Thursday 30 June 2016

ஜூலை 1-இல் 8 இடங்களில் அம்மா திட்ட முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் ஜூலை 1-ஆம் தேதி 8 வருவாய்க் கிராமங்களில் "அம்மா' திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அனைத்துக் கிராமங்களிலும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை "அம்மா' திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளன. முகாம்களில் மக்கள் அளிக்கும் பட்டா மாறுதல்கள் (உட்பிரிவு இல்லாத இனங்கள்), சிட்டா நகல்கள், குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ்கள் உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் மீதும், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவிகள் பெற சமர்பிக்கப்படும் மனுக்கள், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், துயர்துடைப்பு மற்றும் விபத்து நிவாரணம் கோரும் மனுக்கள் மீதான அறிக்கை,  ஒரே நாளில் தீர்வு காணக்கூடிய இதர மனுக்கள் மீதும் அன்றைய தினமே பரிசீலிக்கப்பட்டு உரிய ஆணைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உடனடியாக முடிவு செய்ய இயலாத விண்ணப்பங்களுக்கு 30 நாள்களுக்குள் முடிவான பதில் சம்மந்தப்பட்ட மனுதாரருக்குத் தெரிவிக்கப்படும். நிலுவை மனுக்கள் குறித்து உயர் அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஜூலை 1-இல் திருவாரூர் வட்டம் நடப்பூரில், குடவாசல் வட்டம் வயலுரில், வலங்கைமான் வட்டம் ஆலங்குடியில் , நீடாமங்கலம் வட்டம் மாறங்குடி, மன்னார்குடி வட்டம்  பருத்திக் கோட்டை, திருத்துறைப்பூண்டி வட்டம் பனையூர், திருப்பத்தூர், நன்னிலம் வட்டம்  நன்னிலம் ஆகிய 8 கிராமங்களில் "அம்மா' திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளன.
இந்த முகாம்களில் சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று பயன்பெறுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Wednesday 29 June 2016

மருத்துவப் படிப்புக்கு நிதியுதவி கோரி முதல்வருக்கு மனு

மாற்றுத்திறனாளி மகளுக்கு மருத்துவப்படிப்பு பயில நிதி உதவு செய்யுமாறு மாணவியின் தாய் தமிழக முதல்வருக்குக் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
நீடாமங்கலம் வட்டம், முல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் பக்கிரிசாமியின் மனைவி ப.பூமயில். விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது 2-ஆவது மகள் கயல்விழி (17). இவர் பிளஸ் 2 தேர்வில் 904 மதிப்பெண் பெற்றுள்ளார்.  எலும்புத்தேய்மானம் தொடர்பான மாற்றுத்திறனாளியான இவருக்கு கடந்த கடந்த 20ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் தகுதியின் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் திருவாரூர் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். இவரது குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பதால், மகளின் கல்விச் செலவுக்கு உதவிடுமாறு தாய் பூமயில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:  நான் கணவரை இழந்தவர். எனக்கு 3 பெண் குழந்தைகள் உள்பட ஐந்து குழந்தைகள் உள்ளனர். 2 பெண் குழந்தைகள் மாற்றுத்திறனாளிகள். அதில் எனது இளைய மகள் கயல்விழிக்கு (17) திருவாரூர் மாவட்ட மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பயில சேர்ந்துள்ளார். கணவரை இழந்த நான் தற்போது கஷ்டமான சூழ்நிலையில் விவசாயக் கூலி வேலை செய்து குறைந்த வருவாயில் எனது குழந்தைகளைக் காப்பாற்றி வருகிறேன். எனவே, எனது மகளின் மருத்துவப் படிப்புக்கான நிதி உதவியை வழங்கி உதவுமாறு தெரிவித்துள்ளார்.

Tuesday 28 June 2016

மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் ரூ. 2.52 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 329 பேர் மனு அளித்தனர்.
அப்போது, மன்னார்குடி வட்டம், மகாதேவப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வரி வடகிழக்குப் பருவமழை காரணமாக 3.12.2015 அன்று வீட்டின் மேற்கூறை இடிந்து விழுந்து இறந்தமையால் வாரிசுதாரரான சரோஜா என்பவருக்கு பாரத பிரதமர் நிவாரண நிதியின் கீழ் ரூ.2 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
மேலும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளான 5 பேருக்கு தலா ரூ. 6,000 மதிப்பிலான காது கேட்கும் கருவியும், 2 பேருக்கு தலா ரூ.6,000 மதிப்பிலான மனவளர்ச்சி குன்றியோருக்கான உதவி கருவிகளும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருவருக்கு ரூ.5,000 மதிப்பிலான மூன்று சக்கர வண்டியும், ஒருவருக்கு ரூ.1,500 மதிப்பிலான ஊன்றுகோல், காது கேட்கும் கருவி, ஒருவருக்கு ரூ.500 மதிப்பிலான ஊன்றுகோல் கருவி என மொத்தம் ரூ. 2.52 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், தனித் துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) விஜயலெட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Monday 27 June 2016

"விளையாட்டுப் போட்டி: தமிழகம் 5-ஆம் இடத்துக்கு முன்னேற்றம்'

தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் 12-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்றார் ஓய்வுபெற்ற மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கலைச்செல்வன்.
 திருவாரூர் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம் சார்பில் ஓய்வுபெற்ற மாநில முதன்மை உடற் கல்வி ஆய்வாளர் கலைச்செல்வனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் கலைச்செல்வன் பேசியது:
 அனைத்துப் பள்ளிகளும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டும். வெற்றி தோல்விகள் முக்கியமல்ல. போட்டிகளில் பங்கேற்க வேண்டும் இல்லையெனில் வரும் காலங்களில் விளையாட்டுத் துறையில் பின்தங்கிவிடும் நிலை ஏற்படும். இந்நிலை
விளையாட்டுத் துறையில் இருக்கக் கூடாது. இதில் உடற்கல்வி ஆசிரியரின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்க வேண்டும்.
 எஸ்ஜிஎப்ஜ போட்டிகளில் கிராமத்து வீரர்கள்கூட தேசிய அளவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உடற்கல்வி ஆசிரியர்கள் பாடத் திட்டப்படி பாடக் குறிப்பேடு எழுதி பாடத்தை நடத்த வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு நம்மைப் பற்றி தெரியும். மற்றவர்கள் மதிப்பது நம் கையில்தான் உள்ளது.
 நம்முடைய நடவடிக்கைகள், செயல்பாடுகளை வைத்துத்தான் மற்றவர்கள் நம்மை மதிப்பீடு செய்வார்கள். முழுமையாக கடமையை செய்யுங்கள். 5 ஆண்டுக்கு முன்னாள் உடற் கல்வியை ஓரம் கட்டும் நிலை வந்தது. தமிழக அரசு ரூ.10 கோடி ஒதுக்கி புத்துயிர்   ஊட்டியது.  தேசியப் போட்டிகளை நாமே நடத்துகிறோம். யாராலும் முடியாது என்பதே இல்லை.
 தேசியப் பேட்டிகளில் 12-வது இடத்தில் இருந்த நாம் 5-ஆவது இடத்துக்கு வந்துள்ளோம். தேசிய அளவில் தடகளப் போட்டியில் பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் இப்போது தான் நாம் 2-ஆம் இடத்தில் இருக்கிறோம் என்றார் கலைச்செல்வன்.  மாவட்டத் தலைவர் பாலன் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்டச் செயலர் சந்திரமோகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கஸ்தூரிபாய் (பொ), மாவட்ட கல்வி அலுவலர் சரோஜா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் மற்றும் தஞ்சை , நாகை, அரியலூர், நாமக்கல் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள், திருவாரூர்  மாவட் டத்திலுள்ள உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.  நிகழ்ச்சியில், திருவாரூர் அருகே திருநெய்பேர் அரசு மேல்நிலைப்பள்ளி கால்பந்து வீராங்கனை பவித்ரா 14 வயதுக்குள்பட்டோர்  பிரிவில் இந்திய அணியில் விளையாடியதற்காக பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

Sunday 26 June 2016

தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால், தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 93.2 டிகிரி பாரன்ஹீட் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 78.8 டிகிரி பாரன்ஹீட் ஆகவும் இருக்கும்.
நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக மதுரையில் 97.52 டிகிரி பாரன்ஹீட், திருச்சியில் 95.54 டிகிரி பாரன்ஹீட், அதிராமபட்டினத்தில் 94.1 டிகிரி பாரன்ஹீட், கரூரில் 93.56 டிகிரி பாரன்ஹீட், சென்னையில் 87.08 டிகிரி பாரன் ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மழையை பொறுத்தவரை, அதிகபட்ச மாக வால்பாறையில் 18 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Saturday 25 June 2016

திருவாரூர் மாவட்டத்தில் 1000 ஹெக்டேரில் தோட்டக்கலை பயிர் சாகுபடி: ஆட்சியர் தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தோட்டப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன என ஆட்சியர் எம்.மதிவாணம் தெரிவித்தார்.
 மன்னார்குடி பகுதியில் தோட்டக்கலை மூலம் உயர்தொழில்நுட்ப முறையில் தோட்டக்கலை பயிர்கள் பயிர் செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் எம்.மதிவாணன் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 மேலநாகை கிராமத்தில் விவசாயி ராஜேந்திரன் தோட்டத்தில் மூன்று ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசன முறையில் பயிர் செய்துள்ள பாகற்காய்,  புடலங்காய், கத்தரிக்காய் ஆகிய தோட்டக்கலை பயிர்களையும், கீழநாகை கிராமத்தில் விவசாயி முகமதுசுபையர் இரண்டு ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம் கீழ் அடர் நடவு கொய்யா சாகுபடியையும், மாங்கனி சாகுபடியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 பின்னர் விவசாயிகளிடம் சாகுபடி, வணிக ரீதியான விற்பனைகள் குறித்த விவரங்களைக்  கேட்டறிந்த பின் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தது:
  திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தோட்டப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதில் 400 ஹெக்டேரில் பழ வகைகளும், 400 ஹெக்டேரில் காய்கறி, கீரை வகைகளும், 20 ஹெக்டேரில் மலர் வகைகளும், 20 ஹெக்டேரில் மிளகாய் வகைகளும், 160 ஹெக்டேரில் முள்ளில்லா மூங்கில். சவுக்கு என மர வகைகளும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
 தோட்டக்கலை மூலம் விவசாயிகள் பயன் அடைய மத்திய, மாநில அரசுகளில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல்  ஆகிய வட்டங்களில் இத்திட்டம் அதிக அளவில் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சாகுபடி செய்யப்படுபவையை சந்தைப்படுத்தி நல்லமுறையில் விற்பனை செய்யவும் துறைவாரியான ஆலோசனை வழங்கப்படுகிறது. சொட்டுநீர் பாசனம், நுண்ணீர் பாசனம் மூலம் தண்ணீரை சிக்கனப்படுத்தி சேமிக்க முடியும் என்றார்.
 ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் மயில்வாகனன், தோட்டக்கலை துணை இயக்குநர் சுரேஷ்குமார், மாவட்ட வளர்ச்சி மேலாளர்(நபார்டு) ரவிசங்கர், மன்னார்குடி வட்ட துணை தோட்டக்கலை அலுவலர் முகமதுசாதிக் ஆகியோர் உடனிருந்தனர்.

Friday 24 June 2016

ஜூன் 30-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவாரூரில் ஜூன் 30-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 30-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில் நடைபெறவுள்ளது.
 இதில் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தவறாமல் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Thursday 23 June 2016

திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கியது

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2016-17-ஆம் கல்வியாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை புதன்கிழமை தொடங்கியது.
 திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 மாணவர்கள் படிக்க இந்திய மருத்துவக் கழகத்தின் அங்கீகாரம் 2020-ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டுள்ளது.  அதில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் படியும், 85 இடங்கள் மாநில கலந்தாய்வின் மூலமும் நிரப்பப்படுகிறது.
 சென்னையில் நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் அவர்களது விருப்பப்படி கல்லூரிகளைத் தேர்வு செய்து திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை புதன்கிழமை தொடங்கியது.
 இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் கூறியது:
 கலந்தாய்வு நடைபெற்றதில் முதல் கட்டமாக திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் திருச்சியை சேர்ந்த சரவணன் மகன் மணிசங்கர், நீடாமங்கலம் முல்லைவாசலைச் சேர்ந்த  பக்கிரிசாமி மகள் கயல்விழி, வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த வில்வநாதன் மகள் பிரியங்கா ஆகிய மூன்று மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்கள் மூவரும் மாற்றுத் திறனாளிகள். கல்லூரியில் அனைவரும் சேர்ந்த பிறகு வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என்றார் அவர்.

Tuesday 21 June 2016

மாணவர்களுக்கு ஆதார் எண்ணுடன் கூடிய ஜாதிச் சான்றிதழ்:மத்திய அரசு அறிவுறுத்தல்

பள்ளி மாணவர்களுக்கு அவர்களது ஆதார் எண்ணுடன் கூடிய ஜாதி மற்றும் இருப்பிடச் சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மேலும், இந்தச் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இச்சலுகைகளை பெற மாணவர்களின் ஜாதி மற்றும் இருப்பிடச் சான்றுகள் அவசியமாகின்றன. ஆனால், இச்சான்றிதழ்கள் மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் கிடைக்கப்பெறாததால், அரசின் சலுகைகளைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இதையடுத்து மத்தியப் பணியாளர் நலத் துறை இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஜாதி மற்றும் இருப்பிடச் சான்றிதழ்களை கோரி விண்ணப்பிக்கும் 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, 30 முதல் 60 நாள்களுக்குள் இச்சான்றிதழ்கள் அளிக்கப்படுவதை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும். அத்துடன் மாணவர்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு அவர்களது ஆதார் எண்ணுடன்கூடிய ஜாதி மற்றும் இருப்பிடச் சான்றிதழ்களை அளிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமதூர் மௌத் அறிவிப்பு 21/06/2016

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

நமதூர் தெற்கு தெரு முன்னாள் ஜமாஅத் நாட்டாண்மை ஷேக் முஹம்மது சார் அவர்களின் மனைவி சாகிதா பீவி அவர்கள் மௌத்.

அன்னாரின் ஜனாஸா 21/6/2016 அன்று இரவு 7:30 மணிக்கு நமது முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
 

திருவாரூரில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 360 பேர் கோரிக்கை மனு

திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 360 பேர் மனு அளித்தனர். மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் எம்.மதிவாணன் தலைமையில் மக்கள் குறைதீர்க் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பட்டா பெயர் மாற்றம், புதியக்குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 360 பேர் மனு அளித்தனர். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருவருக்கு ரூ.5,000 மதிப்பில்  காதுகேளாதோருக்கான நவீன காது கேட்கும் கருவி, ஒருவருக்கு  ரூ.5,000 மதிப்பில்  சக்கர நாற்காலி, 2 பேருக்கு ரூ.500 மதிப்பிலான மடக்கு குச்சி என மொத்தம் ரூ. 11,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், சமூகப்பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஜயலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Monday 20 June 2016

புற்றுநோயை உருவாக்கும் பாலிதீன் பை உணவு


புற்றுநோய், மலட்டுத் தன்மை போன்றவற்றை உருவாக்கும் அபாயகர நச்சுப்பொருள்களை வெளிப்படுத்தும் பாலிதீன் பைகளில், சுடச்சுட குழம்பு, தேநீர் போன்ற உணவுப் பொருள்களைக் கட்டுவதற்கு தடை விதித்து அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து இடங்களிலும் "அங்கிங்கெனாதபடி எங்கெங்கும்' பிளாஸ்டிக் பொருள்கள் நிறைந்திருக்கின்றன.
குறிப்பாக, உணவகங்களில் அனைத்து உணவுப் பதார்த்தங்களையும் பாலிதீன் பைகளில் கட்டித் தருவதன் நீட்சியாக- அண்மைக்கால புதுமை- தேநீர்க் கடைகளில் காபியும், பாலும், தேநீரும் பாலிதீன் பைகளில் கட்டித் தருகிறார்கள்.
பாக்கெட் குடிநீரின் மாதிரியாக இதைக் கொள்ளவும் முடியும். ஆனால், அந்தப் பாக்கெட்டுகளில் இருக்கும் எச்சரிக்கையைப் பொருள்படுத்த மறந்துவிட்டோம். "சூரிய ஒளி படாமல்' வைத்திருக்கச் சொல்கிறார்கள். அதன் பொருள் வேறொன்றுமில்லை. சூரிய ஒளி பட்டால், பாலிதீன் உற்பத்திப் பொருள்களில் கலந்துள்ள ரசாயனங்கள் தண்ணீருடன் கலக்கும்.
இந்தப் பின்னணியில்தான் தற்போது உணவுப் பொருள்கள் எளிதாகவும், கெüரவமாகவும் பாலிதீன் பைகளில் கட்டப்படுவதைப் பார்க்க வேண்டியுள்ளது.
பகல் வேளையில் சாப்பாடு வாங்கினால் சைவக் கடைகளில் சாம்பார், காரக் குழம்பு, ரசம், மோர், கூட்டு, பொரியல் அனைத்தும் தனித்தனி பைகளில் கட்டித் தரப்படுகிறது. அசைவக் கடைகளில் கூடுதலாக இரு குழம்புகள்!
அரிசிச் சோறு பெரும்பாலும் பாலிதீன் தாள், வாழைத் தாள் (காகிதம்) ஆகியவற்றிலும், அரிதாக வாழை இலைகளிலும், பட்டர் தாள்களிலும் கட்டித் தரப்படுகிறது.
சுடச்சுட சாப்பிட்டுப் பழகியவர்களுக்காகவும், கூட்டத்தையும், கட்டும் நேரத்தையும் மிச்சப்படுத்தும் நோக்கிலும், முற்பகல் 11.30- மணிக்கெல்லாம் அனைத்து வகையான குழம்புகளும் பார்சலாகிவிடுகின்றன.
ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்கு முன்பாக பொட்டலமாகிவிடும் இந்த வகைகளில் இருக்கும் சூட்டால் பாலிதீன் பைகளில் உள்ள ரசாயனங்கள் உணவில் கலப்பதை மறுக்கவியலாது.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கூறியதாவது:
பாலிதீன் பைகள் சூடானால், அவற்றிலிருந்து "ஸ்டைரீன்', "பிஸ்பெனால் ஏ' போன்ற ரசாயனங்கள் வெளியாகும். இவை இரண்டும் புற்றுநோயை உருவாக்கும் தன்மையைக் கொண்டவை.
மேலும், பாலிதீன் பைகளில் இருந்து வெளியாகும் "பாலிவினைல் குளோரைடு', "பாலி ஸ்டைரீன்' ஆகியவை ஆண்- பெண் இரு பாலருக்கும் மலட்டுத் தன்மையை உருவாக்கும் தன்மையைக் கொண்டவை.
ஆனால், பாலிதீன் பைகளில் கட்டப்படும் உணவுகள் குறித்து உரிய உத்தரவுகள் இல்லாததால், மாவட்டங்களில் உணவுக் கலப்படம் குறித்து ஆய்வு செய்யும் பணியில் இருக்கும் நியமன அலுவலர்களால் நேரடி நடவடிக்கையில் ஈடுபட முடியவில்லை. சுகாதாரத் துறையும் நேரடியாகத் தலையிட முடியாது.
அரசு இதைக் கவனமாகப் பரிசீலித்து, தேவைப்பட்டால் மருத்துவ நிபுணர் குழு அமைத்து சோதனை மேற்கொண்டு அவற்றின் மூலம் சூடான பொருள்களை பாலிதீன் பைகளில் கட்டுவதைத் தடை செய்து உத்தரவிட்டால் மட்டுமே மேல் நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறார்கள்.
புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் புற்றுநோய் வரும் துயரமும், குழந்தைப் பேறுக்காக மருத்துவமனைகளில் நிற்கும் நீண்ட வரிசையும் இவற்றால்தான். தமிழக அரசு இதுவிஷயத்தில் விரைவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

Sunday 19 June 2016

திருவாரூரில் உண்மை சம்பவம்

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை சேர்ந்தவர் ரமேஷ். டாஸ்மாக் ஊழியர். இவர் நேற்று (17-ம் தேதி) நார்த்தங்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் கால் முறிவு ஏற்பட்ட ரமேஷ், திருவாரூரில் தான் வழக்கமாக எலும்பு முறிவு சிகிச்சை பெற்று வரும் டாக்டர் அன்சாரியை தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு டாக்டர், தான் வீட்டிற்கு சென்று விட்டதாகவும், எனவே மற்றுமொரு தனியார் மருத்துவமனையின் பெயரை கூறி அங்கு செல்லுமாறும் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து, டாக்டர் அன்சாரி வழிக்காட்டுதலின் படி திருவாரூரில் உள்ள லக்ஷ்ணா மருத்துவமனையில் ரமேஷ் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அங்கு ரமேஷ்-க்கு எக்ஸ்ரே மற்றும் ரத்தப் பரிசோதனை எடுக்கப்பட்டு, அவை அனைத்தும் வாட்ஸ்அப் மூலம் டாக்டர் அன்சாரிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

அதனையடுத்து, அந்தத் தனியார் மருத்துவமனையின் டாக்டர் சண்முகம் எலும்பு முறிவுக்கு மாவுக்கட்டு போட்டிருக்கிறார். பின் டாக்டர் அன்சாரி தொலைபேசி மூலமாக சிகிச்சை அளிக்கும் விதத்தை கூறியிருக்கிறார். அதன்படி, டாக்டர் சண்முகம் சிகிச்சை அளித்திருக்கிறார். இதில் ரமேஷ்-க்கு ஊசி மூலம் செலுத்தப்பட்ட மருந்து ஏற்றுக் கொள்ளாமல், ரத்த அழுத்தம் மற்றும் நாடித் துடிப்பு குறைந்து, வலிப்பு ஏற்பட்டு சிறிது நேரத்தில், நள்ளிரவு சுமார் 12.20 மணியளவில் இறந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை அருகில் இருந்து பார்த்த உறவினர்கள் ஆத்திரமடைந்து, மருத்துவமனை கண்ணாடி, டி.வி மற்றும் உயர்ரக மருத்துவ உபகரணங்களை அடித்து நொறுக்கியிருக்கின்றனர். இதை தடுக்க வந்த மருத்துவமனை ஊழியர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த 4 ஊழியர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
Advertisement


இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 20-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.

கால் முறிவுக்கு சிகிச்சை பெற வந்தவருக்கு, நேரடியாக சிகிச்சை அளிக்காமல், வாட்ஸ்அப் மூலமாக சிகிச்சை அளித்ததால் ஒருவர் இறந்த சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது