Wednesday 30 September 2015

சென்னை விமான நிலையம்:' 54 ' நாட்அவுட்!

சென்னை விமான நிலையத்தில் 54 வது முறையாக இன்றும் கண்ணாடி  கதவு ஒன்று விழுந்து நொறுங்கியது.
சென்னை  விமானநிலையம் தினமும் லட்சக்கணக்கான பயணிகளை கையாண்டு வருகிறது.  தென்னிந்தியாவின் வாயிலாக கருதப்படும்  இந்த விமான நிலையத்தை நவீனமயமாக்கிய பிறகு தொடர்ந்து கண்ணாடிகள் கீழே விழுந்து உடைவது வாடிக்கையாகி வருகிறது.
அவ்வப்போது இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் ஒரு வித பயத்துடன்தான் நடமாடி வருகின்றனர். 

சென்னை விமான நிலையத்திற்குள் ஹெல்மெட் போட்டுக் கொண்டு பயணிகள் செல்வது போல கூட கேலிசித்திரங்கள் அவ்வப்போது வெளியாவதும் வழக்கமாகி விட்டது.  எனினும் இந்த விஷயத்தில் விமான நிலைய அதிகாரிகள் மெத்தன போக்கால்  கண்ணாடிகள் விழுந்து உடைவது தொடர்கதையாகத்தான் உள்ளது. 

அந்த வகையில் 54 வது முறையாக சென்னை  விமான நிலையத்தில் இன்றும் கண்ணாடி  கதவு ஒன்று விழுந்து நொறுங்கியது. நல்ல வேளையாக யாரும் காயம் அடையவில்லை. கண்ணாடி விழுவதில் விரைவில் சென்னை விமான நிலையம் சதமடித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

வட்டி விகிதத்தைக் குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனக் கடன் சுமை குறையும்


வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை அரை சதவீதம் குறைப்பதாக ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
 இதனால் வீட்டு வசதிக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.
 இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. அப்போது வட்டி விகிதத்தைக் குறைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
 பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று அரசு, தொழிலகங்கள் மற்றும் வங்கிகள் வலியுறுத்தி வந்த நிலையில், ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்தது குறிப்பிடத் தக்கது.
 ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் வட்டி விகிதக் குறைப்பு அறிவிப்பை செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
 அப்போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
 ரிசர்வ் வங்கியிடமிருந்து பிற வர்த்தக வங்கிகள் பெறும் தொகைக்கான வட்டி விகிதம் (ரெபோ ரேட்) தற்போதைய 7.25 சதவீதத்திலிருந்து 6.75 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
 பிற வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் தொகைக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெபோ) 5.75 சதவீதமாக இருக்கும். வங்கிகளின் ரொக்கக் கையிருப்பு தற்போதைய 4 சதவீத அளவிலேயே தொடரும்.
 முன்னதாக, 3 நிதிக் கொள்கை அறிவிப்புகளின்போது, தலா கால் சதவீதம் என மொத்தமாக முக்கால் சதவீத அளவு வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. இப்போது அறிவிக்கப்பட்டதையும் சேர்த்து 1.25 சதவீத வட்டிக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
 இந்த அறிவிப்பின் பலன் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் விதமாகப் பிற வங்கிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 இப்போதைய வட்டிக் குறைப்பு அறிவிப்புக்கு முன்னதாக 0.75 சதவீத அளவுக்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டபோதிலும், வாடிக்கையாளர்களுக்கு சராசரியாக 0.30 சதவீதம் மட்டுமே வட்டி குறைக்கப்பட்டது.
 ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை செயல்படுத்துவதில் வர்த்தக வங்கிகளுக்கு உள்ள தடைகள் அகற்றப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
 மேலும், நிதிப் பற்றாக்குறை அளவைத் தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்க அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
 கொள்கைகளில் சீர்திருத்தம், உற்பத்தித் திறனை அதிகரிக்கும்படியான தொழிலகங்களின் செயல்பாடுகள் ஆகியவைதான் நீடித்த வளர்ச்சிக்கான அடிப்படை உந்து சக்திகள்.
 இந்த நிலையில், அரை சதவீத வட்டிக் குறைப்பை அறிவித்து ரிசர்வ் வங்கி முக்கிய முடிவு எடுத்துள்ளது.
 சர்வதேச நிலவரங்களைப் பற்றிக் கவலைப்படாமல், நமது நீடித்த வளர்ச்சியை முன்வைத்து நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.
 நமது பொருளாதாரம் நீண்ட நாளாக சில பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. அதனை மாயமாக மறைய வைக்க முடியாது.
 நடைமுறைக்கு சாத்தியமான வழிமுறைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி அடையச் செய்ய அரசு, ரிசர்வ் வங்கி, பிற கட்டுப்பாட்டு அமைப்புகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன.
 மேலும், வெளிநாட்டு முதலீடுகளின் வரம்புகள் அமெரிக்க டாலர்களின் அடிப்படையில் இல்லாமல், ரூபாயின் அடிப்படையில் இருக்கலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது. ஜனவரி மாதத்துக்குள் பணவீக்கம் 6 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், அது 5.8 சதவீதமாகக் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நிகழ் நிதி ஆண்டில் 7.4 சதவீதமாக இருக்கும். முன்னதாக, அது 7.6 சதவீதமாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டிருந்தது என்றார் ரகுராம் ராஜன்.
 நான் கிறிஸ்துமஸ் தாத்தா அல்ல!
 வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று தொழிலக அமைப்புகளும் அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அரை சதவீத வட்டிக் குறைப்பு அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
 "திடீர் பரிசு வழங்கும் நீங்கள் கிறிஸ்துமஸ் தாத்தாவா?' என்று செய்தியாளர்கள் வேடிக்கையாக ரகுராம் ராஜனிடம் கேட்டனர்.
 நான் கிறிஸ்துமஸ் தாத்தா அல்ல; என் பெயர் ரகுராம் ராஜன். நான் செய்ய வேண்டியதைச் செய்துள்ளேன்.
 தற்போதைய பொருளாதார நிலையையொட்டி வட்டிக் குறைப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தீபாவளி போனஸ் அல்ல என்றார் அவர்.
 கடனுக்கான வட்டியைக் குறைத்து வங்கிகள் அறிவிப்பு
 ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பு அறிவிப்பையடுத்து, ஆந்திர வங்கி அளித்து வரும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக அந்த வங்கி அறிவித்தது.
 பாரத ஸ்டேட் வங்கியின் குறைந்தபட்ச வட்டி விகிதத்தை 0.4 சதவீத அளவுக்குக் குறைப்பதாக அந்த வங்கி தெரிவித்தது.
 இதையடுத்து, அந்த வங்கியின் குறைந்தபட்ச வட்டி விகிதம் 9.3 சதவீதமாக இருக்கும். மேலும், வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படும் எனவும் அந்த வங்கி தெரிவித்தது.
 தொழிலக அமைப்புகள் வரவேற்பு
 வட்டி விகிதத்தைக் குறைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது, வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்று பல்வேறு தொழிலக அமைப்புகள் கருத்துத் தெரிவித்துள்ளன.
 இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) தலைமை இயக்குநர் சந்திரஜித் பானர்ஜி கூறுகையில், நமது பொருளாதார நிலையில் அடிப்படையாக உள்ள அடிப்படையான குறையை ரிசர்வ் வங்கி உணர்ந்து, வட்டி விகிதத்தைக் குறைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி.
 முதலீடுகளும் தொழில் வளர்ச்சியும் மீண்டும் புத்துணர்வு பெறும் விதமாக தொழிலகங்கள் செயல்படும் என்றார்.
 கடந்த ஜனவரியிலிருந்து மொத்தம் 1.25 சதவீத அளவு வட்டி குறைக்கப்பட்டுள்ளது. இதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வங்கிகள் முன்வர வேண்டும் என்று இந்திய வர்த்தக சபைகளின் சங்கத்தின் (அசோசேம்) தலைமை இயக்குநர் டி.எஸ்.ராவத் கூறினார்.
 ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு ஆட்டோ மொபைல் துறைக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய தீபாவளிப் பரிசு என்று ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த ராகேஷ் ஸ்ரீவாஸ்தவா கூறினார்.
 ஏற்றுமதிகள் குறைந்து வரும் நிலையில், அனைத்துப் பிரிவு ஏற்றுமதியாளர்களுக்கும் சிறப்புச் சலுகையாக, குறைந்தபட்சம் இரண்டு சதவீத வட்டி விதிப்பை ஒத்திவைக்க வேண்டும். நிலைமை சீராகும்போது, அதனைச் சேர்த்து அளிக்கும்படி அறிவிக்கலாம் என்று ஏற்றுமதியாளர்கள் அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tuesday 29 September 2015

மகளிர் சுயஉதவி குழுக்களின் செயல்பாட்டுக்காக 20 ஆயிரம் பெண்களுக்கு ‘அம்மா கைபேசி’: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு









தமிழக சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
மகளிர் சுயஉதவி குழுக்கள்மகளிருக்கு சமூக பொருளாதார அதிகாரம் வழங்கிடவும், அதன்மூலம் வறுமை ஒழிக்கும் நோக்கத்துடனும் சுயஉதவி குழுக்களை எனது தலைமையிலான அரசு 1991–ம் ஆண்டு உருவாக்கியது.
மேலும் ஏழை, எளிய, நலிவுற்ற மக்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டிற்காக 2005–ம் ஆண்டு எனது தலைமையிலான அரசு உலக வங்கி நிதி உதவியுடன் கூடிய தமிழ்நாடு புதுவாழ்வு திட்டத்தையும் தொடங்கிவைத்தது. அதன் பயனாக, மகளிர் சுயஉதவி குழுக்கள் தமிழ்நாட்டில் மாபெரும் சக்தியாய் உருவெடுத்து, இன்று 6.08 லட்சம் மகளிர் சுயஉதவி குழுக்கள் 92 லட்சம் உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகின்றன.
பயிற்றுநர்கள்தமிழ்நாட்டில் சுயஉதவி குழுக்களை ஒருங்கிணைக்க ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கூட்டமைப்பின் கீழ் 20 முதல் 25 சுயஉதவி குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்த சுயஉதவி குழுக்களை மேற்பார்வையிட சமுதாய சுயஉதவி குழு பயிற்றுநர்கள் உள்ளனர்.
சுயஉதவி குழுவில் ஊக்குநராக செயல்பட்ட அனுபவமிக்க உறுப்பினர்களே சமுதாய சுயஉதவி குழு பயிற்றுநர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் புதிய சுயஉதவி குழுக்களை அமைப்பதற்கும், பயிற்றுவிப்பதற்கும் துணைபுரிந்து வருகின்றனர்.
அம்மா செல்போன் திட்டம்மகளிர் சுயஉதவி குழுக்கள் தாங்கள் நடத்தும் கூட்டங்கள், சந்தா தொகை செலுத்துதல், சேமிப்பு, அவர்களுக்குள் கொடுத்துக்கொள்ளும் உட்கடன் விவரம், கடனை மீளச்செலுத்துதல் போன்ற நடைமுறைகளுக்கு பல்வேறு பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டியுள்ளது.
விவரங்களை பதிவேடுகளில் பதிவு செய்யவும், அவர்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடவும் தமிழ் மொழியில் சிறப்பு மென்பொருள் ஒன்று உருவாக்கி கணினி மயமாக்கப்பட்ட செல்போன்கள் வழங்கப்படும். அம்மா செல்போன் திட்டம் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்.
முதற்கட்டமாக, 20 ஆயிரம் சமுதாய சுயஉதவி குழு பயிற்றுநர்களுக்கு 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அம்மா செல்போன்களை எனது தலைமையிலான அரசு வழங்கும் என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

மலேசியாவில் திருவாரூர் தொழிலாளி சாவு உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனைவி கோரிக்கை



:
மலேசியா நாட்டில் திருவாரூரை சேர்ந்த தொழிலாளி இறந்தார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டும் என்று அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

மலேசியாவில் சாவு

திருவாரூர் அருகே உள்ள நீடாமங்கலம் தாலுகா வெள்ளக்குடி விழல்கோட்டகம் மேலத்தெருவை சேர்ந்தவர் தங்கமணி (வயது 36). இவரது மனைவி ராஜலெட்சுமி. கடந்த சில மாதங்கள் முன்பு தங்கமணி மலேசியா நாட்டுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி தங்கமணி இறந்து விட்டதாக அவர் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து திருவாரூரில் உள்ள அவரது குடும்பத்துக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து நேற்று தங்கமணி மனைவி ராஜலெட்சுமி, திருவாரூர் கலெக்டர் மதிவாணனை நேரில் சந்தித்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சொந்த ஊருக்கு...

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா வெள்ளக்குடி விழல்கோட்டகம் மேலத்தெருவில் வசித்து வருகிறேன். எனது கணவர் தங்கமணி . எங்களுக்கு புவனேஸ்வரி, சுபலெட்சுமி, வினோத்ஸ்ரீ ஆகிய 3 மகள்கள் உள்ளனர். எனது கணவர் தங்கமணி, மலேசியா நாட்டில் ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி அன்று தங்கமணி இறந்துவிட்டதாக, அவர் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து தகவல் தெரிவித்தனர். ஆனால் இதுவரை அவரது உடல் சொந்த ஊருக்கு வந்து சேரவில்லை. எனக்கு பொருளாதார வசதி இல்லாததால் எனது கணவர் தங்கமணி உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. 

Monday 28 September 2015

430 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் கலெக்டர் மதிவாணன் தகவல்













கிராம சபை கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் 430 ஊராட்சிகளில் நடக்கிறது. கூட்டத்தில் நடப்பு ஆண்டிற்கான 14-வது நிதி ஆணைய மானியத்திலிருந்து பணிகள் தேர்வு செய்தல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு மற்றும் இதர காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், கிராமப்புறங்களில் உள்ள சீமைக்கருவேலமரங்களை அகற்றிட நடவடிக்கை எடுத்தல், ஊராட்சி பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

கோமாரி நோய் தடுப்பு

மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்துதல், மகளிர் திட்டம், புதுவாழ்வு திட்டத்தின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த அறிக்கைகள் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கால்நடைகளை தாக்கும் கோமாரி நோயை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் இதர பொருட்கள் ஊராட்சி மன்ற தலைவரால் அல்லது ஊராட்சி மன்ற தலைவரின் அனுமதி பெற்று உறுப்பினர்களால் கொண்டு வரப்படும். எனவே கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயன்பெற்றிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

Sunday 27 September 2015

நமதூர் நிக்காஹ் தகவல் 27/9/2015




முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் நிருவாகத்தால் நடைபெறும் திருமணங்கள் :



நமதூர் நடுத்தெரு மர்ஹும்  முஹம்மது ஜக்கரியா அவர்களின் மகளார்    நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1436ம்  துல் ஹஜ்  பிறை  13 (27/09/2015)  பகல் 10:30 மணிக்கு  நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில்  நடைபெற உள்ளது .


நமதூர் நடுத்தெரு சஹாபுதீன்  அவர்களின் மகனார்     நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1436ம்  துல் ஹஜ்  பிறை  13 (27/09/2015)  பகல் 11:30 மணிக்கு  நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில்  நடைபெற உள்ளது .




.


மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)


بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير
 .


நபி (ஸல்அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது


... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...

Kodikkalpalayam - ஹஜ்ஜுப்பெருநாள் கொண்டாட்டம்




Saturday 26 September 2015

மெக்கா நெரிசல்: பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்வு


மெக்கா அருகே மினாவில் வியாழக்கிழமை நேரிட்ட நெரிசலில் சிக்கி 719 பேர் உயிரிழந்த சம்பவத்தில், பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. 
முன்னதாக, இந்த நெரிசலில் சிக்கி 4 இந்தியர்கள் உயிரிழந்ததாக வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெள்ளிக்கிழமை வெளியிட்ட சுட்டுரை (டுவிட்டர்) பதிவில் கூறியுள்ளதாவது:
நெரிசலில் 14 இந்தியர்கள் உயிரிழந்ததாக, மெக்காவில் உள்ள இந்தியத் தூதர் தெரிவித்தார். மேலும், 13 இந்தியர்கள் பலத்த காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.
சவூதி அரேபியாவின் அதிகாரிகள் அறிவித்த பிறகே, உண்மையான எண்ணிக்கை தெரியவரும் என்று அந்தப் பதிவில் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
முஸ்லிம்களின் புனித இடமான மெக்காவுக்கு வாழ்நாளில் ஒருமுறையாவது பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது முஸ்லிம்களின் கடமையாகும். மெக்கா மசூதியில் தொழுகை நடத்திய பிறகு, மினா சென்று சாத்தான் மீது கல்லெறியும் சடங்கில் கலந்து கொள்வது வழக்கம். அந்த இடத்துக்கு மக்கள் செல்லும் போது வியாழக்கிழமை நெரிசல் ஏற்பட்டது. அதில், 719 பேர் உயிரிழந்தனர்; 863 பேர் காயமடைந்தனர். சம்பவப் பகுதியில் சவூதி அரேபிய அரசு அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, நெரிசலில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து, சவூதி அரேபிய மன்னர் சல்மான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இனிவரும் காலங்களில் மெக்காவுக்கு வருகை தரும் பயணிகள் எளிதாக சடங்குகளை மேற்கொள்ளும் வகையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த பரிசீலிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் மூவர்
சென்னை, செப். 25: மெக்கா அருகே மினா நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று தமிழர்கள் உயிரிழந்ததாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு ஹஜ் கமிட்டி வாயிலாக மெக்கா புனித யாத்திரையை மேற்கொண்ட நாகப்பட்டினம் மாவட்டம் - மயிலாடுதுறையைச் சேர்ந்த சம்சுதின் முகமது இப்ராஹிம், நெல்லை மாவட்டம் - தென்காசியைச் சேர்ந்த முகைதீன் பிச்சை, திருச்சியைச் சேர்ந்த ரெமிஜன் ஆகியோர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.
இந்தச் செய்தியை அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Friday 25 September 2015

மெக்கா புனித ஹஜ் பயணத்தில் மீண்டும் பயங்கர விபத்து 717 பேர் நெரிசலில் சிக்கி பலி

மெக்கா புனித ஹஜ் பயணத்தின் போது, மினா நகரில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 இந்தியர்கள் உள்பட 717 பேர் பலி ஆனார்கள். மேலும் 800-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். 

மினா

இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ஹஜ் புனித பயணமும் ஒன்று ஆகும்.

20 லட்சம் பேர் புனித பயணம் 

இந்த ஆண்டு சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரான மெக்காவுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு உள்ளனர். இந்த ஆண்டில் 1½ லட்சம் இந்தியர்கள் உள்பட 20 லட்சத்துக்கும் அதிகமாக அங்கு ஹஜ் பயணம் சென்று உள்ளனர்.

கடந்த 11-ந் தேதி அங்குள்ள பெரிய மசூதியில் கிரேன் ஒன்று சரிந்து விழுந்ததில் 11 இந்தியர்கள் உள்பட 115 பேர் பலி ஆனார்கள். மேலும் ஏராளமான பேர் காயம் அடைந்தனர்.

கல்லெறியும் நிகழ்ச்சி

அந்த சோக சம்பவத்தின் சுவடு மறைவதற்குள் அங்குள்ள மினா நகரில் மற்றொரு விபத்து சம்பவம் நடைபெற்று ஏராளமான பேர் உயிர் இழந்து உள்ளனர்.

மெக்காவுக்கு அருகே உள்ளது மினா நகரம். ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் இறுதி நிகழ்ச்சியாக மினாவுக்கு சென்று அங்குள்ள சாத்தான் தூண் மீது கல் எறிவார்கள். நேற்று அங்கு கல் எறியும் நிகழ்ச்சி நடைபெற்ற போது திடீரென்று நெரிசல் ஏற்பட்டது. சாத்தான் தூணை நோக்கி செல்லும் பாதையில் 204-வது தெருவின் அருகே ஜமாரட் பாலத்தின் நுழைவுப்பகுதியில் இந்த நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்.



நெரிசலில் சிக்கி 717 பேர் பலி

இந்த சம்பவத்தில் 717 பேர் பலி ஆனார்கள். மேலும் 800-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இறந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. காயம் அடைந்தவர்களில் பலர் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சவுதி அரேபிய போலீசார், ராணுவத்தினர் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 ஆயிரம் பேர் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மருத்துவ குழுவினருடன் 220 ஆம்புலன்சுகளும் வரவழைக்கப்பட்டன.

மீட்புக்குழுவினர் நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் உடல்களை மீட்டதோடு, காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் வேன்களில் ஏற்றி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அந்த பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் உடனடியாக மூடப்பட்டன.



இந்தியர்கள் 3 பேர்

நெரிசலில் சிக்கி இறந்தவர்களில் 3 பேர் இந்தியர்கள் என தெரியவந்து உள்ளது. அவர்களில் ஒருவர் பெயர் பிபி ஜான் (வயது 60). இவர் ஐதராபாத்தைச் சேர்ந்தவர். மற்றொருவரின் பெயர் முகமது. இவர் கேரள மாநிலம் கொடுங்கலூரைச் சேர்ந்தவர் ஆவார். மற்றொருவரின் அடையாளம் தெரியவில்லை.

காயம் அடைந்து சிகிச்சைக் காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருப்பவர்களில் இருவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்து உள்ளது.

இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தோனேசியா, மலேசியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்து உள்ளது.

பாதுகாப்பு பிரச்சினை


மினாவில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது நெரிசல் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவது இது முதல் தடவை அல்ல. கடந்த காலங்களிலும் இதுபோன்ற விபத்துகள் நடந்து உள்ளன.

கடந்த 25 ஆண்டுகளில் ஹஜ் புனித பயணத்தின் போது ஏற்பட்ட 2-வது மோசமான விபத்து இது ஆகும். 1990-ம் ஆண்டு ஜூலை மாதம் மெக்கா அருகே உள்ள அல்-முசீம் குகைப்பாதையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 1,426 யாத்ரீகர்கள் உயிர் இழந்தனர். அதன்பிறகு இப்போது மினாவில் நடந்த நெரிசலில் அதிக அளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டு உள்ளது.

ஹஜ் புனித பயணமாக லட்சக்கணக்கான பேர் மெக்கா வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது சவுதி அரேபியா அரசுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. ஹஜ் பயணிகளின் நலனை கருதி ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து வருகிறது. என்றாலும் சில சமயங்களில் இதுபோன்று அசம்பாவிதங்கள் நடைபெற்று விடுகின்றன.



ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவர்

இந்த விபத்து சம்பவம் பற்றி இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத்தலைவர் அபுபக்கர் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சவுதி அரேபியாவில் மெக்கா நகரில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் மினா நகர் உள்ளது. அந்த மினா நகரில் ஜமாரட் பாலம் அருகே சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சி நேற்று இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு நடைபெற்றது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறி 717 ஹாஜிகள் இறந்து உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தோனேஷியா மற்றும் மலேசியா நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

மேலும் இந்த சம்பவத்தில் 800-க்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் அங்கு உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதற்கு சவுதி அரேபியா அரசாங்கம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து உள்ளது. மேலும் அந்த அரசு துரித நடவடிக்கை எடுத்து மேலும் நெரிசல் ஏற்படாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளையும் எடுத்து இருக்கிறது.

ஆழ்ந்த அனுதாபம்

சம்பவம் நடந்த ஜமாரட் பாலம் கட்டப்பட்டு 14 வருடங்கள் ஆகின்றன. இந்த பாலம் கட்டப்பட்டு இதுவரை இப்படி சோக சம்பவம் நடந்தது இல்லை. ஏன் இப்படி நெரிசல் ஏற்பட்டது? எப்படி இந்த விபத்து நடந்தது? என்று தெரியவில்லை.

இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இந்திய ஹஜ் கமிட்டி சார்பிலும், ஒட்டுமொத்த இந்திய மக்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்துடன் இரங்கல் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் 115 பேர் இறந்த சம்பவத்தின் சுவடு மறைவதற்குள், அங்கு மீண்டும் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது.

பக்ரீத் பண்டிகையை புதிய ஆடை உடுத்தி கொண்டாடிய நிலையில், இப்படி துயர சம்பவம் நடந்ததால் ஏராளமானவர்கள் புதிய ஆடைகளை களைந்துவிட்டு பழைய ஆடைகளை கட்டிக்கொண்டார்கள்.

இந்த விபத்து குறித்து ஏதாவது தகவல் அறிய விரும்புவோர் 044-28276061 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அபுபக்கர் கூறினார்.

ஹஜ் புனித பயணத்தின் போது இதுவரை நடந்த விபத்துகள் 

ஹஜ் புனித பயணத்தின் போது ஏற்கனவே பல முறை விபத்துகள் நடைபெற்று உயிர் இழப்புகள் ஏற்பட்டு உள்ளன.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

*1975-ம் ஆண்டு டிசம்பர்: ஹஜ் பயணிகள் தங்கி இருந்த கூடாரத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததில் 200-க்கும் அதிகமானோர் பலி.

*1987-ம் ஆண்டு ஜூலை: ஈரானிய போராட்டக்காரர்களுக்கும் சவுதி அரேபிய போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 400-க்கும் அதிகமாக ஈரானிய யாத்ரீகர்கள் பலி.

*1990-ம் ஆண்டு ஜூலை: மெக்கா அருகே உள்ள அல்-முசீம் குகைப்பாதையில் நடந்த விபத்தில் 1,426 யாத்ரீகர்கள் உயிர் இழந்தனர்.

*1994-ம் ஆண்டு மே: மினாவில் சாத்தான் தூண் மீது கல் எறியும் நிகழ்ச்சியின் போது ஜமாரத் பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 270 யாத்ரீகர்கள் பலி.

*1997-ம் ஆண்டு ஏப்ரல்: மினாவில் ஹஜ் பயணிகள் தங்கி இருந்த கூடாரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 343 யாத்ரீகர்கள் சாவு.

*1998-ம் ஆண்டு ஏப்ரல்: நெரிசலில் சிக்கி 119 பேர் பலி.

*2004-ம் ஆண்டு பிப்ரவரி: ஜமாரத் பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 251 பேர் இறந்தனர்.

*2006-ம் ஆண்டு ஜனவரி: ஜமாரத் பாலத்தின் கிழக்கு நுழைவாயில் பகுதியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 362 பேர் சாவு.

*2015 செப்டம்பர் 11-ந்தேதி: மெக்கா பெரிய மசூதியில் கிரேன் சரிந்து விழுந்ததில் 115 பேர் பலி. 

Thursday 24 September 2015

குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி


திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
செப். 25ஆம் தேதி முதல் தன்னார்வ பயிலும் மையத்தின் மூலம் நடைபெறும் பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் பயிற்சி தொடங்கும் நாளன்று மதியம் 3 மணிக்கு தேர்வுக்கு விண்ணப்பித்த ஆதார நகல், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் பயிற்சியில் பங்கேற்கலாம்.

Wednesday 23 September 2015

திருவாரூரில் மழை


திருவாரூரில் செவ்வாய்க்கிழமை மாலை மழை பெய்ததால், தண்ணீரின்றி காய்ந்திருந்த சம்பா பயிர்கள் துளிர்விட்டு வளரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தற்போது நடவு முறையிலும், நேரடி நெல் விதைப்பு மூலமும் சுமார் 1.50 லட்சம் ஏக்கருக்கு அதிகமாக சம்பா சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காவிரியில் போதிய அளவு தண்ணீர் வராததால் நேரடி நெல் விதைப்பு வயல்களில் முளைத்த பயிர்கள் பல இடங்களில் காய்ந்தும், காய்ந்து போகும் சூழலும் இருந்து வந்தது.
இதனால்  கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற்றுத் தரக்கோரி மாவட்டத்தில் விவாயிகள் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில்,  செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் திருவாரூர் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 45 நிமி டம் மழை பெய்தது.
இந்த மழை சம்பா பயிருக்கு முழுமையான பயனைக் கொடுக்காவிட்டாலும், காய்ந்த நிலையிலுள்ள பயிர்கள் துளிர்விட்டு வளர்வதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. வரும் நாள்களில் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வந்து, மழையும் பெய்தால் சம்பா பயிர்களுக்கு மிகவும் பயனாக இருக்கும்.

Tuesday 22 September 2015

Kodikkalpalayam - ஹஜ் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு






திருவாரூர் மற்றும் சுற்று வட்டார ஊர்களில் வரும் 24/09/2015 அன்று வியாழன் காலை 8:30 மணிக்கு ஹஜ்ஜு பெரு நாள் தொழுகை நடைபெற உள்ளது .


இதில் நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்  மற்றும் மேலத்தெரு ஜாமியுள் மஸ்ஜித் பள்ளிவாசலில் காலை 8:30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது .



வழக்கம் போல பெண்களுக்கும் தனி இடம் வசதி உள்ளது .குறித்த நேரத்தில் தொழுகை நடைபெறுவதால் முன்கூட்டி யே வந்து ஓத்துழைக்க வேண்டும் .மேலும் குர்பானி தோல்களை நமதூர் பைத்துல் மாலுக்கு அளித்து பணிகளை விரைவாக செய்ய உதவி புரிய வேண்டுகிறோம் .


Monday 21 September 2015

துபாய் மன்னரின் மகன் மாரடைப்பால் மரணம்


துபாய் மன்னரின் மூத்த மகன் ஷேக் ரஷீது பின் முகமது (33) சனிக்கிழமை காலமானார்.
மாரடைப்பு காரணமாக, அவர் உயிரிழந்ததாக ஐக்கிய அரபு அமீரக செய்தி நிறுவனமான "வாம்' தெரிவித்தது.
இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் ஷேக் ரஷீது பின் முகமதை விடுத்து, இளைய மகன் ஷேக் ஹம்தானுக்கு தான் இளவரசர் பட்டம் சூட்டப்பட்டது.
உயிரிழந்த ஷேக் ரஷீது பின் முகமது, விளையாட்டு வீரராகவும், குதிரைப் பந்தய வீரராகவும் திகழ்ந்தார்.
அவருடைய மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, துபாயில் 3 நாள்கள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Sunday 20 September 2015

முறையாக ஆவணங்கள் பராமரிக்காததால் 3 தனியார் மருத்துவமனை ஸ்கேன் மையங்கள் செயல்பட தடை



செப்டம்பர் 20,2015, 4:30 AM IST
திருவாரூரில் முறையாக ஆவணங்கள் பராமரிக்காத 3 தனியார் மருத்துவமனை ஸ்கேன் மையங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைதனியார் மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் மையங்கள் செயல்படுவதில் பல்வேறு விதிமுறைகளை அரசு விதித்துள்ளது. இந்த விதிமுறைகள் சரிவர கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் உதவி இயக்குனர் (சென்னை) ஆசாலதா தலைமையில் மருத்துவ குழுவினர் திருவாரூர் நகரில் இயங்கி வரும் 6 தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதில் திருவாரூர் நகரில் கமலாலயகுளம் மேல்கரை பகுதியிலுள்ள 2 தனியார் மருத்துவமனைகள் மற்றும் தெற்குவீதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஸ்கேன் மையத்தில் கர்ப்பிணி பெண் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று பார்த்ததாகவும், நோயாளிகளின் கையெழுத்து இல்லாமலும் ஆவணங்கள் முறையாக பராமரிக்காதது தெரியவந்தது. இதனை தொடர்ந்து முறையாக ஆவணங்கள் பராமரிக்காத 3 தனியார் மருத்துவமனை ஸ்கேன் மையங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது திருவாரூர் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் செங்குட்டுவன் உடன் இருந்தார்.
சட்டப்படி நடவடிக்கைஇதுகுறித்து திருவாரூர் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் செங்குட்டுவன் கூறியதாவது:–
திருவாரூரில் முறையாக ஆவணங்களை பராமரிக்காத 3 தனியார் மருத்துவமனை ஸ்கேன் மைங்கள் தொடர்ந்து செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் மையங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிப்பது சட்டப்படி குற்றமாகும். மேலும் நோயாளிகளிடம் உரிய கையெழுத்து பெற்று முறையாக ஆவணங்களை பராமரிக்க வேண்டும். இதனை மீறி செயல்படும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Saturday 19 September 2015

நமதூர் மௌத் அறிவிப்பு 19/9/2015

நமதூர் நடுத்தெரு அந்தமாகார வீட்டு மர்ஹூம் அப்துல் ஹமீது
அவர்களின் மனைவியும் ,A.ஹாஜா முஹம்மது நத்தர், A.ஜாகிர்ஹுசைன் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜரம்மாள் அவர்கள் மௌத்.

அன்னாரின் ஜனாஸா 19/9/2015 இரவு 7 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும் .

ஆதார் அட்டையில் கைபேசி, இ-மெயில் முகவரிகளை மாற்றும் வசதி: அரசு இ-சேவை மையங்களில் ஏற்பாடு

கோப்புப் படம்













அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் நடத்தப்படும் இ-சேவை மையங்கள் மூலம் ஆதார் அட்டையில் கைபேசி மற்றும் இ-மெயில் முகவரிகளை மாற்றும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் தலைமைச் செயலகம், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள், 54 கோட்ட அலுவலகங்கள் மற்றும் சென்னை மற்றும் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என 337 இடங்களில் அரசு இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இச்சேவை மையங்கள் மூலம் தமிழக அரசின் வருவாய்த்துறை மற்றும் சமூக நலத்துறை சார்நில் 13 லட்சத்து 28 ஆயிரத்து 647 மனுக்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்கள் மூலம் 4லட்சத்து 36 ஆயிரத்து 352 பேருக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த 337 சேவை மையங்களிலும் ஆதார் அட்டையை பதிவு செய்யும் போது வழங்கப்பட்ட கைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவற்றை மாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரியை மாற்றம் செய்ய விரும்புவோர் இச்சேவை மையங்களை அணுகி தங்கள் புதிய கைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவற்றை 10 ரூபாய் செலுத்தி மாற்றம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Friday 18 September 2015

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான 64 ஆவணங்களை வெளியிட்டது மேற்கு வங்க அரசு

இந்திய விடுதலைக்குப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான 64 ஆவணங்களை மேற்குவங்க அரசு வெளியிட்டுள்ளது. 
சுதந்திர போராட்டத்தின்போது, 1939–ம் ஆண்டு மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரசில் இருந்து மற்றொரு பிரபல தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விலகினார். பின்னர் அவர் ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்று இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவில் வெள்ளையர்களுக்கு எதிராக போராடினார்.
நேதாஜி, 1945–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18–ந் தேதி தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் இறந்துவிட்டதாக கூறப்பட்டது. எனினும், அதை நேதாஜியின் குடும்பத்தினரோ, அவருடைய ஆதரவாளர்களோ ஏற்கவில்லை. இந்த விமான விபத்து சம்பவத்துக்கு பின்பு, நேதாஜி முந்தைய சோவியத் ரஷியா நாட்டில் காணப்பட்டதாகவும் கூறப்படுவது உண்டு. இதனால் நேதாஜி இறந்தாரா, உயிரோடு இருக்கிறாரா? என்ற சர்ச்சை அண்மைக்காலம் வரை நீடித்தது.
40 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரித்து வரும் அவரை பற்றிய 100–க்கும் மேற்பட்ட ரகசிய கோப்புகளை பகிரங்கமாக வெளியிடவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. எனினும், இவற்றை வெளியிட்டால், மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும், நமது நட்பு நாடுகள் சிலவற்றுடன் உறவுகள் பாதிக்கப்படும் என்பதால் அந்த கோப்புகள் பகிரங்கமாக வெளியிடப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்   1937 முதல் 1947ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில், சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான 64 ஆவணங்களை வெளியிடப் போவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த வாரம் அறிவித்திருந்தார்.  கணினி மயமாக்கப்பட்டு வந்த அந்த ஆவணங்கள் கொல்கத்தாவில் இன்று வெளியிடப்பட்டன. 12,744 பக்கங்கள் கொண்ட இந்த ஆவணங்களை, கொல்கத்தா காவல் ஆணையர் சுரஜித் கர் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நேதாஜி தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் கொல்கத்தா காவல் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் திங்கள் கிழமை முதல் பார்க்கலாம் என கூறினார்.

Thursday 17 September 2015

உலக சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியல்: அண்ணா பல்கலை.க்கு 293-ஆவது இடம்


உலக தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 293-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
 இந்த தரப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய கல்வி நிறுவனங்களில், மாநில அரசுக்குச் சொந்தமான ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமையையும் அண்ணா பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.
 உலக தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் முதல் 200 இடங்களில் இந்திய கல்வி நிறுவனங்கள் இதுவரை இடம்பெறாமல் இருந்து வந்தன. 
 இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட 2015-ஆம் ஆண்டுக்கான "க்யூ.எஸ்.' உலக தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் ஒட்டுமொத்தப் பட்டியலில் முதல் 200 இடங்களில் இரண்டு இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்து அசத்தியுள்ளன.
 பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி.) 147-ஆவது இடத்தையும், தில்லி ஐஐடி 179-ஆவது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளன. இதற்கு நாடு முழுவதும் பாராட்டு தெரிவிக்கப்பட்டன.
 இந்த நிறுவனங்களைத் தொடர்ந்து மும்பை ஐஐடி 202-ஆவது இடத்தையும், சென்னை ஐஐடி 254-ஆவது இடத்தையும், கான்பூர் ஐஐடி 271-ஆவது இடத்தையும், காரக்பூர் ஐஐடி 286-ஆவது இடத்தையும், ரூர்கி ஐஐடி 391-ஆவது இடத்தையும், குவாஹாட்டி ஐஐடி 451-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
 இதுபோல் பொறியியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் அடிப்படையில் "க்யூ. எஸ்'. வெளியிட்டுள்ள உலக தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகமும் இடம்பிடித்து அசத்தியிருக்கிறது.
 இந்தப் பொறியியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் பட்டியலில் உலக அளவில் 44-ஆவது இடத்தை தில்லி ஐஐடி பிடித்துள்ளது.
 அதனைத் தொடர்ந்து மும்பை ஐஐடி 52-ஆவது இடத்தையும், சென்னை ஐஐடி 72-ஆவது இடத்தையும், காரக்பூர் ஐஐடி 90-ஆவது இடத்தையும், கான்பூர் ஐஐடி 95-ஆவது இடத்தையும், ரூர்கி ஐஐடி 137-ஆவது இடத்தையும், தில்லி பல்கலைக்கழகம் 268-ஆவது இடத்தையும், குவாஹாட்டி ஐஐடி 284-ஆவது இடத்தையும், அண்ணா பல்கலைக்கழகம் 293-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
 இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன் கூறியதாவது:
 உலக தலைசிறந்த பொறியியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 293-ஆவது இடத்தைப் பிடித்திருப்பது பெருமை அளிக்கிறது.
 அதிலும், உலக அளவில் மெக்கானிக்கல், ஏரோநாட்டிகல், உற்பத்தி பொறியியல் பிரிவுகளின் கீழ் க்யூ.எஸ். வெளியிட்டுள்ள உலக தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 200 இடங்களுக்குள் அண்ணா பல்கலைக்கழகம் இடம்பிடித்துள்ளது.
 இந்தப் பட்டியலில் குவாஹாட்டி ஐஐடி, ரூர்கி ஐஐடி ஆகியவை அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் பிறகே வருகின்றன.
 இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாநில அரசுக்குச் சொந்தமான ஒரே இந்தியப் பல்கலைக்கழகம் அண்ணா பல்கலைக்கழகம்தான். இதற்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்களின் நிர்வாகிகளின் தீவிர முயற்சியே காரணம்.
 இது புதிய உத்வேகத்தை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அளித்துள்ளது. அடுத்ததாக 200 இடத்துக்குள் வருவதற்கான முயற்சியை பல்கலைக்கழகம் மேற்கொள்ளும் என்றார்.

Wednesday 16 September 2015

திருவாரூர் மாவட்டத்தில் 21,363 வாக்காளர்கள் நீக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளில் 21,363 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் அலுவலர்களிடத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டு மேலும் அவர் பேசியது:
5.1.2015 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 4,78,401 ஆண், 4,74,944 பெண், 7 இதர வாக்காளர்கள் என மொத்தம் 9,53,352 பேர் சேர்க்கப்பட்டிருந்தனர்.
அதன்பிறகு 6.1.2015 முதல் 14.9.2015 வரை நடைபெற்ற தொடர் திருத்தத்தில் 6,632 ஆண், 8,683 பெண், 2 இதர வாக்காளர்கள் என மொத்தம் 15,317 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல, தொடர் திருத்தத்தில் 9,676 ஆண், 11,687 பெண் வாக்காளர் என மொத்தம் 21,363 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எனவே, மாவட்டத்திலுள்ள 4 பேரவைத் தொகுதிகளில் 4,75,357 ஆண், 4,71,940 பெண், 9 இதர வாக்காளர்கள் என மொத்தம் 9,47,306 வாக்காளர்கள் உள்ளனர்.
தொகுதி வாரியாக மொத்த வாக்காளர்கள் விவரம்: 15.9.2015-ன்படி திருவாரூர் தொகுதியில் 1,23,401 ஆண், 1,24,157 பெண், 9 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,47,567 வாக்காளர்களும், திருத்துறைப்பூண்டி தொகுதியில் 1,08,513 ஆண், 1,08,060 பெண் என மொத்தம் 2,16,573, மன்னார்குடி தொகுதியில் 1,17,145 ஆண், 1,18,487 பெண் என மொத்தம் 2,35,632, நன்னிலம் தொகுதியில் 1,26,298 ஆண், 1,21,236 பெண் என மொத்தம் 2,47,534 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டத்தில் 1,150 மொத்த வாக்குச்சாவடிகள் உள்ளன. வரைவு வாக்காளாó பட்டியல் திருவாரூர் மற்றும் மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் செவ்வாய்க்கிழமை முதலும், செப். 19, 30 தேதிகளில் நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்திலும் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
1.1.2016-ஐ தகுதிநாளாகக் கொண்டு 18 வயது முடிந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், செவ்வாய்க்கிழமை முதல் (செப். 15) அக். 14-ம் தேதி வரை வாக்குச்சாவடிகளிலும், செப். 20, அக். 4 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களிலும் பெயர் சேர்க்க மார்பளவு புகைப்படம், இருப்பிட முகவரி, வயது ஆகியவற்றுக்கான ஆதாரத்துடன் சென்று பதிவு செய்து கொள்ளலாம். நீக்கம், திருத்தம் செய்ய வேண்டுமெனில் உரிய படிவத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றார் ஆட்சியர்.

Tuesday 15 September 2015

ஹஜ் பெருநாள் அறிவிப்பு

இன்ஷா அல்லாஹ் வரும் புதன்கிழமை 23/9/2015 அன்று அரபா தினம் .அதை அடுத்து 24/9/2015 அன்று வியாழன் ஹஜ் பெருநாள் என்னும் தியாகத்திருநாள் கொண்டாடப்படுகிறது  என தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்கள் .

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்தல் ஆகியவற்றை செவ்வாய்க்கிழமை முதல் வாக்குச்சாவடி மையத்திலேயே மேற்கொள்ளலாம் என ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருவாரூர், திருத்துறைப்பூண்டி (தனி), மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2016 ஆம் ஆண்டுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படுகிறது.
இந்த பட்டியல் திருவாரூர் மற்றும் மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் செவ்வாய்க்கிழமை முதல் பார்வைக்கு வைக்கப்படும்.தவிர, செப். 19, 30 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்திலும் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
வரும் ஜனவரி 1-ம் தேதியன்று 18 வயது நிரம்பும் வாக்காளர்கள் தங்களது பெயர்களை படிவம் 6ஐ இந்த அலுவலகங்களில் நிரப்பிக் கொடுத்து சேர்த்துக் கொள்ளலாம். பட்டியலில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ள படிவம் 8, தொகுதிக்குள் இடம் மாற்றத்துக்கு படிவம் 8ஏ, இறந்தவரின் பெயரை நீக்க படிவம் 7 ஆகியவற்றை அளிக்க வேண்டும்.
இந்தப் பணி வரும் செப். 15 முதல் அக். 14 வரை நடைபெறும். மேலும், செப். 20 மற்றும் அக்டோபர் 4 ஆகிய இரு நாள்கள் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படும். இவற்றிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ளலாம்.  இணையதளத்திலும் இதே திருத்தப் பணிகளை மேற்கொள்ளலாம்.

Monday 14 September 2015

திருவாரூர் - தஞ்சை சாலை சீரமைக்கப்படுமா?


பள்ளம், மேடாக மிக மோசமான நிலையில் உள்ள திருவாரூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
சுமார் 88 கி.மீ. தொலைவுள்ள தஞ்சாவூர் - திருவாரூர் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்து, லாரிகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
குறிப்பாக, காரைக்கால் துறைமுகத்துக்கு சுமை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களும், வேளாங்கண்ணி, நாகூர் தர்கா, திருவாரூர் தியாகராஜர் கோயில்களில் நடைபெறும் விழாக்களின்போது லட்சக்கணக்கான மக்கள் இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.
தற்போது இச்சாலை அதிகளவில் சேதமடைந்து பள்ளம், மேடாக காட்சியளிக்கிறது.
திருவாரூர் அருகே நீடாமங்கலம் முதல் கொரடாச்சேரி வரையிலான சுமார் 10
கி.மீ.ó தொலைவு சாலை மிகவும் மோசமான நிலையில் பள்ளம், மேடாக உள்ளது. அதனால், வெளியூர்களிலிருந்து வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். அதுவும் இரவு நேரங்களில் இச்சாலையில் பேருந்து ஓட்டுநர்கள்கூட பேருந்தை இயக்க தடுமாறும் நிலை உள்ளது.
சேதமடைந்துள்ள சாலையின் ஒருபுறத்தில் ஆறும், மறுபுறத்தில் வயலும் உள்ளதால் சிறு விபத்து ஏற்பட்டாலும் இழப்புகள் அதிகம் இருக்கும்.
தற்போது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான முதற் கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளன.
இப்பணிகள் முடிவடைய குறைந்தது இரண்டு முதல் 3 ஆண்டுகள் ஆகும் என்பதால், சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Sunday 13 September 2015

நமதூர் மௌத் அறிவிப்பு 13/9/2015

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


நமதூர் தாஜ்பிராக்ஷா தெரு (மேலத்தெரு) கடிகாரக்கார வீட்டு ஜனாப் ஆலம்கீர் அவர்கள் மெளத்.

அன்னாரின் ஜனாஸா 14/9/2015திங்கள் காலை 10 மணிக்கு நமது மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும் .

வெளிநாட்டுக்கு சம்பாதிக்கச் சென்று சடலங்களாக திரும்பும் தமிழர்கள்: ஆண்டுக்கு சுமார் 275 உடல்கள் வருகின்றன

கோப்பு படம்











வேலைக்காக வெளிநாடு செல்லும் தமிழர்களில் சிலர் பல்வேறு காரணங்களால் இறக்கின்றனர். அந்த வகையில் ஆண்டுக்கு சுமார் 275 பேரின் சடலங்கள் திருச்சி விமான நிலையம் வழியாக கொண்டுவரப்படுகின்றன.
அதிகம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் வீடு, நிலங்களை விற்றும், வட்டிக்கு கடன் வாங்கியும் லட்சக் கணக்கில் பணம் செலுத்தியும் தமிழகத்தைச் சேர்ந்த பலர் சிங்கப்பூர், மலேசியா, சவுதி, குவைத், மஸ்கட் உள்ளிட்ட நாடு களுக்கு வேலைக்குச் செல்கின் றனர். இவர்களில் சிலருக்கு மட்டுமே ஏஜென்ட்டுகள் கூறியபடி நல்ல வேலை அமைகிறது.
பெரும்பாலானோர் குறைந்த ஊதியத்திலும், கொத்தடிமைகளாக வும் அங்கு பணியாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. பாதியில் திரும்பினால் வாங்கிய கடனைக்கூட அடைக்க முடியாதே என்பதால், நிர்பந்தத்தின் காரணமாக அவர்கள் வெளிநாடுகளில் தொடர்ந்து பணி யாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
குடும்பத்துக்காக இப்படி தன் னையே வருத்தி உழைக்கும் இவர்களில் பலர் வெயில் தாங்கா மலும், விபத்துகளில் சிக்கியும், உடல்நலக்குறைவாலும் அங் கேயே இறப்பை சந்திக்கும் துயர நிகழ்வு அதிகரித்து வருகிறது. பணம் சம்பாதிக்கச் சென்ற மகனோ, கணவரோ சடலமாகத் திரும்பு வதைப் பார்த்து குடும்பத்தினர் கதறித் துடிக்கும் பரிதாபம் திருச்சி விமான நிலையத்தில் ஏறக்குறைய அன்றாட நிகழ்வாகிவிட்டது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை விமானநிலையங் களைவிட பல மடங்கு அதிகமான சடலங்கள் திருச்சி விமான நிலையம் மூலம் கொண்டுவரப்படுகிறது.
இதுபற்றி விமான நிலைய கார்கோ பிரிவு அதிகாரிகள் கூறும் போது, “திருச்சி சர்வதேச விமான நிலையம் ஏற்றுமதியில் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதை எண்ணி பெருமைப்படும் அதே வேளையில், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்படும் சடலங்களின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிக ரித்து வருவது மிகுந்த வேதனை யாக உள்ளது. ஆண்டுக்கு சுமார் 275 சடலங்கள் விமானம் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன. இவர்களில் பெரும் பாலானவர்கள் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
கடந்த 2014-15-ம் நிதியாண் டில் 272 சடலங்கள் திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட் டுள்ளன. நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களில் 110 சடலங்கள் திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
பல்வேறு காரணங்களால் இறந்தவர்களின் சடலங்களை வெளிநாடுகளிலிருந்து இங்கு கொண்டு வருவதற்கு ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கான சுமைக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படு கிறது. சுங்கத் துறையின் தீர்வைக் கட்டணம், சேவைக் கட்டணம், விமான நிலைய ஆணையக் குழுமத்தின் கையாளும் கட்டணம் என எதுவும் வசூலிப்பதில்லை” என்றனர்.
விமான நிலைய மருத்துவ பிரிவி னர் கூறும்போது, “வெளிநாடு களில் இருந்து கொண்டுவரப்படும் சடலத்துடன், இறந்தவர் வேலை பார்த்த நாட்டின் இறப்புச் சான்றிதழ், தூதரக தடையில்லாச் சான்று, உடற்கூறு சான்றிதழ் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும். அதில் பெரும்பாலானவர்களின் மரணத் துக்கு காரணம் உடல்நலக்குறைவு என்று குறிப்பிடப்பட்டிருக்கும். சிலரது மரணத்துக்கு விபத்து என காரணம் குறிப்பிடப்பட்டிருக்கும். கொலை செய்யப்பட்டு கொண்டு வருவது மிகக் குறைவு.
இறந்தவர்களில் 35 முதல் 50 வயதுக்கு உட்பட்ட ஆண் களே அதிகம். பெண்களின் எண் ணிக்கை மிகக் குறைவு. இப்படி கொண்டுவரப்படும் சடலம், ஆய் வுக்குப்பின், சுங்கம் மற்றும் கார்கோ துறையினர் மூலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. தேவைப்படும் நபர்களுக்கு அரசின் இலவச அமரர் ஊர்தி ஏற்பாடு செய்து கொடுக்கிறோம்” என்றனர்.

ஆதார் அட்டை பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு


ஆதார் அட்டை பெற்றவர்களும், அதற்கு விண்ணப்பித்து ஆதார் எண் பெற்றவர்களும், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெ.குமரகுருபரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம் இணைய சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தலைமைச் செயலகம், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள் என மொத்தம் 337 இடங்களில் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த மையங்கள் மூலமாக, வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், திருமண நிதியுதவித் திட்டங்கள், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம் உள்பட பல்வேறு சேவைகளுக்கான மனுக்கள் பெறப்படுகின்றன.
இந்த சேவை மையங்கள் மூலமாக இதுவரை 13 லட்சத்து 28 ஆயிரத்து 647 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு, தொடர்புடைய துறைகளுக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தலைமைச் செயலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள இணைய சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை பெறுவதற்காக ஏற்கெனவே விண்ணப்பித்து, அதற்கான பதிவு எண்ணை மட்டும் பெற்றிருந்து, ஆதார் எண் தெரியாவிட்டாலும் பிளாஸ்டிக் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். 14 இலக்க எண்ணைத் தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக ஒரு அட்டைக்கு ரூ. 40 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஏற்கெனவே ஆதார் எண்ணைப் பெற்றவர்கள், தங்களது ஆதார் எண்ணைத் தெரிவித்தால், அவர்கள் உடனடியாக பிளாஸ்டிக் அட்டையைப் பெறலாம். இதற்கு ரூ. 30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவரை 3 லட்சத்து 77 ஆயிரத்து 153 பேருக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், 15 மண்டல அலுவலகங்களில் அமைக்கப்பட்ட மையங்கள் மூலம் 38,014 பேர் சொத்து வரியைச் செலுத்தியுள்ளனர் என்று குமரகுருபரன் தெரிவித்தார்.

Saturday 12 September 2015

மெக்கா மசூதியில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து: 100-க்கும் மேற்பட்டோர் பலி

சவுதி அரேபியாவின் மெக்கா பெரிய மசூதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) ராட்சத கிரேன் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 107 பேர் பலியாகினர். 238 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கு குறைவாகவே இருக்கும் நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
2 இந்தியர்கள் பலி:
இந்த விபத்தில் இரண்டு இந்தியர்கள் பலியானது உறுதி செய்யப்பட்டது. வெளியுறவு அமைச்சகம் இதனை உறுதி செய்துள்ளத்யு, 15 இந்தியர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் கூறியதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, "மெக்கா விபத்தில் 9 இந்தியர்கள் காயமடைந்தது தெரியவந்துள்ளது. இன்னும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன" என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், இந்திய மருத்துவர்கள் மெக்காவுக்கு விரைந்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், கடைசியாக பெறப்பட்ட தகவலின்படி 2 இந்தியர்கள் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹெல்ப்லைன் எண்கள்:
இந்திய அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள 24 மணி நேர ஹெல்ப்லைன் எண்கள்
00966125458000
00966125496000
சவுதியில் உள்ள புனித யாத்திரிகர்கள் தொடர்புகொள்ள வசதியாக அமைக்கப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி சேவை எண்: 8002477786
மசூதி விரிவாக்கம்:
மெக்காவில் புனித யாத்திரிகர்கள் கூட்ட நெரிசல் ஏற்பட்டு கடந்த 2006-ம் ஆண்டு பெரும் விபத்து ஏற்படுத்தப்பட்டது. இதனையடுத்து மெக்காவில் ஆண்டுதோறும் அனுமதிக்கப்படும் புனித யாத்திரிகர்களின் எண்ணிக்கையை சவுதி அரசு கண்காணிக்கத் தொடங்கியது. மேலும், எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் தொடங்கியது. இருப்பினும், மெக்கா செல்லும் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. யாத்திரிகர்களை சமாளிக்க கூடுதல் வசதிகளை செய்ய வசதியாக மெக்காவில் கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஒரே நேரத்தில் 22 லட்சம் பேர் கூடும் வகையில், பெரிய மசூதியை 4 லட்சம் சதுர மீட்டர் அளவுக்கு விரிவாக்கும் பணிகள் நடைபெறுகின்றன. கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் ஒன்று திடீரென அறுந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
விபத்து நடந்தது எப்படி?
விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து மெக்கா மசூதியின் நிர்வாகத் துறை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "பெரிய மசூதியின் மையத்தில் கருப்பு நிறத்திலான காபா எனப்படும் கனசதுர வடிவிலான வழிபாட்டு கட்டமைப்பு இருக்கிறது. அதனைச் சுற்றி லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு தொழுகை நடத்துவர். அந்த கட்டமைப்பு மீது ராட்சத கிரேன் எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்துள்ளது" என்றார்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை:
சவுதி அரேபியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் சுலைமான் அல் அமீர் கூறும்போது, "விபத்தில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்துப் பகுதியில் இருந்து சடலங்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன" என்றார்.
குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்:
மெக்கா மசூதி விபத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரணாப் முகர்ஜி, "மெக்காவில் கிரேன் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஹமீது அன்சாரி வருத்தம்:
குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மெக்கா விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தையை உரித்தாக்குவதாக ஹமீது அன்சாரி குறிப்பிட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி இரங்கல்:
இதேபோல் பிரதமர் நரேந்திர மோடியும் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மெக்கா விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணம் பெற வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கிரேன் விழுந்த வீடியோ பதிவு

Friday 11 September 2015

சட்டப்பேரவை தேர்தல் 2016: வரைவு வாக்காளர் பட்டியல் செப். 15-இல் வெளியீடு

தமிழகத்தில் 5.68 கோடி வாக்காளர்களைக் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 15-ஆம் தேதி வெளியிடப்படும் என, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவித்தார்.
 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்குவதற்கான சிறப்பு முகாம்கள் செப்டம்பர் 20, அக்டோபர் 4-ஆம் தேதி நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
 இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 மத்திய தேர்தல் ஆணையம் 01.01.2016-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு, சட்டப்பேரவைத் தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல்களில் திருத்தத்தை அறிவித்துள்ளது.
 அனைத்து மாவட்டங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட 28,850 வாக்குச்சாவடிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியிடப்படும்.
.
 வாக்காளர் பட்டியல் நகலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வழங்குவர். 2015, ஜனவரி 5-ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 5.62 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.
 கடந்த 06.01.2015 முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் கோரிய 9.25 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இவற்றில் 4.20 லட்சம் வாக்காளர்கள் புதிய வாக்காளர்கள், 5.05 லட்சம் வாக்காளர்கள் இடம்பெயர்ந்தவர்கள் ஆவர். இறப்பு, இடம்பெயர்வு, இருமுறை பதிவு போன்ற காரணங்களால் வரையறைகளுக்கு உள்பட்டு 3.15 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. வரும் 15-ஆம் தேதி வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் இப்போது 5.68 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
 கிராம சபை, உள்ளாட்சி மன்றம், குடியிருப்போர் நலச் சங்க கூட்டங்களில் செப்டம்பர் 16, 30 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலின் தொடர்புடைய பாகங்கள் படிக்கப்பட்டு, பெயர்கள் சரிபார்க்கப்படும்.
 மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க, நீக்குவதற்கான சிறப்பு முகாம்கள் செப்டம்பர் 20, அக்டோபர் 4 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, இடம் மாற்றத்துக்கான படிவங்கள் அங்கே கிடைக்கும். பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம்.
 25 வயதுக்கு கீழுள்ள மனுதாரர்கள் வயதுச் சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். elections.tn.gov.ineregistration என்ற இணையதள முகவரி மூலமாக இணைய வழியில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என்று சந்தீப் சக்சேனா குறிப்பிட்டுள்ளார்.
 அனைத்துக் கட்சிக் கூட்டம்: முன்னதாக, வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக சென்னையில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவை தேர்தல்