Thursday 31 March 2016

ரூ. 25 செலுத்தி புதிய வாக்காளர் அடையாள அட்டை பெறலாம்'


திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்காளர் சேவை மையத்தில் ரூ. 25 செலுத்தி புதிய வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என்று ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேவை மையம் மூலம் வாக்காளர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகிய பணிகள் மேற்கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதையும் அறிந்து கொள்ளலாம். மேலும், சேதமடைந்துள்ள அல்லது காணாமல்போன வாக்காளர் அடையாள அட்டைகளுக்குப் பதிலாக ரூ. 25 செலுத்தி 15 நாள்களுக்குள் புதிய வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

Wednesday 30 March 2016

குழந்தையின் சுவாசக் குழாயில் சிக்கிய "ஹேர்கிளிப்' நவீன சிகிச்சை மூலம் அகற்றம்



திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு வயது குழந்தையின் சுவாசக் குழாயில் சிக்கியிருந்த "ஹேர்கிளிப்' நவீன சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
மயிலாடுதுறை கொடங்குடியைச் சேர்ந்த தம்பதி ராஜேஸ்வரி-சந்தானம். இவர்களது ஒரு வயது மகள் சுபஸ்ரீ ஹோர்கிளிப்பை விழுங்கிவிட்டார். அது குழந்தையின் சுவாசக் குழாயில் சிக்கிக் கொண்டதால், குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால், சுபஸ்ரீயை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேர்த்தனர்.
இதைத்தொடர்ந்து, அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் சுந்தர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அகநோக்கி கருவி மூலம் குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த ஹேர்கிளிப்பை அகற்றினர். தற்போது குழந்தை சுபஸ்ரீ நலமுடன் உள்ளார். இந்த சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவக் குழுவினரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் பாராட்டினார்.

தேர்தல் விதிமீறல்கள்: கட்செவி அஞ்சலில் புகார் தெரிவிக்கலாம்:ஆட்சியர்



தேர்தல் விதிமீறல்கள் குறித்து கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான எம்.மதிவாணன் தெரிவித்துள்ளார்.
ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் சேவை மையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த ஆட்சியர் மேலும் கூறியதாவது:
ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க இலவச தொலைபேசி வசதியுடன் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 1800-425-7035 என்ற இந்த தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், தேர்தல் ஆணைய இணையதளத்தில் அளிக்கப்படும் புகார்களுக்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வரும் 7339661879 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கும் கட்செவி அஞ்சல் மூலம் ஒளிப்பதிவுகளாகவும், குறுந்தகவல்களாகவும் புகார்களை தெரிவிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் குறித்த தகவல்களையும், பிரசாரத்தின்போது சம்பந்தப்பட்ட வாகனங்கள் அனுமதி பெற்றுள்ளதா என்பதையும் 1950 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி, தகவல்களை பெறலாம் என்றார் ஆட்சியர் எம்.மதிவாணன்.

Tuesday 29 March 2016

திருவாரூரில் நிதி நிறுவனங்களிலிருந்து ரூ.72.27 லட்சம் பறிமுதல்

திருவாரூரில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்குவதற்காக தனியார் நிதி நிறுவனங்களில் வைத்திருந்த ரூ.72 லட்சத்து 27 ஆயிரத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும்படை உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தனியார் நிதி நிறுவனங்கள் சார்பில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பணம் வழங்கப்படுவதாக தேர்தல் அலுவலருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், இரண்டு இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில் மொத்தம் ரூ. 72 லட்சத்து 27ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில், திருவாரூர் புதுதெருவில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.12லட்சத்து 35ஆயிரமும், திருவாரூர் அருகே புலிவலத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.59 லட்சத்து 92ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர், இந்தத் தொகை திருவாரூர் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துமீனாட்சி மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்தத் தொகையை சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களும் உரிய ஆவணங்களைக் காட்டி, பெற்றுக்கொள்ளலாம் என தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மன்னார்குடியில்...
மன்னார்குடியில் இரண்டு தனியார் நிதி நிறுவனங்களில் ரூ.45 லட்சத்து 85 ஆயிரத்தை தேர்தல் பறக்கும்படையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
மன்னார்குடி ஒன்றிய ஆணையர் வெங்கடேசன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் த.சிவானந்தம் உள்ளிட்ட தேர்தல் பறக்கும்படையினர் மன்னார்குடி மூன்றாம்தெரு பகுதியில் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது, அங்குள்ள தனியார் வணிக வளாகத்தில் தனியார் நிதி நிறுவனம் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு கடன் வழங்குவது தெரியவந்தது.
இதையடுத்து அந்நிறுவனத்திலிருந்து ரூ.43 லட்சத்து 5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் மன்னார்குடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான எஸ்.செல்வசுரபி மூலம் மன்னார்குடி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோல், மன்னார்குடி, நடுவாணியத்தெருவில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதற்காக வைத்திருந்த ரூ.2 லட்சத்து 79,940-ஐ தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். இந்த தொகையும் மன்னார்குடி சார்நிலை கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

Monday 28 March 2016

தமிழகத்தில் பாலைவனத்துக்கு நிகராக உணரப்படும் வெப்பம்


சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க துணியால் முகத்தை மூடியபடி குடைபிடித்துச் செல்லும் கல்லூரி மாணவிகள், படம்: ம.பிரபு

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பாலைவனத்துக்கு நிகரான வெப்பம் தற்போது உணரப்படுகிறது. கோடையின் முக்கிய நாட்கள் வருவதற்கு முன்பே, வெப்பத்தின் அளவு மிக அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் சராசரியாக 31 டிகிரி செல்சியஸ் முதல் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருப்பதால் மதுரை, வேலூர், சென்னை, திருநெல்வேலி மாவட்டங்களில் வெப்பத்தின் உக்கிரத்தால் சாலைகளில் மக்கள் நடக்க முடியாமலும், இரவில் தூங்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். வெயிலால் கான்
கிரீட் கட்டிடங்களில் வெப்பம் அதிகரித்து, அதன் தொடர்ச்சியாக மின் பயன்பாடும் அதிகமாகி, இரவு நேரத்தில் மின்வெட்டு ஏற்படத் தொடங்கி உள்ளது.
நீர்மட்டம் குறையும்
மதுரையில் கடந்த ஒரு மாதமாகவே கோடை வெயில் சுட்டெரிக்கிறது. சில நாட்களுக்கு முன் வெயிலுக்கு மயங்கி விழுந்து 2 பேர் இறந்தனர். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்பத்தின் அளவு மேலும் உயர வாய்ப்புள்ளது.
இதுகுறித்து காந்திகிராம பல்கலைக்கழக புவி அறிவியல் மைய பேராசிரியர் பா.குருஞானம் கூறும் போது, ‘‘குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே, கடந்த ஆண்டு மழை வெள்ளம் ஏற்பட்டது. பெரும் பாலான மாவட்டங்களில் சரியான மழை பொழிவில்லை. அதனால், பூமிக்கு மேலும், கீழும் தண்ணீரின் அளவு தற்போது குறைந்துவிட்டது. வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. தற்போது நிலத்தடி நீர்மட்டத்தை ஆய்வு செய்தால் குறைவாகத்தான் இருக்கும்” என்றார்.
வேளாண் பொறியாளர் செபாஸ்டின் பிரிட்டோராஜ் கூறும் போது, ‘‘கடந்த ஆண்டு, இதே நேரத்தில் (ஜனவரி முதல் தற்போது வரை) 90 முதல் 150 மி.மீ. மழை பெய்த நிலையில், இந்த ஆண்டு தற்போது வரை ஒரு மி.மீ. மழைகூட பெய்யவில்லை. காற்றின் ஈரப்பதத்தின் அளவு 86 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும், காற்றின் வேகமும், ஒரு மணிக்கு 8 முதல் 16 கி.மீ. வேகத்தில், தெற்கு பகுதியில் இருந்து வடக்கு நோக்கி வீசுகிறது. இது வளிமண்டலத்தில் உள்ள வெப்பத்தின் அதிகரிப்பையையே உணர்த்துகிறது.
விவசாயம் பாதிக்க வாய்ப்பு
புறஊதா கதிர்களின் தாக்கத்தால் விவசாயத்தில் நுனி கருகல் நோய் போன்ற வெப்பத்துக்கு ஈடு கொடுக்க முடியாத அனைத்து நோய்களும் உருவாக வாய்ப்புள் ளது. நகரப்புறங்களில் அருகில் உள்ள நீர்நிலைகள் வறண்டு வேதி நச்சுப் பொருட்கள், அடி மண்ணுடன் கலந்து கொசு பெருக்கம் அதிகமாகி தொற்று நோய் அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.
கோடை வெயிலை எப்படி சமாளிக்கலாம்?
செபாஸ்டின் பிரிட்டோராஜ் மேலும் கூறும் போது, "ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தலா இரண்டு முதல் ஐந்து மழை நாட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த மழைநீரை சேகரிப்பது வறட்சியை ஈடுகொடுக்க நாம் செய்யும் முதல் செயலாகும். விவசாய நிலங்களில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே பாசனம் மேற்கொள்ள வேண்டும். சொட்டுநீர் பாசனம் மற்றும் வாய்மடை வரை பிளாஸ்டிக் குழாய்கள் அமைத்து நீர் பாய்ச்ச வேண்டும். வெயில் காலங்களில் வேதி உரங்களை தவிர்க்க வேண்டும். இவை எளிதாக உப்பாக மாறி, நிலத்தடியில் நீர் சொல்வதை தடுத்துவிடும். மீன் குட்டைகளில் நிழல் கூரை அமைப்பதால் மீன் உற்பத்தியை அழியாமல் பாதுகாக்கலாம், வீட்டுத் தோட்டங்கள் அமைத்திருப்போர் நிழல் கூரைகளைப் பயன்படுத்த வேண்டும்" என்றார்.

Sunday 27 March 2016

kodikkalpalayam : மத்லபுல் கைராத் மழலையர் பள்ளி 10ம் ஆண்டு விழா

நமதூர் மத்லபுல் கைராத் மழலையர் பள்ளியில் 10ம் ஆண்டு விழா  26/03/2016 அன்று சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நமதூர் முஹ்யத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை  ஜமாஅத் தலைவர் ஜலாலுதீன் தலைமையில் நடைபெற்றது .இதில் பள்ளி யின் தலைவர் கலிலூர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினர் .பள்ளியின் செயலாளர் முஹம்மது ஆதம் ஆண்டு அறிக்கை வாசித்தார் .சிறப்பு பேச்சாளர் விவேகானந்தன் ,உதவி தொடக்ககல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் பள்ளியின் ஆலோசகர் சேக்  முஹம்மது  உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார் .பின்னர் பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் எழிலரசி நன்றி கூறினர் .





Saturday 26 March 2016

16 வாக்குச்சாவடி மையங்கள் மாதிரி மையங்களாகத் தேர்வு


திருவாரூர் மாவட்டத்தில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா நான்கு வாக்குச்சாவடி மையங்கள் மாதிரி வாக்குச்சாவடி மையங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்று மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான எம்.மதிவாணன் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
திருவாரூர் மாவட்டத்தில், நகரப் பகுதிகளில் 1,400, கிராமப்புறங்களில் 1,200-க்கும் மேல் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடிகளைப் பிரித்து, துணை வாக்குச்சாவடி அமைத்திடவும், நான்கு வாக்குச்சாவடிகளின் பெயர்களைத் திருத்தம் செய்யவும், 27 வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்யவும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, திருத்துறைப்பூண்டி தொகுதியில் கோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள 40-ஆம் எண் கொண்ட வாக்குச்சாவடியையும், திருவாரூர் தொகுதியில் விஜயபுரத்தில் 137-ஆம் எண் கொண்ட வாக்குச்சாவடியையும் பிரித்து பெண்களுக்கான புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதன்மூலம், திருவாரூர் மாவட்டத்தில் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,152-ஆக உயரும்.
மேலும், தொகுதிக்கு நான்கு வாக்குச்சாவடி மையங்களை மாதிரி வாக்குச்சாவடி மையங்களாக அமைத்திட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதன் அடிப்படையில், திருத்துறைப்பூண்டி தொகுதியில் கோட்டூர், பள்ளங்கோயில், திருத்துறைப்பூண்டி, எடையூர், மன்னார்குடி தொகுதியில் நீடாமங்கலம், மேலநாகை, மன்னார்குடி, இலக்கணம்பேட்டையும், திருவாரூர் தொகுதியில் கொரடாச்சேரி, விஜயபுரம், புலிவலம், மரக்கடையும், நன்னிலம் தொகுதியில் விருப்பாச்சிபுரம், குடவாசல், கோயில்திருமாளம், நன்னிலம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களும் மாதிரி வாக்குச்சாவடி மையங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மேலும், திருத்துறைப்பூண்டி தொகுதியில் 40-ஆவது வாக்குப்பதிவு மையமும், மன்னார்குடி தொகுதியில் 146-ஆவது மையமும், திருவாரூர் தொகுதியில் 137-ஆவது மையமும், நன்னிலம் தொகுதியில் 266-ஆவது மையமும் பெண்களுக்கான வாக்குப்பதிவு மையமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த மையங்களில் தேர்தல் அலுவலர்கள், போலீஸார், அரசியல் கட்சியின் முகவர்கள் ஆகியோர் பெண்களாகவே இருப்பார்கள். மாவட்டத்தில் இதுவரை தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ் மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Friday 25 March 2016

உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை






பேரளம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனைதமிழக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் 16–ந் தேதி நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 12 பறக்கும்படையினர், 12 நிலை கண்காணிப்புக்குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரளம் அருகே உள்ள கோவில்கந்தங்குடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து கொல்லுமாங்குடி நோக்கி வந்த ஒரு காரை பறக்கும் படையினர் மறித்து சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி காரில் ரூ.1 லட்சம் இருப்பது தெரியவந்தது.
ரூ.1 லட்சம் பறிமுதல்இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கொல்லுமாங்குடியை சேர்ந்த ஜாகீர்உசேன் என்பது தெரியவந்தது. பின்னர் நன்னிலம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அம்பிகாபதியிடம் பறிமுதல் செய்த பணத்தை பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். அவர் அப்பணத்தை கருவூலத்தில் செலுத்தினார்.
திருத்துறைப்பூண்டிஅதேபோல திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேம்குமார் தலைமையில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திருத்துறைப்பூண்டி–வேதாரண்யம் சாலையில் சங்கிலிவீரையன் கோவில் அருகில் தேர்தல் துணை தாசில்தார் காரல்மார்க்ஸ், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் வேதரத்தினம், ஏட்டுகள் மணிமாறன், ரமேஷ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார்சைக்கிளை பறக்கும் படையினர் மறித்து சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 7 செல்போன்கள், செல்போன் உதிரிபாகங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து செல்போன் மற்றும் உதிரிபாகங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து மோட்டார்சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ராகேஷ்(வயது24) என்பதும், வேதாரண்யத்தில் உள்ள செல்போன் கடைக்கு அவற்றை எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பொருட்களை திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Thursday 24 March 2016

வேலைவாய்ப்பு பதிவு மூப்பை இணையதளத்தில் அறியலாம்


வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு மூப்பின் நிலையை www.tn.gov.inemployment என்ற இணையதளத்தில் அறியலாம்.
 அனைவரும் தங்களது படிப்பு குறித்த விவரங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர். இதுதவிர, கூடுதல் படிப்புகளையும் பதிந்தும், முந்தைய பதிவை அவ்வப்போது புதுப்பிக்கவும் செய்கின்றனர். இந்த பதிவு மூப்பின் நிலவரத்தை இணையதளத்தில் தெரிந்துகொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.

Wednesday 23 March 2016

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.2.90 லட்சம் பறிமுதல்

திருவாரூரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.2.90 லட்சம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 4 பேரவைத் தொகுதிகளில் 12 பறக்கும்படை, 12 நிலை கண்காணிப்புக்குழுவினர் சோதனை செய்து வருகின்றனர். செவ்வாய்க்கிழமை திருவாரூர் வட்டாட்சியர் தில்லை நடராஜன் தலைமையில், வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேன் ஒன்றில் ரூ. 1.15 லட்சம் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், தஞ்சாவூர் - நாகப்பட்டினம் சாலை கிடாரங்கொண்டான் திருவிக கல்லூரி அருகில் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாமக்கல்லிருந்து காரைக்காலில் முட்டை விற்பனை செய்து விட்டு உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1.75 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்த பணம் திருவாரூர் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரா. முத்துமீனாட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு பிறகு மாவட்ட கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. உரிய ஆவணங்களைக் கொடுத்து பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.

Tuesday 22 March 2016

கொடிக்கால்பாளையத்தில் பெயர்ப் பதாகை வைப்பதில் தகராறு

திருவாரூரில் பெயர்ப் பதாகை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் கொடிக்கால்பாளையத்தில் ஆட்டோ ஒட்டுநர்கள் சங்கம் இரு பிரிவுகளாக உள்ளது. இந்நிலையில், பேருந்து நிறுத்தத்தில் சங்கத்தின் பெயர்ப் பதாகை வைப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து திருவாரூர் நகரக் காவல் நிலையப் போலீஸார் கொடிக்கால்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரம்ஜான்அலி, ஜலிலுல்லா, முகமது ஹாஜா, ஆபுதீன், பாட்சா, சுல்தான், முகமது அபுதாகீர், ஷாகுல் அமீது, ஜகபர், முகமது இசாத் ஆகிய 10 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Monday 21 March 2016

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி தீவிரம்:இணையதளத்தில் 1.18 லட்சம் பேர் விண்ணப்பிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. பட்டியலில் பெயர் சேர்க்க 1.18 லட்சம் பேர் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளர்.
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20-இல் வெளியிடப்பட்டது. இருப்பினும், பெயர் சேர்க்க இணையதளம் மூலம் ஏப்ரல் வரை விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
363 சேவை மையங்கள்: இதற்காக வட்டாட்சியர், வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் (ஆர்.டி.ஓ), மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ளிட்ட இடங்களில் 363 சேவை மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், திருத்தங்கள் செய்தல், புதிதாக வாக்காளர் அடையாள அட்டை, பழைய அட்டையை மாற்றுதல் உள்ளிட்டவற்றுக்கு எளிய முறையில் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு வண்ண வாக்காளர் அட்டை இலவசமாகவும், அட்டையை மாற்ற வேண்டுமென்றால் ரூ.25 கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஆகவே, புதிய அட்டைகளைப் பெற ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதுதவிர, மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்லூரிகள் மூலமும், தனியார் இணையதள மையங்கள் மூலமும் விண்ணப்பித்து வருகின்றனர். குறிப்பாக, மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை ஆர்வம் அதிகமாக உள்ளது.
ஞாயிற்றுக்கிழமையும் இயங்கிய மையங்கள்: அனைத்து வாக்காளர்களின் பெயரைச் சேர்க்கும் முயற்சியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதுதவிர, 100 சதவீதம் வாக்குப் பதிவு என்ற கோஷத்தையும் தேர்தல் ஆணையம் முன்வைத்து, பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்காக விழிப்புணர்வு பிரசாரங்களும் நடைபெறுகின்றன. இதனால் பட்டியலில் பெயர் சேர்க்க ஏராளமானோர் திரண்டுள்ளனர்.
விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மாலை 5 வரை சேவை மையங்கள் இயங்கின. இவற்றில் ஏராளமானோர் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.
1.18 லட்சம் பேர் விண்ணப்பிப்பு: 32 மாவட்டங்களில், இணையதளத்தில் பெயர் சேர்ப்பதற்காக மட்டும் இதுவரை மொத்தம் 1.18 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14,023 பேரும், குறைந்தபட்சமாக நீலகி மாவட்டத்தில் 455 பேரும் விண்ணப்பித்துள்ளர்.
பெயர் நீக்கம் செய்யக் கோரி மொத்தம் 1.70 லட்சம் பேரும், வாக்காளர் பட்டியல் விவரங்களை திருத்தம் செய்வதற்கு 74,328 பேரும், தொகுதிக்கு உள்ளேயே முகவரி மாற்றம் செய்ய 23,465 பேரும் விண்ணப்பித்துள்ளனர் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Sunday 20 March 2016

நமதூரின் சிறப்பு

அமேரிக்காவில் USA பள்ளியில் படித்துவரும் நமதூர் கொடிக்கால்பாளையம் மேலத்தெரு முகம்மது ஆதம் அவர்களுடைய மகள் வழி பேரண் முகம்மது முன்தஸீர் என்ற மாணவன் அமேரிக்க மாநில அளவிலான அறிவியல் ( science project) திட்டத்தில் மூன்று விருதுகளை பெற்றுள்ளார்.

அவருக்கு எமது வாழ்த்துக்களை தெறிவிப்பதோடு.
மேலும் முகம்மது முன்தஸீர் கல்வியில் சிறந்து விளங்கி தாய் தேசத்திற்க்கும் தமிழகத்திற்க்கும் சொந்த ஊருக்கும் இஸ்லாமிய சமுதாயத்திற்க்கும் பெருமை சேர்க்கவேண்டிடவும் அவரின் வளர்ச்சிக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோம்

Saturday 19 March 2016

பிபிஎப், சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் குறைப்பு

பிபிஎப் உட்பட சிறுசேமிப்புகள் மீதான வட்டி விகிதங்களை மத்திய அரசு குறைத்துள்ளது. | கோப்புப் படம்.
பிபிஎப் உட்பட சிறுசேமிப்புகள் மீதான வட்டி விகிதங்களை மத்திய அரசு குறைத்துள்ளது. | கோப்புப் படம்.
மத்திய அரசு பெரும்பாலான சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. பொது சேமநல நிதி (பிபிஎப்), கிஸான் விகாஸ் பத்திரம் மற்றும் தபால் துறை சேமிப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. 

பிபிஎப் திட்டத்துக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி விகிதம் 8.7 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல கிஸான் விகாஸ் பத்திரங்களுக்கு வழங்கப்படும் வட்டி 8.7 சதவீதத்திலிருந்து 7.8 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல தபால் அலுவலகத்தில் சேமிக்கப்படும் கால வரையறையுடன் கூடிய சேமிப்புத் திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வழக்கமான சேமிப்புக்கு வழங்கப்படும் 4 சதவீத வட்டி விகிதத்தில் எவ்வித மாறுதலும் செய்யப்படவில்லை.

தபால் அலுவலக சேமிப்புகளுக்கு ஓராண்டுக்கு 8.4 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் தற்போது 7.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டு சேமிப்புக்கு 8.5 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 7.9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளில் முதிர்வடையும் தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கு (என்எஸ்சி) வழங்கப்படும் வட்டி விகிதம் 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகளில் முதிர்வடையும் சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் 9.3 சதவீதத்திலிருந்து 8.6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டத்துக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 9.2 சதவீதத்திலிருந்து 8.6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சிறுசேமிப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி திருத்தியமைக்கப்டப்ட வட்டி விகிதம் ஏப்ர 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.

பிப்ரவரி 16-ம் தேதி அரசு வெளியிட்ட அறிவிப்பில் சந்தை நிலவரத்துக்கேற்ப சிறு சேமிப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படும் என தெரிவித்திருந்தது. அப்போது சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்தது. இந்த வட்டிக் குறைப்பு தபால் அலுவலக சேமிப்புகளுக்கும் பொருந்தும் என தெரிவித்தது. அப்போது நீண்டகால முதலீட்டுத் திட்டங்களான மாதாந்திர முதலீட்டுத் திட்டம், பிபிஎப், மூத்த குடிமக்கள், பெண் குழந்தை முதலீட்டுத் திட்டங்களுக்கான வட்டி குறைக்கப்படவில்லை.

திருவாரூரில் வாகன சோதனை: குற்ற வழக்குகளில் தொடர்புடைய 7 பேர் கைது
















திருவாரூரில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்தனர். 

7 பேர் கைது

திருவாரூரில் குற்ற செயல்களை தடுத்திடவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் உத்தரவின்படி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் முத்தரசு, அப்துல்லா மேற்பார்வையில் 5 துணை சூப்பிரண்டு தலைமையில், 15 இன்ஸ்பெக்டர்கள்¢, 150 போலீசார் கொண்ட தனிப்படையினர் திருவாரூர் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது நகரின் எல்லைகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை செய்தனர். இந்த சோதனையில் சந்தேகத்த்துக்குரிய 25 பேரிடம் உரிய கைரேகை பதிவு செய்யப்பட்டன. இதில் 14 குற்ற வழக்குகளில் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

விடுதிகளில் சோதனை

மேலும் தங்கும் விடுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்குரியவர்களிடம் விசாரணை நடத்தினர். இதேபோல சி.டி. விற்பனை கடைகளிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் உரிய அனுமதியின்றி தங்கமகன், வேதாளம், ரஜினிமுருகன், தாரைதப்பட்டை போன்ற புதுப்பட சிடிக்களை விற்பனை செய்வது தெரியவந்ததது.

இதுதொடர்பாக திருவாரூர் காட்டூரை சேர்ந்த பாபு (வயது20), பாலகிருஷ்ணன் (38), திருவாரூர் ஆசாத் தெருவை சேர்ந்த ராஜேஷ் (27), காட்டுக்கார தெருவை சேர்ந்த மதிவாணன் (28), கடைகளில் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் திருவாரூரை சேர்ந்த சவுந்தராஜன் (52) என்பவரை தேடி வருகின்றனர். இவர்களிடம் இருந்து 91 புதுப்பட சிடிக்களை பறிமுதல் செய்தனர்.

நன்னிலம்

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க பறக்கும் படையினர் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருபிரிவை சேர்ந்த நன்னிலம் சட்டமன்ற தொகுதி பறக்கும்படை அதிகாரி ஆறுமுகம், மண்டல அலுவலர் தமிழ்ச்செல்வன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஏட்டுகள் செல்வகுமார், சுதாகர் ஆகியோர் திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் உள்ள சன்னாநல்லூர், கொல்லாபுரம், கொல்லுமாங்குடி ஆகிய பகுதிகளில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கார், ஆம்னிபஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களில் தீவிர சோதனை நடத்தினர்
.

Friday 18 March 2016

tnelections2016: திருவாரூர் விடுதிகளில் காவல் துறையினர் சோதனை


சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திருவாரூர் விடுதிகளில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மே மாதம் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், தற்போது தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது. இதையொட்டி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த.ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில், திருவாரூர் துணைக் காவல் கண்காணிப்பு பகுதிக்குள்பட்ட இடங்களில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஆர்.முத்தரசு, அப்துல்லா ஆகியோர் தலைமையில் 5 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 15 காவல் ஆய்வாளர்கள், 150 போலீஸார் திருவாரூர் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் வியாழக்கிழமை தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், திரையரங்குகள், சிடி விற்பனை கடைகளிலும் சோதனை நடத்தினர்.
தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் வருகிறவர்களிடமும் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல், மாவட்டத்தின் பிற துணைக் காவல் கண்காணிப்புப் பகுதிக்குள்பட்ட இடங்களில் அடுத்தடுத்த நாள்களில் சோதனையில் ஈடுபட உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

Thursday 17 March 2016

tnelections2016: திருவாரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்

திருவாரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கோட்டாச்சியர் முத்துமீனாட்சி 






















தேர்தல் ஆணைய இணையதளம் செயல்படாததால் அரசியல் கட்சிகள் தவிப்பு


பராமரிப்பு பணிகள் காரணமாக தேர்தல் ஆணையத்தின் இணையதளம் செயல்படாததால், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி பெறுவது உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்கொள்ள முடியாமல் அரசியல் கட்சியினர் தவித்து வருகின்றனர்.
 அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், கட்சிக் கூட்டங்களை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால், இந்த அனுமதியை அவர்கள் கட்டாயம் பெற்றாக வேண்டும். கடந்த தேர்தல்களில் இந்த அனுமதி பெறும் முறை, தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் விண்ணப்பித்து பெறும் அளவில் இருந்தது. 
 இணையதளம் மூலம்...: தற்போது பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 இந்த அறிவிப்பு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த, கடந்த 4-ஆம் தேதி முதல் செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவில் இருந்து தேர்தல் ஆணையத்தின் இணையதளமானது (www.tnelections.gov.in) பராமரிப்புப் பணிகள் காரணமாக செயல்படாமல் உள்ளது.
 இரண்டு நாள்கள் மட்டுமே இந்தப் பராமரிப்புப் பணிகள் நடைபெறும் எனவும், திங்கள்கிழமை (மார்ச் 14) முதல் இணையதளம் வழக்கம் போல் இயங்கும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால், புதன்கிழமை வரை இணையதளம் இயங்கவில்லை என பல்வேறு அரசியல் கட்சியினரும் புகார் தெரிவிக்கின்றனர்.
 என்ன பிரச்னை?: இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த உழவர் முன்னேற்ற கட்சி உள்ளிட்ட சில சுயேச்சை கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூறியது:
 வரும் 20-ஆம் தேதியன்று எங்கள் கட்சியின் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இதற்கான அனுமதியைப் பெற, தேர்தல் ஆணைய இணையதளத்தில் பலமுறை முயன்ற போதும் செயல்படவில்லை. இதன்பின் தேர்தல் அலுவலரிடம் விசாரித்த போது, இணையதள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக தெரிவித்தார்.
 பொதுக்கூட்ட அனுமதிக்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அறிவிப்பு சரியானது என்றாலும், அந்த இணையதளம் 24 மணிநேரமும் முழுமையான அளவில் இயங்க வேண்டும். அப்படி இயங்காத சமயங்களில், தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் விண்ணப்பித்து கடந்த தேர்தல்களின் போது பின்பற்றப்பட்ட நடைமுறைகளை கையாள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தேர்தல் விழிப்புணர்வு குறித்து விடியோ படக்காட்சி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்


திருவாரூர் பேருந்து நிலையத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த விழிப்புணர்வு விடியோ படக்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் எம்.மதிவாணன், படக்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசியது:
2016 பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும் விதத்தில் விழிப்புணர்வு பிரசாரம் செய்துவருகிறது. இப்பிரசாரங்கள் தொலைக்காட்சி, தேர்தல் ஆணையத்தின் இணையதளம், குறுந்தகவல், பேரணிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டச் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், மின்னணு விடியோ வாகனம் மூலம் விடியோ படக்காட்சி வாயிலாக, வாக்களிப்பதன் அவசியம் குறித்து பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
திரைப்பட நடிகர் கமலஹாசன், ஒரு சிறுதொகைக்காக நம் தன்மானத்தையும், எதிர்காலத்தையும் விற்றுவிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்ட விளம்பரம், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கமளிக்கும் விளம்பரப் படத்தொகுப்புகள் ஒளிபரப்பப்படுகின்றன.
மேலும், மனச்சாட்சிப்படி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், எந்த ஒரு அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல் வாக்களிக்க வேண்டும், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை பார்வையிட்டு, உடனடியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், குறித்த குறும்படங்களும், படித்திருந்தாலும், நகர்புற வாக்காளர்கள் வாக்களிக்க முன்வராவிட்டால் அது தவறு என்பது குறித்தும், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று, வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விழிப்புணர்வு விடியோ படக்காட்சி திருவாரூர் மாவட்டத்துக்குள்பட்ட நான்கு பேரவைத் தொகுதிகளிலும் நடைபெறும். மக்கள் அனைவரும் இதனைப் பார்த்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றார் மதிவாணன்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2016 தொடர்பாக தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லையை அரசு பேருந்துகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஒட்டப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் த.மோகன்ராஜ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முத்துமீனாட்சி (திருவாரூர்), அசோகன் (நன்னிலம்), செல்வசுரபி (மன்னார்குடி), பிரேம்குமார் (திருத்துறைப்பூண்டி), தனி வட்டாட்சியர் ரெங்கசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Wednesday 16 March 2016

புதிய வீட்டு வாடகைச் சட்டம்: மத்திய அரசு விரைவில் அறிமுகம்


புதிய வீட்டு வாடகைச் சட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. நகர்ப்புற வீட்டு வாடகைதாரர்கள், உரிமையாளர்களின் இப்போதைய தேவைகளுக்கு ஏற்ப இந்தச் சட்டம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு மக்களவையில் செவ்வாய்க்கிழமை இது தொடர்பாகக் கூறியதாவது: தேசிய நகர்ப்புற வாடகை வீடுகள் கொள்கையை வடிவமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இப்போது கிராமப் பகுதிகளில் இருந்து நகரங்களுக்கு குடிபெயர்வோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நகரங்களுக்கு வருவோரில் பெரும்பாலானோர் வாடகை வீடுகளில்தான் வசிக்கின்றனர்.
 
எனவே, நடப்புச் சூழ்நிலைக்கு ஏற்ப வாடகைக்கு குடியிருப்போர், வீட்டின் உரிமையாளர்கள் என இருதரப்புக்கும் பயனளிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும். இதற்கு எதிர்க்கட்சினரின் ஆதரவு தேவை.
 புதிய வாடகைச் சட்டத்துக்கான முன்வரைவு தயாரிக்கப்பட்ட பிறகு, மாநில அரசுகள் உள்பட சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், அவர்களின் கருத்துகளுக்கு ஏற்ப உரிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றார் வெங்கய்ய நாயுடு.

Tuesday 15 March 2016

திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை


 IST

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனசோதனையில் ஈடுபட்டனர்.
பறக்கும் படைதமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற மே மாதம் 16–ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 4–ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும் படையினர் வாகன சோதனை, அரசியல் கட்சி கொடி கம்பங்கள், அரசியல் விளம்பர பதாகைகளை அகற்றி வருகின்றனர்.
வாகன சோதனைஇந்த நிலையில் நேற்று திருவாரூர்–மயிலாடுதுறை சாலையில் சொரக்குடி அருகே நன்னிலம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி தமிழ்மணி, சிறப்பு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜன், கருணாகரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் அந்த வழியாக கார், ஆம்னி பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தீவிர சோதனை நடத்தினர். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம், பரிசு பொருட்கள் ஆகியவை கொண்டு செல்லப்படுகிறா? என்பது குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Monday 14 March 2016

ஆதார் மசோதா 2016-ல் அறிந்திட 10 அண்மைத் தகவல்கள்


ஆதார் மசோதா 2016’ மக்களவையில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. அது தொடர்பாக அறிய வேண்டிய அம்சங்கள்:
* ஆதார் மசோதாவை பண மசோதாவாக தாக்கல் செய்வதற்கு காங்கிரஸ் ஆட்சேபம் தெரிவித்தது. மாநிலங்களவையில் அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், அங்கு வாக்கெடுப்பை தவிர்க்கும் வகையில் ஆதார் மசோதாவை பண மசோதாவாக அரசு தாக்கல் செய்கிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
* பிஜு ஜனதா தளம் உறுப்பினர் பி.மஹதாப் பேசும்போது, “இந்த மசோதா தற்போதைய வடிவில் சட்டமானால் ஒருவரின் தனிப்பட்ட உரிமைகள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. எனவே இம் மசோதாவை நிலைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்” என்றார். மஹதாப் கருத்துக்கு காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜுன கார்கே, அதிமுக உறுப்பினர் பி.வேணுகோபால் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். கார்கே கூறும்போது, “ஆதார் மசோதாவை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் இதில் குறைபாடுகள் உள்ளன” என்றார்.
* நிதியமைச்சர் அருண் ஜேட்லி அளித்த பதிலின் அம்சங்கள்:
* “முந்தைய அரசு கடந்த 2010 செப்டம்பரில் ஆதார் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. டிசம்பரில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விவாதம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மசோதா முந்தைய ஆட்சியில் நிலைக்குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது.
* அரசு மானியத்தை முறைப்படுத்தவும் உண்மையான பயனாளிகளை அடையாளம் காணவும் இந்த மசோதா உதவும். இதன் மூலம் மானியச் செலவு குறையும். சமையல் எரிவாயு நுகர்வோருக்கு ஆதார் எண் மூலம் மானியம் வழங்குவதன் மூலம் மத்திய அரசு ரூ. 15 ஆயிரம் கோடி சேமித்துள்ளது.
* ஆதார் எண் அடிப்படையில் 4 மாநிலங்கள் பொது விநியோகத் திட்டத்தை சோதனை அடிப்படையில் தொடங்கியுள்ளன. இதன் மூலம் ரூ.2,300 கோடிக்கும் அதிகமாக சேமித்துள்ளனர்.
* விரல்ரேகை பதிவு உள்ளிட்ட ஆதார் விவரங்களை சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் இல்லாமல் யாருடனும் பகிர்ந்துகொள்ள மாட்டோம். இந்த மசோதாவின் காப்புரிமை தங்களுக்கு வேண்டும் என காங்கிரஸ் விரும்பினால் தரத் தயாராக இருக்கிறோம்.
* முந்தைய அரசின் மசோதாவை விட தற்போது மசோதா மாறுபட்டது. பயனாளிகளுக்காக பணத்தை எதன் அடிப்படையில் செலவிடுவது என்பதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கம். இதை வெறும் அடையாள ஆவண மாக நாங்கள் கருதவில்லை எனவே இதை பண மதோதாவாக தாக்கல் செய்தோம்.
* நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 97 சதவீதம் பேர் ஆதார் எண் பெற்றுள்ளனர். இதுபோல் 67 சதவீத மைனர்கள் ஆதார் பெற்றுள்ளனர். ஒவ்வொரு நாளும் 5 முதல் 7 லட்சம் பேர் ஆதார் எண் பெறுகின்றனர்” என்றார் ஜேட்லி.
எதிர்க்கட்சிகள் கோரிக்கை
* மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் அதன் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்று கோரின.
அமைச்சர் பதில்
* மாநிலங்களையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில், “ஆதார் திட்டத்தின் கீழ் 99 சதவீத இந்தியர்களின் பயோமெட்ரிக் விவரம் சேகரிக்கப்பட்டது. இதன் ரகசியம் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இந்த விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டோம். புள்ளிவிவரம் சேகரிக்கும் பணியில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடு படுத்தப்படவில்லை. பெங்களூரு, மானேசர் ஆகிய இடங்களில் உள்ள புள்ளிவிவர மையங்களில் இந்த விவரங்கள் பாதுகாக்கப்படும்” என்றார்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது; 11 லட்சத்து 20 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வை 11 லட்சத்து 20 ஆயிரத்து 749 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

நாளை தொடங்குகிறது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி ஏப்ரல் 13-ந்தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 12 ஆயிரத்து 53 பள்ளிகளில் இருந்து 10 லட்சத்து 72 ஆயிரத்து 185 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

ஆனால் கடந்த ஆண்டு இந்த ஆண்டைவிட 11 ஆயிரத்து 319 பேர் குறைவாக எழுதினார்கள்.

பள்ளிக்கூட மாணவர்கள் 5 லட்சத்து 51 ஆயிரத்து 301 பேர்களும், மாணவிகள் 5 லட்சத்து 20 ஆயிரத்து 884 பேர்களும் எழுதுகிறார்கள். அதாவது மாணவிகளை விட மாணவர்கள் 30 ஆயிரத்து 417 பேர் அதிகமாக எழுதுகிறார்கள்.

பள்ளிக்கூட மாணவ-மாணவிகளை தவிர, 48 ஆயிரத்து 564 பேர் தனித்தேர்வர்கள் எழுத இருக்கிறார்கள். பள்ளிக்கூட மாணவர்களும் தனித்தேர்வர்களும் சேர்த்து 11 லட்சத்து 20 ஆயிரத்து 749 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

தேர்வு மையங்கள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3 ஆயிரத்து 371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் மட்டும் 48 தேர்வு மையங்களில் 298 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 17 ஆயிரத்து 41 பேர் எழுதுகிறார்கள். சென்னையில் 574 பள்ளிகளில் இருந்து 53 ஆயிரத்து 159 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.

தமிழ் வழியில் படித்து 6 லட்சத்து 70 ஆயிரத்து 795 பேர் தேர்வு எழுத இருக்கிறார்கள்.

செல்போன்களை தேர்வு மையத்திற்குள் கொண்டுசெல்ல ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வினாத்தாளுக்கு பாதுகாப்பு

வினாத்தாள் கட்டுகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 350 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த மையங்களுக்கு 24 மணிநேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

தேர்வு எழுதுவோரை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறார்கள். தேர்வு மையங்களை பார்வையிட ஏதுவாக 6 ஆயிரத்து 600 பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.  

Sunday 13 March 2016

தேர்தல் நடத்தை விதிமுறைகளை அரசியல் கட்சியினர் கடைப்பிடிக்க வேண்டும்'


தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைத்து அரசியல் கட்சியினரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று திருவாரூர் கோட்டாட்சியர் இரா. முத்துமீனாட்சி கூறினார்.
திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் அவர் பேசியது:
வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது, மிரட்டுவது, ஆள்மாறாட்டம் செய்வது, வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் வாக்காளர்களுடைய  ஆதரைவக் கோரக்கூடாது.
வாக்குப் பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிகிற 48 மணிநேர கால அளவில் பொதுக் கூட்டங்களை நடத்துதல், வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வர போக்குவரத்து வசதி செய்து கொடுத்தல் மற்றும் வாக்காளர் சின்னங்களை குறிக்கும் விதமாக எத்தகைய பொருள்கள், காகிதத்துண்டுச் சீட்டுகள் வழங்குதல் போன்றவற்றை செய்யக்கூடாது.
அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களின் ஆதரவாளர்கள், பிற கட்சிகள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் இடையூறு செய்யக் கூடாது. போக்குவரத்தைக் கட்டுப்படுத்தச் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அவசியமான நடவடிக்கைகளைக் காவல்துறை மேற்கொள்ள அரசியல் கட்சி அல்லது வேட்பாளர் நடத்தும் கூட்ட இடம், நேரம் ஆகியவை குறித்து உரிய காலத்துக்கு முன்னதாகவே காவல்துறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
மேலும், கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட காலத்துக்கு மேல் கூட்டங்கள் நடத்தக் கூடாது. கூட்டம் நடத்த மாவட்ட தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும்.
பிரசாரத்துக்கு பயன்படுத்தும் வாகனங்களுக்கு அதில் அமைக்கப்பட உள்ள ஒலிபெருக்கி ஆகியவை குறித்து உரிய அனுமதியை வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் பெற வேண்டும்.
உரிமம் பெறாத பிரசார வாகனங்களை பறிமுதல் செய்து குற்றவியல் நடவடிக்கைக்கு உள்படுத்த வேண்டும். பிரசார வாகனத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது. அரசு பொது இடங்கள், கட்டடங்கள் ஆகியவைகளில் தேர்தல் விளம்பரம் எழுதுதல் கூடாது. சுவரொட்டிகள் ஏதும் ஒட்டக்கூடாது. கட்-அவுட்டுகள் வைக்கக் கூடாது. தனியார் கட்டடங்கள் மற்றும் சுவர்களில் அனுமதி ஏதும் பெறாமல் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது.
அரசு பொது கட்டடங்கள், சாலை குறியீட்டு பதாகைகள் சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் உள்ள சாலை வழிகாட்டி பலகைகள், நெடுஞ்சாலைகளிலுள்ள மைல்கற்கள், மேம்பாலங்கள் போன்ற இடங்களில் அரசு சொத்தில் தோற்றத்தை சீர்குலைப்பதில் ஈடுபட்ட அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மீது வழக்கு தொடரப்படும். இவ்வாறு பொதுத்துறை கட்டட சுவர்களில் எழுதப்பட்ட விளம்பரங்கள் விடியோ எடுத்து அவற்றை வெள்ளை அடித்தல் போன்ற நடவடிக்கைகள் காவல்துறையினரின் உதவியுடன் எடுத்து அகற்றப்படும். அதற்கான செலவினங்களை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளிடமிருந்தும் வேட்பாளர்களிடமிருந்தும் வசூலிப்பதுடன் அதனை சம்பந்தப்பட்ட வேட்பாளர் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் என்றார் முத்துமீனாட்சி.

Saturday 12 March 2016

திருவாரூர் மாவட்டத்தில் உரிமம் பெற்ற 251 துப்பாக்கிகள் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு


திருவாரூர் மாவட்டத்தில் உரிமம் பெற்ற 251 கைத்துப்பாக்கிகள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, மார்ச் 4 ஆம் தேதியிலிருந்து தேர்தல்  நடத்தை விதி அமலில் இருந்து வருவதால், மாவட்டத்தில் உரிமம் பெற்று வைத்துள்ள துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டுமென்று மாவட்டக்  காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, மாவட்டத்திலுள்ள 27 காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் அரசின் உரிமம் பெற்று வைத்திருந்த 251 கைத்துப்பாக்கிகளை அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர். தேர்தல் நடத்தை விதி நிறைவடைந்ததும் மீண்டும் துப்பாக்கிகள் உரியவர்களிடம் கொடுக்கப்படும்.

Friday 11 March 2016

‘பூத் சிலிப்’ இருந்தாலே ஓட்டுபோடலாம்; தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பேட்டி

வேட்பாளர்கள் அறிவிப்பதற்கு முன்பு அரசியல் கட்சிகள் செலவழிக்கப்படும் பணத்துக்கு வரம்பு கிடையாது. ஆனால் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகு செலவழிக்கப்படும் பணம் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும்.

அதற்காக இப்போதே வாகன அனுமதி பெற்று விட்டு அதை வேட்பாளர் பிரசாரத்தின்போது பயன்படுத்தினால் அது அந்த வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் வரை ரூ.37 லட்சத்து 95 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தபால் ஓட்டுகள்

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தபால் ஓட்டுகள் தாமதமாக கொடுக்கப்படுகின்றன என்ற புகார்கள் கூறப்பட்டன. இந்த தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட உடனேயே அவர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்கப்படும்.

இதுதவிர தேர்தல் பணியில் ஈடுபடும் 38 ஆயிரம் தனியார் வீடியோகிராபர்கள், 30 ஆயிரம் வாகன டிரைவர்கள், 10 ஆயிரம் கிளீனர்கள் ஆகியோருக்கும் தபால் ஓட்டுகள் முன்கூட்டியே வழங்கப்படும்.

இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.

இளைஞர்களின் பங்களிப்பு

முன்னதாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் 100 சதவீதம் நேர்மை, 100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கலந்துகொண்டு பேசியதாவது:- 

முன்பு போல வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க தாலுகா அலுவலகங்களுக்கு சென்று காத்திருக்க வேண்டியதில்லை. 5 நிமிடங்களில் உங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் அளவிற்கு வசதிகள் வந்து விட்டன. இங்குள்ள மாணவர்கள் அனைவரும் வைத்திருக்கும் ‘ஸ்மார்ட்’ போன் மூலம் உங்கள் பெயர்களை சேர்க்கலாம். புதிய புகைப்படங்களையும் நீங்களே மாற்றிக் கொள்ளலாம். 100 சதவீத நேர்மை, 100 சதவீத வாக்குப்பதிவு. இது தான் நமது நோக்கம்.

தமிழகத்தில் இளைஞர்கள் வாக்குகள் தான் முக்கியம். ஆனால் 18 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் வாக்காளர் பட்டியலில் 23 சதவீதம் தான் பதிவு செய்து கொண்டுள்ளனர். இளைஞர்களின் பங்களிப்பை தேர்தலில் அதிகரிப்பதற்காகத்தான் இதுபோன்று கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.

வீட்டில் மட்டுமல்லாமல் உங்கள் தெருக்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்களின் பெயர்களையும் நீங்கள் சேர்க்க முன்வர வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க தேர்தல் கமிஷன் விரைவான சேவைகளை அளிப்பது போல மாணவர்களாகிய நீங்களும் விரைவாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

‘வாட்ஸ்-அப்’பில் தகவல் தெரிவிக்கலாம்

தேர்தல் நேரத்தில் ஏதாவது குறைகள், விதிமுறை மீறல்கள் ஆகியவற்றை நீங்கள் எங்காவது பார்த்தால் அதுபற்றி எனக்கு வாட்ஸ்-அப் பில் தகவல், போட்டோக்களை அனுப்புங்கள். அந்த தகவல்கள், போட்டோக்கள் எங்கிருந்து வந்தது என்பதை ஜி.பி.எஸ். மூலம் நாங்கள் கண்டுபிடித்து அந்த இடத்துக்கு 10 நிமிடங்களில் பறக்கும் படையை அனுப்பி விடுவோம்.

இதன் மூலம் தேர்தல் விதிமுறைகளை மீறுவதை தடுக்க நீங்கள் உதவி செய்ய முடியும். பறக்கும் படையை கண்காணிக்க ஜி.பி.எஸ். முறை உள்ளது. எனவே அவர்கள் ஏமாற்ற முடியாது. மே மாதம் 16-ந்தேதி அனைவரும் தங்கள் வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

1,212 புகார்கள்

அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. இதில் இதுவரை 600 கல்லூரிகளில் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. மீதி கல்லூரிகளில் விரைவில் நடத்தி முடிக்கப்படும். சென்னையில் உள்ள 3 கல்லூரிகளில் 10 கல்லூரிகளில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விடும்.

தேர்தல் புகார்கள் தொடர்பாக இதுவரை ஆயிரத்து 212 புகார்கள் வந்துள்ளன. இதில் 700 புகார்கள் பேனர்கள் எடுக்க வேண்டும், சுவரொட்டிகள் அகற்ற வேண்டும் என்பவை தான். புகார்கள் வந்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதிகாரிகளின் மாற்றம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். புகார் கொடுத்தவருக்கும் எஸ்.எம்.எஸ். மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து தகவல் அனுப்பப்படும்.

பூத் சிலிப்

போலி வாக்காளர்கள் ஏற்கனவே நீக்கப்பட்டு விட்டனர். இன்னும் போலி வாக்காளர்கள் இருப்பதாக புகார்கள் வந்தால் அவர்கள் தனிப்பட்டியலில் வைக்கப்படுவார்கள். அந்த பட்டியலில் உள்ளவர்கள் ஓட்டுப்போடும் போது வாக்குச்சீட்டு தவிர மற்ற ஆவணங்களும் கொண்டு வந்து ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவார்கள்.

முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் தொடர்பாக நல்வாழ்வுத்துறை எங்களிடம் அனுமதி கேட்டால் அதுபற்றி முடிவு செய்யப்படும். ஓட்டுப்போட செல்லும் போது தேர்தல் கமிஷன் சார்பில் வீடு வீடாக வழங்கப்படும் வாக்குச்சீட்டு(பூத் சிலிப்) இருந்தாலே வாக்குப்பதிவு செய்யலாம். ஆனால் முகவரி மாறி சென்றவர்களின் பெயர்கள் தனிப்பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும். அப்போது அவர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்படாது. அத்தகைய வாக்காளர்கள் வேறு ஆவணங்களை காட்டி ஓட்டுப்போடலாம்.

இவ்வாறு அவர் கூறினார். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (கல்வி) ஆசியா மரியம், உள்பட பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி மைதானத்தில் வாக்குப்பதிவு முத்திரை வடிவில் மாணவர்கள் நின்று 100 சதவீத வாக்குப்பதிவு செய்வதாக உறுதி ஏற்றனர். 

Thursday 10 March 2016

தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ரெயில்கள் தாமதம்














நீடாமங்கலம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ரெயில்கள் தாமதமாக சென்றன. விரிசல் ஏற்படுவதற்கு நாசவேலை காரணமா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தண்டவாளத்தில் விரிசல்

மன்னார்குடியில் இருந்து மானாமதுரைக்கு பயணிகள் ரெயில் தினசரி இயக்கப்படுகிறது. வழக்கம்போல் நேற்று காலை 6.30 மணி அளவில் பயணிகள் ரெயில் மன்னார்குடியில் இருந்து மானாமதுரை புறப்பட்டது. நீடாமங்கலம் அருகே உள்ள சம்பாவெளி என்ற இடத்தில் ரெயில் சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில் சம்பாவெளி பகுதியில் உள்ள தண்டவாளத்தில் 1½ அடி நீளத்துக்கு விரிசல் ஏற்பட்டிருந்ததை அப்பகுதி பொதுமக்கள் பார்த்து, சம்பாவெளி ரெயில்வே கேட் கீப்பர் உலகநாதனிடம் கூறினர். அவர் நீடாமங்கலம் ரெயில் நிலைய கண்காணிப்பாளர் அன்பழகனுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் நீடாமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்த மானாமதுரை ரெயில் விரிசல் ஏற்பட்ட பகுதிக்கு முன்பாக நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டன.

ரெயில்கள் தாமதம்

இதையடுத்து தண்டவாள ஆய்வாளர்கள் பிரபாகரன், ராதாகிருஷ்ணன் மற்றும் நீடாமங்கலம் ரெயில் நிலைய தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சீரமைக்கும் பணி முடிவடைந்ததும் மானாமதுரை ரெயில் 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

இதேப்போல கோவையில் இருந்து மன்னார்குடிக்கு வரும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக நீடாமங்கலம் வந்தது. மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் வழியாக மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரெயில் வருவதிலும் தாமதம் ஏற்பட்டது. காலை நேரத்தில் 3 ரெயில்கள் தாமதம் ஆனதால் பயணிகள் பெரும் அவதிப்பட்டனர்.

நாசவேலை காரணமா?

நீடாமங்கலம் வழியாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதால் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தண்டவாளத்தில் விரிசலை ஏற்படுத்துவதற்காக யாரேனும் நாச வேலையில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலும் திருவாரூர் மாவட்ட போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

TNelections2016:13 தேர்தல் விதிமீறல் வழக்குகள் பதிவு

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 13 தேர்தல் விதிமுறை மீறல் வழக்குகள் காவல்துறை சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 4 ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இந்திய தேர்தல் ஆணையத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் பல இடங்களில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், விளம்பரப் பதாகைகள், போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததை தாங்களாகவே அகற்றி வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான சுவர்களிலும், நகராட்சி பகுதியில் உள்ள சுவர் விளம்பரங்களை இரு துறையும் சேர்ந்து அழித்து வருகிறது.
அப்படி இருந்தும் இதுவரை தேர்தல் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருந்ததாக, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் போலீஸாரே முன்வந்து, அதிமுக மீது 6 வழக்குகளும், திமுக மீது 4 வழக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் மீது தலா 1 வழக்கு என மொத்தம் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 6 புகார்கள்: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை விலையில்லா பொருள்கள் வழங்குதல், இலவச மருத்துவ முகாம் நடத்துதல் என 6 புகார்கள் வந்தது.
கட்டுப்பாட்டு அறையில் உள்ள பணியாளர்கள் உடனடியாகப் பறக்கும் படையினருக்கு தகவல் அளித்து, அந்தப் பணியை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து அது குறித்த தகவல் புகார் அளித்தவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.