Wednesday 11 May 2016

அடையாள அட்டை கிடைக்காததால் வாக்காளர்கள் அதிருப்தி


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 5 நாள்களே உள்ள நிலையில், திருவாரூர் நகரில் வாக்காளர் அடையாள அட்டை பெரும்பாலான வாக்காளர்களுக்கு வழங்கப்படாததால் தேர்தல் ஆணையத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர்.
தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் ஜனவரி முதல் தேதியை தகுதி நாளாகக் கொண்டு கணக்கெடுக்கப்பட்டு, வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக இருந்தால் அவர்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகிறது.
வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டும், அவர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வழங்கப்படுகிறது. வாக்காளர் பட்டியிலில் இடம் பெற்றதும், அவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி அதில் தேர்தல் ஆணையமே புகைப்படத்தை எடுத்து வாக்காளர் அடையாள அட்டை வழங்குகிறது.
ஆனால், திருவாரூர் பகுதியில் தேர்தல் ஆணையத்தால் புகைப்படம் எடுக்கப்பட்டும் இதுவரை அடையாள அட்டை பெரும்பாலான வாக்காளர்களுக்கு வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டால் முறையாக பதிலளிப்பதில்லை.
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு 15 தினங்களுக்குள் அடையாள அட்டை வழங்க வேண்டுமென உத்தரவிட்டும், திருவாரூர் மாவட்டத்தில் மாத கணக்கில் அடையாள அட்டை வழங்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தத்தேர்தலில் அடையாள அட்டை இல்லையென்றாலும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 13 ஆவணங்களில் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் எனக் கூறியுள்ளது. ஆனால், இப்போது கிடைக்காமல் பிறகு கிடைத்து என்ன பயன். மேலும், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு மீது மக்களுக்கு நம்பிக்கையற்ற தன்மை தான் ஏற்படும்.
வாக்காளர் சேவை மையங்களில் புதிதாக வண்ண அடையாள அட்டை பெற மார்ச் மாதம் முதல் ரூ. 25 செலுத்தியும் இதுவரை வாக்காளர்களுக்கு அடையாள அட்டை விநியோகம் செய்யவில்லை. தேர்தலை முறையாக நடத்தவும், 100 சதவீதம் வாக்குப்பதிவு ஏற்படுத்தவும் முயலும் மாவட்ட நிர்வாகம் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இதேபோல், தொகுதிக்கு வந்துள்ள மத்திய தேர்தல் பார்வையாளர்கள் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை கிடைத்துள்ளதா? என்று திடீரென கள ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான் அலுவலர்களின் பணித்திறன் வெளிப்பட வாய்ப்புள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment