Thursday 17 March 2016

தேர்தல் விழிப்புணர்வு குறித்து விடியோ படக்காட்சி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்


திருவாரூர் பேருந்து நிலையத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த விழிப்புணர்வு விடியோ படக்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் எம்.மதிவாணன், படக்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசியது:
2016 பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும் விதத்தில் விழிப்புணர்வு பிரசாரம் செய்துவருகிறது. இப்பிரசாரங்கள் தொலைக்காட்சி, தேர்தல் ஆணையத்தின் இணையதளம், குறுந்தகவல், பேரணிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டச் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், மின்னணு விடியோ வாகனம் மூலம் விடியோ படக்காட்சி வாயிலாக, வாக்களிப்பதன் அவசியம் குறித்து பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
திரைப்பட நடிகர் கமலஹாசன், ஒரு சிறுதொகைக்காக நம் தன்மானத்தையும், எதிர்காலத்தையும் விற்றுவிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்ட விளம்பரம், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கமளிக்கும் விளம்பரப் படத்தொகுப்புகள் ஒளிபரப்பப்படுகின்றன.
மேலும், மனச்சாட்சிப்படி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், எந்த ஒரு அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல் வாக்களிக்க வேண்டும், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை பார்வையிட்டு, உடனடியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், குறித்த குறும்படங்களும், படித்திருந்தாலும், நகர்புற வாக்காளர்கள் வாக்களிக்க முன்வராவிட்டால் அது தவறு என்பது குறித்தும், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று, வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விழிப்புணர்வு விடியோ படக்காட்சி திருவாரூர் மாவட்டத்துக்குள்பட்ட நான்கு பேரவைத் தொகுதிகளிலும் நடைபெறும். மக்கள் அனைவரும் இதனைப் பார்த்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றார் மதிவாணன்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2016 தொடர்பாக தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லையை அரசு பேருந்துகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஒட்டப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் த.மோகன்ராஜ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முத்துமீனாட்சி (திருவாரூர்), அசோகன் (நன்னிலம்), செல்வசுரபி (மன்னார்குடி), பிரேம்குமார் (திருத்துறைப்பூண்டி), தனி வட்டாட்சியர் ரெங்கசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment