Monday 25 July 2016

கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வலியுறுத்தல்

திருவாரூரில் கழிவுநீர் கால்வாய்களை சீரமைத்து, முறையாகப் பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
திருவாரூர் நகராட்சியில் மொத்தமுள்ள 31 வார்டுகளில் சுமார் 1.50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு, புதைச்சாக்கடைப் பணிகள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, இன்னும் முழு அளவில் நிறைவடையாமல் உள்ளது. இதற்கிடையில் பெரும்பாலான கழிவுநீர் கால்வாய்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல், ஆக்கிரமிப்புகள் நிறைந்தும், அடைப்புகள் ஏற்படும் காணப்படுகின்றன. இதனால், கழிவுநீர் முறையாக வடிந்து செல்லாமல், ஆங்காங்கே தேங்கி துர்நாற்றம் வீசிகிறது.
சில இடங்களில் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுக்கின்றன. வடிகால் சிதிலமடைந்துள்ளதால், சிறிது நேரம் மழை பெய்தாலும், மழைநீர் ஆங்காங்கே குட்டைபோல் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.
வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள சாக்கடைகளில் தேங்கி அடைப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, பேருந்து நிலையம், தியாகராஜர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கொசுத் தொல்லை அதிகரித்து மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதைத் தடுக்க கழிவுநீர் கால்வாய்களை சீரமைத்து, சுகாதாரத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகமும், நகராட்சியும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment