Saturday 27 May 2017

நாளை ரம்ஜான் நோன்பு தொடக்கம், இலவச ’ஷஹர்’ உணவுக்கு 60-க்கும் மேற்ட்ட இடங்களில் ஏற்பாடு

இஸ்லாமியர்கள் ரம்ஜான் மாதத்தின் 30 நாள்களிலும் நோன்பிருந்து ஐந்து வேளை தொழுகை செய்வார்கள். மேலும் வானில் தோன்றும் பிறையை வைத்து ரம்ஜானுக்கு நோன்பு தொடங்கப்படுவது வழக்கம். அவ்வாறு பிறை தென்படாத சூழலில் ரம்ஜான் மாதத்தின் முதல் தேதியில் நோன்பை தொடங்குவார்கள். 

இந்தாண்டு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை ஏதும் நேற்றுவரை தென்படவில்லை. எனவே ரம்ஜான் மாதத்தின் முதல் தேதியில் நோன்பு தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசின் தலைமை காஜியார் சலாவுதீன் முகமது அயூப் கூறியதாவது:

ரம்ஜான் நோன்பு என்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று. தமிழகத்தில் 26ம் தேதியன்று பிறை தென்படவில்லை. எனவே, 28ம் தேதியான நாளை நோன்பு தொடங்கும். அனைத்து பள்ளிவாசல்களிலும் தராவீஹ் என்ற சிறப்பு தொழுகை 27-ந் தேதி இன்று முதல் தொடங்கும்.

ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து 5 வேளை தொழுகை செய்வார்கள். மாலையில் நோன்பு திறக்கப்படும். அதற்காக அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

நோன்பு இருக்கும் 27-ம் நாளை லைலத்துல்கத்ரு இரவாகவும், நோன்பின் கடைசி நாளை ரம்ஜான் பண்டிகையாகவும் இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள். சென்னையில் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ஷஹர் என்ற உணவு இலவசமாக வழங்க 60-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday 24 May 2017

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 6 கிராமமக்கள் போராட்டம்

பொதுமக்களை பாதிக்கும் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் நிலத்தடி நீர் மாசுப்படுவதை தடுக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி அடியக்கமங்கலம் உள்பட 6 கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் அடியக்கமங்கலம் பட்டகால் தெருவில் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் அப்துல்ஜலில், ராஜபாண்டியன், ஹாஜாபகுருதீன், மாரிமுத்து, ஹாஜாமைதீன் ஆகியோர் தலைமை தாங்கினர். அடியக்கமங்கலம், ஆண்டிபாளையம், சேமங்கலம், கருப்பூர், அலிவலம், கள்ளிக்குடி ஆகிய 6 கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Wednesday 17 May 2017

போக்குவரத்து தொழிலாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்: 50 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை


13-வது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர்களின் நிலுவைத்தொகை வழங்க வேண்டும். போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை அரசே ஈடு செய்ய வேண்டும் என்கிற 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 4 இடங்களில் உள்ள பணிமனைகளில் மொத்தம் 245 நகர் மற்றும் புறநகர் பஸ்கள் இயக்கப்படுகிறது. வேலை நிறுத்த போராட்டத்தினால் திருவாரூர்-33, மன்னார்குடி-30, திருத்துறைப்பூண்டி-44, நன்னிலம்-18 என மொத்தம் 125 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. 50 சதவீதம் அரசுபஸ் ஓடவில்லை.

இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். அரசு பஸ்கள் இயக்கப்படாததால் ரெயில்களில் கூட்டம் அலைமோதியது. இதனால் ரெயில் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு பயணிகள் சென்றனர்.

Monday 15 May 2017

கேரளாவில் பஞ்சாயத்து அலுவலக கம்ப்யூட்டர்களை ரான்சம்வேர் வைரஸ் தாக்கியது

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய, இணையவழி தாக்குதல் ‘டூல்’களை (கருவிகளை) கொண்டு, உலகின் சுமார் 150 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ‘ரான்சம்வேர்’ வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. ரான்சம்வேர் வைரஸ் இந்திய நெட்வோர்க்கை தாக்கியதாக தகவல்கள் எதுவும் இதுவரையில் வரவில்லை என அரசின் சைபர் க்ரைம் பாதுகாப்பு பிரிவு கூறிஉள்ளது.

இந்நிலையில் கேரளாவில் இரு பஞ்சாயத்து அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களை ரான்சம்வேர் வைரஸ் தாக்கி உள்ளது என செய்திகள் வெளியாகி உள்ளது. 

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் தாரியோடே பஞ்சாயத்து அலுவலகத்தை பணியாளர்கள் திறந்து, கம்ப்யூட்டர்களை ஆன் செய்தனர். அப்போது அவர்களுடைய 4 கம்ப்யூட்டர்களும் ஹேக்கிங் செய்யப்பட்டு உள்ளது என்பது தெரியவந்து உள்ளது. வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு, கணினியில் கோப்புகளை திறப்பதற்கு 300 டாலர் (ரூ.19 ஆயிரத்து மேல்) பிட்காயின்களை செலுத்துமாறு கணினி திரையில் தோன்றியதாகவும், இதுதொடர்பாக மாவட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று பஞ்சாயத்து அலுவலக அதிகாரி சந்தோஷ் கூறிஉள்ளார். 

இதுபோன்று பத்தனம்திட்டா மாவட்டத்தில் கொன்னி அருகே உள்ள அருவாபுலம் பஞ்சாயத்து அலுவலகத்திலும் கம்ப்யூட்டர்கள் ஹேக்கிங் செய்யப்பட்டு உள்ளது. மாநிலத்தில் பேப்பர் பைல்களை குறைக்க முக்கிய ஆவணங்கள் கணினிகளில் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்து உள்ளது. 

ஹேக்கிங்கிற்கு உள்ளாகி உள்ள கம்ப்யூட்டர்களை எப்படி மீட்பது என ஐடி நிபுணர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

Saturday 13 May 2017

பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியீடு: திருவாரூர் மாவட்டத்தில் 88.77 சதவீத மாணவ–மாணவிகள் தேர்ச்சி

திருவாரூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள்– 66, ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளிகள்–3, நகராட்சி மேல்நிலைப்பள்ளிகள்–1, உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள்–12, பகுதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள்–2, சுயநிதி மேல்நிலைப்பள்ளிகள்–3, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள்–23 என மொத்தம் 110 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 566 மாணவ, மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 134 மாணவர்கள், 7 ஆயிரத்து 796 மாணவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 930 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 88.77 ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4.59 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. மாநில அளவில் பிளஸ்–2 தேர்வில் கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தில் 31–வது இடத்தில் இருந்த திருவாரூர் மாவட்டம் தற்போது 25–வது இடத்தை பிடித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. மேற்கண்ட தகவலை திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதன் கூறினார்.

Friday 12 May 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 12/5/17



நமதூர்  கொடிக்கால்பாளையம்  காட்டுப்பள்ளி தெரு  K. J. புருஹானுதின்  அவர்கள் மனைவியும் (கட்ஸ்)  சாதிக்  அவர்களின் தாயாரும்   (டைப்)  ஆ. மு. அ. ஹாஜா அலாவுதீன்  அவர்களின்  மாமியாருமான ஜம்ருத்து நிஷா  அவர்கள்  மக்காவிற்கு  உம்ரா  பயணம்  சென்றவர்கள்  மக்காவிலே  இன்று   11 - 5 - 2017  வியாழக்கிழமை  வபாத்தாகி விட்டார்கள்.  " இன்னா லில்லாஹி  வஇன்னா  இலைஹி  ராஜிவூன்."  அல்லாஹ் ! அவர்களின்  பிழை  பாவங்களை பொறுத்து  அன்னாரின்  இறப்பை  ஏற்று  அவர்களின்  குற்றம்  குறைகளை  மன்னித்து  அவர்களை  பொருந்திக்  கொள்வானாக ! அவர்களுக்கு  ஜன்னத்துல்  பிர்தவ்ஸ்  எனும்  சொர்கத்தில்  இடமளித்  தருள்வானாக !  அன்னாரின் பிரிவால்  துயர்கொண்ட  அவரின்  குடும்பத்தார் களுக்கு  சபுர் என்னும்  பொருமையை  தந்தருள் வானாக !  ஆமீன் !

Tuesday 9 May 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 9/5/2017

அஸ்ஸலாமு அலைக்கும்  (வரஹ்.......... ! )

வபாத்  அறிவிப்பு

நமதூர்  கொடிக்கால்பாளையம்  பள்ளிக்கூடத் தெரு  மர்ஹும்  முஹம்மது  நத்தர் அவர்களின்  மகனார் ( டூப் )  ஜமால்  முஹம்மது  அவர்கள்  இன்று 09 - 05 - 2017  செவ்வாய் கிழமை  மாலை தனது  இல்லத்தில்  காலமாகிவிட்டார்கள்.  "இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் "

எல்லாம்  வல்ல  அல்லாஹ் ! அன்னாரின் குற்றம்  குறை  பாவங்களை  மன்னித்து , அவர்களின்  இறப்பை  ஏற்று , அவர்களுக்கு கப்ரின்  வேதனையை  லேசாக்கி , அவர்களின் நல்லமல்களை  ஏற்று  அன்னாரை பொருந்திக் கொள்வானாக !  அவர்களை  நல்லடியார் கூட்டத்தில்  சேர்த்து ,  ஜன்னத்துல்  பிர்தவ்ஸ்  எனும்  சொர்க்கத்தில்  இடமளித்து  அங்கு  அவர்களை  இருக்கச்  செய்தருள்வானாக !
அன்னாரின்  பிரிவால்  துயறுரும்  அவர்களின் குடும்பத்தார்களுக்கு சபுர் எனும் பொருமையை தந்தருள்வானாக !  ஆமீன் !

முத்தலாக் வழக்கு: தனிச்சட்டம் மக்களிடன் அடிப்படை உரிமைகளை மீற முடியாது உயர்நீதிமன்றம்


Sunday 7 May 2017

ரூ.30 லட்சம் மோசடி புகார்: அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு


திருவாரூர் மாவட்டம் கீழவாழாச்சேரி செட்டித்தோப்பை சேர்ந்தவர் குமார், ரியல் எஸ்டேட் அதிபர். இவர் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், சென்னை மயிலாப்பூரில் தனக்கு சொந்தமான வீட்டில் குடியிருப்பவர்கள் காலி செய்ய மறுத்தனர். இதனையடுத்து வக்கீல் ராமகிருஷ்ணன் என்பவர் மூலம் அவரது உறவினரான அமைச்சர் காமராஜை சந்தித்து விவரங்களை தெரிவித்தேன். வீட்டில் குடியிருப்பவர்களை காலிசெய்ய அமைச்சர் காமராஜ் ரூ.30 லட்சம் கேட்டு வாங்கினார். ஆனால் காலி செய்து தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டல் விடுக்கின்றனர் என தெரிவித்து இருந்தார்.

சுப்ரீம் கோர்ட்டில் மனு

இந்த மனு மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் சென்னை ஐகோர்ட்டில் குமார் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மனுதாரர் விசாரணைக்காக மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முன்பு நேரில் ஆஜராக வேண்டும் என்றும், மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

ஐகோர்ட்டின் இந்த உத்தரவை ரத்துசெய்து அமைச்சருக்கு எதிரான மனுவை சட்டப்படி நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் குமார் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் கண்டனம்

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் என்.வி.ரமணா, பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 3-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் காமராஜ் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

அமைச்சர் என்றால் சட்டவிதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்று அர்த்தமா? அவர் சட்டத்துக்கும் மேலானவரா? அவரும் சட்டத்துக்கு உட்பட்டவர் தான். அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழக அரசு வக்கீல், மனுதாரர் மீது இதுதொடர்பாக மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அதை ஏற்கமறுத்த நீதிபதிகள், தமிழக அரசு நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துகிறது என குற்றம்சாட்டினர்.

மனுதாரரின் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த கூடுதல் அறிக்கையை 6-ந் தேதிக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 8-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ஆஜராக சம்மன்

இதைத்தொடர்ந்து புகார் அளித்த குமாரிடம் முதல்கட்ட விசாரணை நடத்த திருவாரூர் குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. கீழவாழாச்சேரியில் உள்ள வீட்டில் குமார் இல்லாததால் வீட்டின் சுவரில் சம்மன் ஒட்டப்பட்டது.

அதில், தங்கள் மனு சம்பந்தமாக விசாரிக்க வேண்டியது உள்ளதால் மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 5-ந் தேதி காலை 10 மணிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அதில் கூறப்பட்டிருந்தது. ஆனால் விசாரணைக்கு குமார் நேரில் ஆஜராகவில்லை.

அமைச்சர் மீது வழக்குப்பதிவு

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் வக்கீல் ராமகிருஷ்ணன், அமைச்சர் காமராஜ் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 420 பிரிவு (மோசடி), 506(1) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் வக்கீல் யோகேஷ் கன்னா பிரமாண பத்திரமாக தாக்கல் செய்தார். அதில், அமைச்சர் காமராஜ், அவரது உறவினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரரின் புகார் குறித்து மேலும் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. 

Saturday 6 May 2017

நீட் பொதுத்தேர்வு நாளை நடைபெறுகிறது: மாணவ மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்


மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய அளவிலான ‘நீட்’ பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் சுமார் 11.35 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள். இதற்காக மொத்தம் 103 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழத்தில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், அசாம், வங்காளம், குஜராத்தி, மராத்தி, ஒடியா ஆகிய 10 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என 4 பாடங்களில் தலா 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும்.

ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதே சமயம் தவறான பதில் அளித்தால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். ஒரே கேள்விக்கு பல பதில்களை அளித்தாலும் அது தவறான பதிலாகவே கருதப்படும்.ஒரு மாணவர் 3 முறை நீட் தேர்வை எழுத முடியும். இட ஒதுக்கீடு பெறும் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 30 வயதுக்குள் 3 முறையும், பிற மாணவர்கள் 25 வயதுக்குள் 3 முறையும் நீட் தேர்வை எழுத முடியும்.


நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும். மாணவர்கள் காலை 7.30 மணிக்கு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். தேர்வு எழுதுவதற்கான அனுமதி அட்டை காலை 9.45 மணி வரை சோதனை செய்யப்படும். மாணவர்கள் காலை 9.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மாணவர்கள் தேர்வு அறைக்குள் தேர்வுக்கூட அனுமதி அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அனுமதி அட்டையின் 2-வது பக்கத்தில் ஓட்ட வேண்டிய அஞ்சல் அட்டை அளவு புகைப்படம் ஆகியவற்றை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். நீலநிறம் அல்லது கருப்பு நிற பால்பாயின்ட் பேனா மூலமே தேர்வு எழுத வேண்டும். பேனா தேர்வுக் கூடத்திலேயே வழங்கப்படும்.நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகள் ஷூ, முழுக்கை சட்டை, டீ-சர்ட், பெல்ட், கைக்கடிகாரம், குளிர் கண்ணாடி, செயின், மோதிரம், பிரேஸ்லெட், நெக்லஸ், ஆபரணங்கள், கிளிப்புகள், பெரிய அளவு பட்டன்கள், பேட்ஜ், பெரிய அளவு ரப்பர் பேண்டுகள், சேலை, வளையல், பர்தா, தொப்பி, பைஜாமா, குர்தா ஆகியவை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரைக்கை சட்டை, செருப்பு, பேண்ட், ஜீன்ஸ் பேண்ட், மருத்துவர்கள் பரிந்துரைத்த கண் கண்ணாடி, லெக்கின்ஸ், சுடிதார், சிறிய அளவு ரப்பர் பேண்ட் ஆகியவற்றை அணிந்து செல்ல அனுமதி உண்டு. திருமணமான பெண்கள் தாலி மற்றும் வளையல் அணிந்து கொள்ளலாம்.செல்போன், கைப்பை, கால்குலேட்டர், கேமரா, பென்டிரைவ், ஹெட்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது.முறைகேடுகளை கண்ட றிய தீவிர கண்காணிப்பு நடைபெறும். முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Friday 5 May 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 5/5/17

அஸ்ஸலாமு அலைக்கும்  (வரஹ்.......... ! )

வபாத்  அறிவிப்பு

நமதூர்  கொடிக்கால்பாளையம்  ஜெயம் தெரு
செவிட்டா வீடு  (செல்லப்பா)  மர்ஹும்  ஹபீபுல்லாஹ்  அவர்களின்  துணைவியார்  ஹமீது  நாச்சியார்  அவர்கள்  நேற்று  இரவு  மேலத் தெருவில  காட்டுராஜாவீட்டில் காலமாகிவிட்டார்கள். " இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் " அன்னாரின்  ஜனாஸா  இன்று  05 - 05 - 2017  வெள்ளிக் கிழமை  மாலை  நல்லடக்கம் செய்யப்படுகிறது.

எல்லாம்  வல்ல  அல்லாஹ் ! அன்னாரின் குற்றம்  குறை  பாவங்களை  மன்னித்து , அவர்களின்  இறப்பை  ஏற்று , அவர்களுக்கு கப்ரின்  வேதனையை  லேசாக்கி , அவர்களின் நல்லமல்களை  ஏற்று  அன்னாரை பொருந்திக் கொள்வானாக !  அவர்களை  நல்லடியார் கூட்டத்தில்  சேர்த்து ,  ஜன்னத்துல்  பிர்தவ்ஸ்  எனும்  சொர்க்கத்தில்  இடமளித்து  அங்கு  அவர்களை  இருக்கச்  செய்தருள்வானாக !
அன்னாரின்  பிரிவால்  துயறுரும்  அவர்களின் குடும்பத்தார்களுக்கு சபுர் எனும் பொருமையை தந்தருள்வானாக !  ஆமீன் !

Tuesday 2 May 2017

டாஸ்மாக் மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரியில் வெடிகுண்டு சிக்கியது 3 பேர் கைது

திருவாரூர் மாவட்டம் விளமலில் டாஸ்மாக் குடோன் உள்ளது. இந்த குடோனுக்கு சென்னை, கோவை, காஞ்சீபுரம் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள மது ஆலைகளில் இருந்து மதுபாட்டில்கள் லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு வரும் லாரிகள், மதுபாட்டில்களை இறக்குவதற்காக குடோனின் வளாகத்திலேயே ஒரு வாரம் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில் கோவையில் இருந்து மதுபாட்டில்களை ஏற்றி கொண்டு திருவாரூருக்கு வரும் லாரியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக சென்னை எண்ணூர் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் லாரியை சோதனையிடுவதற்காக சென்னையில் இருந்து திருவாரூர் விரைந்தனர். நேற்று காலை திருவாரூர் விளமல் டாஸ்மாக் குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்துக்கு உரிய லாரியை போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டனர். அப்போது லாரியில் டிரைவரின் இருக்கைக்கு அருகே ஒரு ஹாட்பாக்சில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றும், நாட்டு வெடிகுண்டு ஒன்றும் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் வெடிகுண்டுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். லாரியில் இருந்த அரிவாளையும் போலீசார் கைப்பற்றினர்.

கிளனர் கைது

கைப்பற்றப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தால் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு சேதம் ஏற்படும் என்றும், அதை சரியான நேரத்தில் அப்புறப்படுத்தியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். வெடிகுண்டு இருந்த லாரியை காரைக்காலை சேர்ந்த மோகன் என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் மாற்று டிரைவராக ராஜ்குமார் என்பவர் வந்தார். இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியில் கிளனராக பணியாற்றிய ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை போலீசார் மேலும் 2 பேரை கைது செய்து உள்ளனர். அவர்களின் பெயர், விவரங்கள் தெரியவில்லை.

நாச வேலைக்கு திட்டமா?

வெடி குண்டு கொண்டு வரப்பட்ட லாரியில் கோவையை சேர்ந்த ஒரு சிறுவனும் வந்துள்ளான். அவனிடம் திருவாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுபாட்டில்களுடன் வெடிகுண்டு எடுத்துக் கொண்டு லாரி திருவாரூர் வந்ததற்கான காரணம் என்ன? திருவாரூரில் நாச வேலையை நிகழ்த்த சதி திட்டம் தீட்டப்பட்டதா? என்பது பற்றி திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவாக உள்ள லாரி டிரைவர்கள் மோகன், ராஜ்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அ.தி.மு.க. கொடி கட்டிய கார்

இதனிடையே அ.தி.மு.க. கட்சியின் கொடி கட்டப்பட்ட கார் ஒன்று சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் மதுபான கிடங்கு அமைந்துள்ள பகுதியில் சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன் மற்றும் போலீசார் விசாரித்த னர். இதில் அந்த கார் திருவாரூர்-கும்பகோணம் சாலையில் குடவாசல் அருகே சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதுபற்றி குடவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

குடவாசல் அருகே உள்ள அகரஓகை பகுதியில் அந்த காரை போலீசார் வழிமறித்து விசாரித்தனர். அப்போது, அந்த காரில் இருந்தவர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் காரை சுற்றி வளைத்தனர். பின்னர் குடவாசல் போலீசார் விசாரணை நடத்தியதில், சென்னை எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், சென்னையை சேர்ந்த கீர்த்திரமேஷ் என்பவரை பிடித்து காரில் அழைத்து செல்வது தெரியவந்தது. கீர்த்திரமேஷ் பல்வேறு வழக்குகள் தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.