரி மத்திய அரசுக்கு இந்தத் திட்ட அறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் அன்று ஆட்சியிலிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல், குடிநீர் வழங்கல் திட்டமாக அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
 இதன்படி மத்திய அரசுக்கு திருத்திய திட்ட அறிக்கை உடனடியாக அனுப்பப்படும். அதே நேரத்தில் இந்தத் திட்டத்துக்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு ரூ.67,072 கோடி
 முதியோர் ஓய்வூதியம், விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு தமிழக இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.67,072 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 இந்தத் தொகை மொத்த நிதி ஒதுக்கீடான ரூ.1,98,683 கோடியில் 35.41 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
 உணவு மானியம் உள்ளிட்டவற்றுக்கு...இதே போன்று உணவு மானியம், மின்சார மானியம், நியாய விலைக் கடைகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்தல், கல்வி உதவித் தொகை போன்ற நலத் திட்டங்களுக்கு இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.62,382.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tuesday 16 February 2016

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு ரூ.1,774 கோடி ஒதுக்கீடு

 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண உதவி வழங்குவது தொடர்பான உயர்நிலைக் குழு கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது | படம்: பிடிஐ
மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண உதவி வழங்குவது தொடர்பான உயர்நிலைக் குழு கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது | படம்: பிடிஐ
தமிழகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக மத்திய அரசு ரூ.1,774 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண உதவி வழங்குவது தொடர்பான உயர்நிலைக் குழு கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் திங்களன்று நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, உள்துறை செயலாளர் ராஜீவ் மேஹ்ரிஷி மற்றும் உள்துறை, நிதி, வேளாண்மை அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். 

இதில் வெள்ளம், வறட்சியால் பாதிக்கப்பட்ட 7 மாநிலங்களுக்கு ரூ.4,087.27 கோடியை பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (என்டிஆர்எப்) வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. வெள்ளம், வறட்சியால் பாதிக்கப்படும் மாநிலங்கள், பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவி வழங்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும்.

இதையடுத்து, மத்திய குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி அறிக்கையை சமர்ப்பிப்பார்கள். அதை இந்த உயர்நிலைக் குழு ஆய்வு செய்து எவ்வளவு நிதியை ஒதுக்குவது என்பது குறித்து முடிவு செய்யும். இதன்படி, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழகத்துக்கு ரூ.1,773.78 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானுக்கு ரூ.1,177.59 கோடியும், ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு ரூ.336.94 கோடியும் வழங்க இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. 

அதேபோல், ஆந்திராவுக்கு ரூ.280.19 கோடியும், அசாமுக்கு ரூ.332.57 கோடியும், இமாச்சலப் பிரதேசத்துக்கு ரூ.170.19 கோடியும், நாகாலாந்துக்கு ரூ.16.02 கோடியும் வழங்க இக்குழு ஒப்புதல் வழங்கியது. 

இந்த ஆண்டு ஜார்க்கண்ட், ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட 10 மாநிலங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டன. இந்த மாநிலங்களில் பருவ மழை வழக்கத்தைவிட 14 சதவீதம் குறைவாக இருந்தது. 

மாறாக, தமிழகத்தில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடும் இழப்புகள் ஏற்பட்டது. 

வரும் ஏப்ரல், மே மாதங்களில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வெள்ள நிவாரணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Monday 15 February 2016

நமதூர் மௌத் அறிவிப்பு 15/02/2016

நமதூர் நடுத்தெரு கருத்துணி வீட்டு முஹம்மது ஆரிப் அவர்களின் தகப்பனாரும் யூசுப்தீன் மற்றும் பிஸ்மில்லாஹ் இவர்களின் மாமனாருமான
 M G ஹாஜா அலாவுதீன் அவர்கள் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னாரின் ஜனாஸா 16/02/2016 செவ்வாய் காலை 10 மணிக்கு நமது முஹ்யீத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

வேலைவாய்ப்பு முகாம்: 4,105 பேருக்கு பணி


திருவாரூர் அருகே சொரக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 4,105 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
சொரக்குடியில் வேலைவாய்ப்புத்துறை, தொழிலகப் பாதுகாப்பு சுகாதார இயக்கம், திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் பேசியது:
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்படுகிறது.
டெல்டா மாவட்டங்களில் படித்த இளைஞர்கள் மற்றும் மகளிர் பயன்பெறும் வகையில் முதல்வரின் உத்தரவின்படி திருவாரூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. 264 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான தகுதியுள்ளவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளன. முகாமில் பொறியியல் பட்டதாரிகள் 1,045, பட்டதாரிகள் 2,936, பட்டயப்படிப்பு படித்தவர்கள் 2,897, ஐடிஐ தொழிற்பயிற்சி பெற்றவர்கள் 2,532, பள்ளி இறுதி வகுப்பு முடித்தவர்கள் 9,710, எஸ்எஸ்எல்சி வகுப்புக்கு கீழ் படித்தவர்கள் 5,165 என மொத்தம் 24,285 பேருக்கு வேலையளிக்கத் தனியார் நிறுவனங்கள் முடிவெடுத்தன.
நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 57,315 பேர் பங்கேற்றனர். இதில் 19 மாற்றுத் திறனாளிகள் உள்பட 4,105 பேர் நேரடி நியமனம் பெற்றனர்.
மேலும், இதுதவிர திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக 3,446 பேர், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக 605 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றார் காமராஜ்.
ஊரக தொழில்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப. மோகன் பேசியது:
முதலமைச்சர் ஜெயலலிதா கல்விக்காக ரூ. 85,000 கோடி நிதி ஒதுக்கி செலவிட்டுள்ளார். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பல்வேறு மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்தி வருகிறார். திருவாரூரில் நடைபெற்ற 13 ஆவது வேலைவாய்ப்பு முகாமில் பல்லாயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 38 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு முகாமுக்கு வருபவர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் குறைந்தவர்களுக்காக திறன் மேம்பாட்டுக் கழகம் அமைத்து பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
கிராமப் பகுதிகளுக்குத்தான் அதிகமாக தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் 11 இடங்களில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை தொழிற்பேட்டை இல்லாததால், மாவட்டத்தில் தொழிற்பேட்டை அமைக்க உத்தரவிடப்பட்டு 27.55 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் மோகன்.
முகாமில் சிறப்பு மருத்துவ பிரிவு அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல், குடிநீர், உணவு பொருள்கள் விநியோகிக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன், தொழில்துறை, சுகாதாரத்துறை மண்டல இயக்குநர் போஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பதிவு செய்யப்பட்டது.

Sunday 14 February 2016

கடந்த ஆண்டில் 15,642 பேர் பலியான சோகம்: அச்சமூட்டும் சாலை விபத்துகள்.. அதிகரிக்கும் உயிரிழப்புகள்

கோப்புப் படங்கள்
கோப்புப் படங்கள்
தமிழகத்தில் கடந்த ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் மொத்தம் 15 ஆயிரத்து 642 பேர் உயிரிழந் துள்ளனர். 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 452 பேர் அதிகமாக இறந்துள்ளது தெரியவந்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நகரமயமாக்கல் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கி றது. அதற்கு ஏற்றவாறு சாலைகள் விரிவாக்கம், மேம்பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், மற்றொருபுறம் சாலை விபத்துகளால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நாடு முழுவதும் சாலை விபத்துகளில் சிக்குவோரை மீட்பது, சிகிச்சை அளிப்பது உள்ளிட்டவற்றுக்காக ஆண்டுக்கு ரூ.3.8 லட்சம் கோடி செலவிடப்படுகிறது.
இந்தியாவில் 4 நிமிடங்களுக்கு ஒருவர் சாலை விபத்தால் இறக்கிறார். தினமும் 16 குழந்தைகள் உயிரிழக்கின்றன. நாளொன்றுக்கு சராசரியாக 1,214 சாலை விபத்துகள் நடக்கின்றன. இதில் ஒவ்வொரு மணி நேரத்திலும் சுமார் 16 பேர் இறக்கின்றனர். இதில் 25 சதவீதம் பேர் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் என மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சாலை விபத்து உயிரிழப்பு பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 48 சதவீத விபத்துகளுக்கு ஓட்டுநர்களின் கவனக்குறைவே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை விதிமுறைகளை மீறுவது, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, அதிவேகத்துடன் செல்வது ஆகியவை முக்கியமாக காரணங்களாக இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டில் 69,059 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 15,642 பேர் இறந்துள்ளனர். இது, முந்தைய ஆண்டை (2014)விட 452 அதிகமாகும். இதுமட்டுமின்றி கடந்த ஆண்டில் 79,701 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதா வது: தமிழகத்தில் வாகனங் களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது. அதிகமாக சாலை விபத்துகள் நடக்கும் இடங் களை கண்டறிந்து சாலை விரிவாக் கம், புதிய சாலைகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
கட்டாய ஹெல்மெட்
ஹெல்மெட் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. ஆனாலும், மக்களிடம் மனமாற்றம் ஏற்படாமல் சாலை விபத்துகளை குறைக்க முடியாது. சாலை விதிகளை கட்டாயம் மதிக்க வேண்டும். மது குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுவது, செல்போன் பேசிக் கொண்டு ஓட்டுவதை தவிர்க்க மக்கள் உறுதி ஏற்க வேண்டும்.
வாகனங்களுக்கு வேகக்கட்டுப் பாடு கருவிகள் பொருத்துதல், ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மேலும், முறையாக பயிற்சி பெறுபவர்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்க நட வடிக்கை எடுத்து வருகிறோம். ஓட்டுநர் பயிற்சியை கணினி மூலம் கண்காணிக்க திட்டமிடப் பட்டுள்ளது. அதற்கேற்ற வகையில் 14 வட்டார போக்குவரத்து அலு வலகங்களில் ‘கம்ப்யூட்டர் டிராக்’ அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, அரசின் இதுபோன்ற திட்டங்கள் மூலம் சாலை விபத்துகள், உயிரிழப்புகள் குறையும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Saturday 13 February 2016

வேலைவாய்ப்பு முகாம் குறித்த ஆய்வுக்கூட்டம்


நன்னிலம் அருகே சொரக்குடியில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 14) நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாம் குறித்து திருவாரூரில் வெள்ளிக்கிழமை ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:
நன்னிலம் அருகே சொரக்குடியில் நடைபெறவுள்ள முகாமில் 329 வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று 24,285 பேருக்கு வேலையளிக்கவுள்ளது. 5 முதல் பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டயப் படிப்பு, பி.இ பட்டதாரிகள் பங்கேற்கலாம்.
பொறியியல் பட்டதாரிகள் 1,045 பேர், பட்டதாரிகள் 2,936 பேர், பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு 2,897 பேர், ஐடிஐ தொழிற்பயிற்சி பெற்றவர்கள் 2,532 பேர், பள்ளி இறுதி வகுப்பு முடித்தவர்கள் 9,710 பேர், எஸ்எஸ்எல்சிக்கு கீழ் படித்தவர்கள் 5,165 பேர் தேர்வு செய்யவுள்ளனர். தவிர திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான பதிவும் செய்யப்படுகிறது.
முகாமுக்கு வந்து செல்ல அனைத்து ஒன்றியங்களிலிருந்து பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பங்கேற்பாளர்கள் அசல் சான்றிதழ்கள் எடுத்து வர தேவையில்லை. கல்வி மற்றும் இதரச் சான்றிதழ்களின் 3 நகல்கள் எடுத்து வர வேண்டும். முகாமிடத்தில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. ஜெராக்ஸ் எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளன என்றார்.

Friday 12 February 2016

திருவாரூர் அரசு மருத்துவமனையில் நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி


திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.4.5 லட்சம் மதிப்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ள நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவியின் பயன்பாட்டை கல்லூரியின் முதல்வர் அழ.மீனாட்சிசுந்தரம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
கருவியை இயக்கி வைத்து அவர் பேசியது:
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சராசரியாக 800 உள்நோயாளிகளும், 1,200 வெளிநோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் 30 கதிர்வீச்சு திறன் கொண்ட 2 நடமாடும் எக்ஸ்ரே கருவி, 60 கதிர் வீச்சு திறன் கொண்ட ஒரு நடமாடும் எக்ஸ்ரே கருவி ஆகியன உள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், மேலும் பல சிக்கலான நோய்களை கண்டுபிடிக்க எக்ஸ்ரே கருவி தேவைப்பட்டதால் 100 கதிர்வீச்சு திறன் கொண்ட நவீன எக்ஸ்ரே கருவி வாங்கப்பட்டு வியாழக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சாதாரணமாக நடமாடும் எக்ஸ்ரே கருவி 60 கதிர்வீச்சு திறனுக்கு குறைவாகவே இருக்கும். இதன் மூலம் நெஞ்சுப்பகுதி, கை கால் எலும்பு பகுதிகளை மட்டுமே படம் எடுக்க இயலும்.  அத்துடன் எக்ஸ்ரே படத்தை இருட்டறையில் டெவலப் செய்யும்போது சில தவறுகள் நடைபெறவும் வாய்ப்பு உண்டு. முதுகெலும்பு, இடுப்பெலும்புகளை எக்ஸ்ரே படம் எடுக்க இயலாது.
புதிய கருவி முதுகெலும்பு, இடுப்பெலும்பு ஆகியவற்றை துல்லியமாக படம் எடுக்கக்கூடியது. மருத்துவமனையில் 300 கதிர்வீச்சு திறன் கொண்ட 2 எக்ஸ்ரே கருவியும், 600 கதிர்வீச்சு திறன் கொண்ட 1 டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியும், 100 கதிர்வீச்சு திறன் கொண்ட 2 கருவி களும், அல்ட்ரா சவுண்டு, 3 கருவிகளும், அல்ட்ரா சவுண்டு டாப்ளார் கருவிகளும், சிடி ஸ்கேன், 1 கருவியும் உள்ளன.
விரைவில் இருட்டறையில் எக்ஸ்ரே டெவலப் செய்யாமல் வெளிச்சம் இருக்கும் பகுதியில் கூட டெவலப் செய்யும் வகையிலான அதிநவீன கம்ப்யூட்டர் வசதி கொண்ட டெவலப்பிங் கருவி வாங்கப்படவுள்ளது என்றார் மீனாட்சிசுந்தரம்.

வேதாரண்யம் கூட்டு குடிநீர் பிப்.16, 17-இல் விநியோகம் இருக்காது

திருவாரூர் மாவட்டத்தில் பிப்.16,17 தேதிகளில் வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் இரா. வசந்தகுமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேதாரண்யம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் பிப்.16, 17 ஆகிய தேதிகளில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் நகராட்சி பகுதி, முத்துப்பேட்டை, தலைஞாயிறு பேரூராட்சி, வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி மற்றும் வேதாரண்யம் ஒன்றிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்பதால் உள்ளாட்சி நிர்வாகம் மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

Thursday 11 February 2016

சேவை மையங்களுக்கு வரும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்'


சேவை மையங்களுக்கு சான்றிதழ் பெற வரும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் கூறினார்.
திருவாரூரில் புதன்கிழமை மின் ஆளுமை திட்டத்தின் கீழ் புதிய ஒருங்கிணைந்த சேவைகள் குறித்த பயிற்சியை தொடங்கி வைத்து ஆட்சியர் பேசியது:
திருவாரூர் மாவட்டத்துக்குள்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், புதுவாழ்வு திட்டம், அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆகிய பொது சேவை மையங்களில் புதிய சேவைகளாக பிறப்பு, இறப்புச் சான்றிதழ், காவல்துறை ஆன்லைன் புகார், திருமணப் பதிவு, போக்குவரத்துத்துறை, குடிமைப் பொருள், தமிழ்நாடு தொழில்துறை, ஜிடிபி ஆகிய சேவைகள் வழங்கப்படுகிறது.
இந்த சேவைகளைச் சிறப்பாக மேற்கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியை பெற்று சேவை பெற வரும் பொதுமக்களுக்கு அவர்கள் கேட்கும் சான்றிதழ்களைப் பெற்றுத் தர வேண்டும். சேவை மையங்களால் பொதுமக்கள் சான்றிதழ் பெறுவதில் பெருமளவு காலநேர விரயம் குறைக்கப்படுகிறது.
சேவை மையங்களுக்கு வரும் பொதுமக்களிடம் கணினி உள்ளீடு செய்பவர்கள் மிகவும் கணிவுடன் நடந்துகொண்டு அவர்களிடம் சரியான தகவல்களைப் பெற்று கணினியில் உள்ளீடு செய்ய வேண்டும் என்றார் மதிவாணன்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், மாவட்ட தகவலியல் அலுவலர் புகழேந்தி, உதவி தகவலியல் அலுவலர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Wednesday 10 February 2016

தொழில் கலாச்சாரம்: சோழ மன்னர் வென்ற நாட்டில் தொழில் வாய்ப்புகள்

சில அந்நிய நாடுகளை நாம் வெளி நாடுகள் என்றே நினைக்கமாட்டோம். நம் மண்ணாக, அந்தக் குடிமக்களை நம் சகோதர சகோதரிகளாகக் கருது வோம். தலைமுறைகள் தலைமுறைகளாக இரு தேசங்களுக்கும் இருக்கும் பந்தங்கள் காரணம். மலேசியா அப்படிப்பட்ட சகோதர தேசம்.
பூகோள அமைப்பு
தென்கிழக்கு ஆசிய நாடு. கிழக்கு மலேசியா, மேற்கு மலேசியா என்னும் இரு பிரிவுகள். கிழக்கு மலேசியா, போர்னியோ தீவில் இருக்கும் சபா மற்றும் சரவாக் மாநிலங்களைக் குறிக்கும். மேற்கு மலேசியாவைத் தீபகற்ப மலேசியா என்றும் அழைப்பார்கள். கிழக்கு, மேற்கு மலேசியாக்களைத் தென்சீனக் கடல் பிரிக்கிறது. அண்டைய நாடுகள் தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், புரூணை.
நிலப்பரப்பு 3,29,847 சதுரக் கிலோமீட்டர்கள். 62 சதவீதம் காடுகள். பல காட்டுப்பகுதிகள் பாமாயில் தயாரிப்புக்கான பனைகள் வளர்க்கும் தோட்டங்களாக உருமாறி வருகின்றன. பெட்ரோலியம், தகரம், செம்பு, பாக்சைட், இரும்பு, ரப்பர், மரங்கள், பனை ஆகியவை முக்கிய இயற்கைச் செல்வங்கள்.
தலைநகரம் கோலாலம்பூர். அரசின் நிர்வாக மையம் புத்ராஜெயா என்னும் இடத்தில் இருக்கிறது.
சுருக்க வரலாறு
சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நாகரிக வளர்ச்சி இருந் ததாக அகழ்வாராய்ச்சிகள் கூறுகின்றன. சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளிலிருந்து வந்தவர்களாக இருக்கவேண்டும் என்று கணிக்கப்படுகிறது.
கி.மு. முதல் நூற்றாண்டின் முதற் பகுதியில் இந்தியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் வந்த வணிகர்களும், பிறரும் வந்து குடியேறத் தொடங்கினார்கள். பிற்பகுதியில் விஜயப் பேரரசு என்னும் மலேயப் பேரரசின் ஆட்சி வந்தது. 11 ஆம் நூற்றாண்டில் தமிழகத்து ராஜேந்திரச் சோழர் மலாயாவிலிருந்த கடாரம் என்னும் இடத்தைப் போரில் வென்றதற்கான ஆதாரங்கள் உள்ளன.
பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலிருந்து, பல்வேறு உள்ளூர்ச் சுல்தான்கள் ஆட்சி செய்தார்கள். விஜயப் பேரரசின் இளவரசரான பரமேஸ்வரன் மலாய்த் தீபகற்பத்தின் முதல் சுதந்திர ராஜ்ஜியமாகக் கருதப்படும் மலாக்கா சுல்தானியம் நிறுவினார். இவர் முஸ்லிமாக மதம் மாறினார். நாட்டிலும் இஸ்லாமியம் வேகமாகப் பரவியது.
15 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் ஆக்கிரமிப்பு தொடங்கியது. 1511 இல், மலாக்கா பகுதி போர்த்துக்கீசியர் வசமானது. 1641 இல், டச்சுக்காரர்களிடமும், 1786 இல், பிரிட்டிஷாரிடமும் கை மாறியது. 1826 இல் பிரிட்டிஷ் காலனியானது.
1943 முதல் 1945 வரை ஜப்பானால் பிடிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிந்தபின், மறுபடியும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தது. விடுதலைப் போராட்டங்கள் ஆரம்பித்தன. 1957 இல் விடுதலை பெற்றது. 1963 இல், சிங்கப்பூருடன் இணைந்த மலேசியக் குடியரசானது. ஆனால், 1965 இல், சிங்கப்பூர் உறவு மனக்கசப்போடு முறிந்தது.
மக்கள் தொகை
3 கோடி 5 லட்சம். 61 சதவீதம் இஸ்லாமியர்கள். புத்த மதத்தினர் 20 சதவீதம், கிறிஸ்தவர்கள் 9 சதவீதம், இந்துக்கள் 6 சதவீதம். எஞ்சிய 4 சதவீத மக்கள் பல மதங்களையும் சார்ந்துள்ளனர். அரசியல் சட்டப்படி, மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு. ஆட்சி மொழி மலாய் மொழி. கல்வியறிவு 94.6 சதவீதம். ஆண்கள் 96.2 சதவீதம், பெண்கள் 93.2 சதவீதம்.
ஆட்சிமுறை
மலேசியா 13 மாநிலங்களும், 3 கூட்டாட்சிப் பகுதிகளும் கொண்டது. இவை இரண்டு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மலேசியாவில் இரண்டு மாநிலங்களும், ஒரு கூட்டாட்சிப் பகுதியும் உள்ளன. மேற்கு மலேசியாவில் பதினொரு மாநிலங்களும், இரண்டு கூட்டாட்சிப் பகுதிகளும் உள்ளன. இவற்றுள் ஒன்பது மாநிலங்கள் மலாய் மாநிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன, பரம் பரை ஆட்சியாளர்களால் ஆளப்படுகின்றன. இந்த ஒன்பது ஆட்சியாளர்களும், தமக்குள் ஒருவரை, மலேசியா ஆளும் அரசராக ஐந்தாண்டுப் பதவிக்காலத்துக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் பொது மக்கள் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்கள் கொண்ட அசெம்பிளி உண்டு.
பாராளுமன்றத்தில் இரண்டு சபைகள். மேல்சபை அங்கத்தினர்கள் 5 ஆண்டுப் பதவிக்காலத்துக்கு நியமிக்கப்படுகிறார்கள். கீழ்சபை உறுப்பினர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக் கப்படுகிறார்கள். நிர்வாகத் தலைவர் பிரதமர். 21 வயது நிரம்பிய ஆண்களுக் கும், பெண்களுக்கும் வாக்குரிமை உண்டு. மாநிலங்களில் அசெம்பிளி உறுப்பினர்கள் மக்கள் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆட்சி நடத்துபவர் முதல் அமைச்சர்.
பொருளாதாரம்
பொருளாதாரத்தில் சேவைத்துறையின் பங்கு 56 சதவீதம். இஸ்லாமிய நிதி மையமாக இருத்தல், வெளிநாட்டினருக்கான மருத்துவச் சிகிச்சை வசதிகள், சுற்றுலா ஆகியவை சேவைத் துறையின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. தொழில் துறையின் பங்கு 35 சதவீதம். 1970 களுக்குப் பின் பல்வேறு தொழில் துறைகளில் பிரமிக்கத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பெட்ரோலியம், ரப்பர், கார்கள், மருந்துகள், எலெக்ட்ரானிக் கருவிகள், மரச் சாமான்கள், பாமாயில், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவை முக்கிய தொழில்கள். விவசாயம் பொருளாதாரத்தில் 9 சதவீதப் பங்கு வகிக்கிறது.
நாணயம்
ரிங்கிட். 14 ரூபாய் 35 காசுகளுக்கு சமம்.
இந்தியாவோடு வியாபாரம்
மலேசியாவுக்கு நம் ஏற்றுமதி ரூ.35,630 கோடிகள். இவற்றுள் முக்கியமானவை இறைச்சி, உணவு வகைகள். நம் இறக்குமதி ரூ.68,020 கோடிகள். பாமாயில், பெட்ரோலியம், எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக் கருவிகள், ரசாயனம் போன்றவை இதில் முக்கியமானவை. டிசிஎஸ், ரிலையன்ஸ் ஆகிய இந்திய நிறுவனங்களுக்கு மலேசியாவில் கிளைகள் இருக்கின்றன. குறிப்பாக டிசிஎஸ் இல் சுமார் 1,500 பேர் பணிபுரிகிறார்கள். வணிகம், இருதரப்பு முதலீடு ஆகிய இரண்டிலும் பெரும் வளர்ச்சி காணும் வாய்ப்புக்கள் இருக்கின்றன.
பயணம்
மொத்தத்தில் நம்முடையதுபோல் வெப்ப நாடு. ஆனால், வெவ்வேறு பகுதிகளில் வேறுபட்ட மாதங்களில் மழை பெய்யும். இதேபோல், விடுமுறை நாட்களும் இடத்துக்கு இடம் மாறும். இவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, விசிட் காலத்தை முடிவு செய்யுங்கள்.
பிசினஸ் டிப்ஸ்
நேரம் தவறாமை மிக முக்கியம். பெரும்பாலான பிசினஸ்மேன்கள் சீனர்கள். வக்கீல்கள், ஆடிட்டர்கள் போன்றோர் இந்தியர்கள். இவர்கள் இருபாலரும் சரியான நேரத்துக்கு வருவார்கள். பெரும்பாலான அரசு அதிகாரிகள் மலாய்கள். இவர்கள் தாமதமாக வருவதுண்டு. நாம் குறிப்பிட்ட நேரத்துக்குப் போய்விடவேண்டும். சந்திப்பு நேரத்தை முன் கூட்டியே உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம்.
விசிட்டிங் கார்டுகள் அவசியம். இதில் பதவியைக் குறிப்பிடுவது நல்லது.
பெரும்பாலான பிசினஸ்மேன்களுக்கு ஆங்கிலம் தெரியும். ஆனால், சீன பிசினஸ்மேன்களைச் சந்திப்பதாக இருந்தால், கார்டுகள் ஒருபுறம் ஆங்கிலத்திலும், மறுபுறம் சீன மொழியிலும் இருப்பது நல்லது. இரண்டு கைகளாலும் கார்டைப் பிடித்துக்கொண்டு, வலது கையால் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகத் தரவேண்டும். இரண்டு கைகளாலும் வாங்கி, படித்துப் பார்த்துவிட்டுப் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும். பான்ட் பின்புறப் பாக்கெட்டில் வைப்பது அவமரியாதை.
கை குலுக்கல், கை கூப்பி வணக்கம் சொல்வது ஆகியவை சாதாரண வரவேற்பு முறை. எப்போதும், முஸ்லிம் கலாச்சாரம் கொண்டவர்களோடு பழகுகிறோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
மன்னராட்சியை விமர்சிப்பது, பெண்கள் பற்றிப் பேசுவது ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
உடைகள்
நம் ஊர் போலவே, பான்ட், சட்டை போதும்.
பரிசுகள் தருதல்
லஞ்சம் குற்றம். ஆகவே, விலை உயர்ந்த பரிசுகள் தரவே கூடாது. சாக்லெட், பிஸ்கெட்கள் ஆகிய பரிசுகள் தரலாம். வெள்ளை நிறம் சோக நிகழ்ச்சிகளோடு தொடர்பு கொண்டதாகக் கருதப்படுகிறது. ஆகவே, பரிசுகளும், பேக்கிங் பேப்பரும் வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடாது.

இஸ்லாமிய இளைஞர்கள் கைதில் வெளிப்படைத்தன்மை: பிரதமரிடம் வலியுறுத்தல்


இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் ஜாமா மஸ்ஜித் இமாம் வலியுறுத்தினார்.
 பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜமா மஸ்ஜித் இமாம் சையது அகமது புகாரி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் சுமார் அரை மணிநேரம் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் பலர் கைது செய்யப்படுவதை பிரதமரிடம் எடுத்துக் கூறினேன். சந்தேகத்தின் அடிப்படையில் மட்டும் இஸ்லாமிய மதத்தினர் குறிவைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
 பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு இஸ்லாமியர்கள் கைது செய்யப்படும் போது, போலீஸார் உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்பினர் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த வெளிப்படைத்தன்மையை பிரதமர் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டேன் என்றார் சையது அகமது புகாரி.

பாரபட்சக் கட்டண தடையை மீறினால் அபராதத்தைத் தாண்டியும் நடவடிக்கை: டிராய் எச்சரிக்கை

இணையதளம் பயன்படுத்துவதில் பாரபட்சமான கட்டண அடிப்படையில் சேவை வழங்குவதை தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தடை செய்த விவகாரத்தில் விதிமுறைகளை மீறினால் அபராதத்தைத் தாண்டியும் கடும் நடவடிக்கை பாயும் என்று தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எச்சரித்துள்ளது. 

அதாவது ஏற்கெனவே இருக்கும் விதிமுறைகள் நிறுவனங்களின் மீறல்களை கட்டுப்படுத்தவில்லை எனில் டெலிகாம் சேவை நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து டிராய் சேர்மன் ஆர்.எஸ். சர்மா பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “அதாவது விதிமுறைகளை மீறி பாரபட்ச கட்டணம் வசூலித்து விட்டு அபராதம் கட்டிவிட்டு மீண்டும் தொடர்வது என்ற நடைமுறைக்கே இடமில்லை. 

விதியை மீறுதலுக்கு எதிரான விதிமுறைகளும் உள்ளன. அதாவது விதிமுறையை மீறினால் விதிமுறையின் பிற பிரிவுகள் உள்ளன. அதாவது பொதுவாக டிராய் விதிகளை மீறினால் அதற்கான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதாவது விதிமீறல் செய்யப்பட்டால், மொத்தமாக விதிமீறலுக்கான பிரிவுகள் உள்ளன. இதனால் அதன் படி நடவடிக்கை பாயும்” என்றார்.

இப்போதைக்கு பாரபட்ச கட்டணத்துக்கு எதிரான உத்தரவை மீறினால் தொலைதொடர்பு சேவை நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும், இதற்குப் பிறகும் விதிமீறினால் அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. 

தொலைத் தொடர்பு ஆணைய சேர்மன் மேலும் கூறும் போது, “அதாவது விதிமீறல் செய்து விட்டு அபராதம் கட்டிவிட்டு பிறகு தொடரலாம் என்பது முடியாது, கட்டணத் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு அதனை டிராய்யிடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்தக் கட்டணங்கள் விதிக்கு புறம்பாக உள்ளதா என்று டிராய் ஆய்வு செய்யும். அதன் பிறகு அபராதம் விதிக்கப்படும்” என்றார்.

அதாவது டெலிகாம் சேவை நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க்கை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேறு வேறு காலக்கட்டங்களில் வேறு வேறு கட்டணங்களை வசூலிக்கலாம் ஆனால் இணையத்தை பயன்படுத்தும் போது அதன் உள்ளடக்கம் அடிப்படையில் அமைந்த பாரபட்சமாக கட்டணங்களை நிர்ணயிக்க முடியாது. 

இதனை விளக்கிய ஆர்.எஸ்.சர்மா, “நான் கூறுவது துல்லியமான ஒப்பீடாக இருக்க முடியாது, இருந்தாலும் விளக்க முயற்சி செய்கிறேன், நீங்கள் ஹைவேஸில் செல்கிறீர்கள், அப்போது சுங்கச் சாவடிகள் அதற்கான கட்டணத்தைதான் வசூலிக்க வேண்டுமே தவிர, நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டு அதற்காக கட்டணம் வசூலிக்க முடியாது. இதைத்தான் இணையத்தைப் பயன்படுத்தி அண்மிக்கப்படும் உள்ளடக்கங்களுக்காக வேறு வேறு கட்டணங்களை வசூலிக்க கூடாது என்கிறோம். 

இணையச் சமவாய்ப்பு என்பது எங்கள் புரிதலின் அடிப்படையில் பல்வேறு கூறுகளைக் கொண்டது. அவை வெறும் கட்டணம் தொடர்பானது மட்டுமல்ல. நாங்கள் இணையச் சமவாய்ப்பு என்பதை கட்டணத்தின் பார்வையிலிருந்து தான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளோம். இது மட்டுமே டிராய்யின் கீழ் உள்ளது, பிற பிரிவுகள் டிராய்யின் கீழ் வராது” என்றார்.

பாரபட்ச கட்டணத்துக்கு டிராய் விதித்த தடையினால் ஃபேஸ்புக் நிறுவனம் முன்வைத்த பிரிபேஸிக்ஸ் திட்டம் மற்றும் ஏர்டெல் நிறுவனம் முன்வைத்த ஏர்டெல் ஜீரோ திட்டங்களுக்கு பலமான பின்னடைவு ஏற்பட்டுள்ளது.