Wednesday 25 March 2015

திருவாரூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானம்: வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்

திருவாரூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

திருவாரூரில் நகராட்சித் தலைவர் வே. ரவிச்சந்திரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியது:

அசோகன் (திமுக): நகர் பகுதிகளில் மின்விளக்குகள் சரியாக எரியவில்லை. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் முறையான பதில் இல்லை.

டி. செந்தில் (திமுக): நகரில் ஆக்கிரமிப்புகள் கண்துடைப்புக்காக அகற்றப்படுகிறது. திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றியப் பகுதிகளில் உடனடியாக அங்கு தரைக்கடைகள் போடப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம். சம்பத் (காங்கிரஸ்): புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் மந்த நிலையில் உள்ளது. தற்போது எவ்விதப் பணிகளும் நடைபெறவில்லை. பணிகளின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

ஆர்.டி. மூர்த்தி (அதிமுக): நகரில் குப்பைகள் அகற்றுவது குறித்து வார்டு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. நகரிலுள்ள வார்டுகளில் குப்பைகள் அகற்ற ஒரு வரையறை செய்ய வேண்டும்.

வே. ரவிச்சந்திரன் (தலைவர்): நகரில் குப்பைகள் சுத்தம் செய்வது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

துப்புரவு பணியாளர்களின் கோரிக்கை ஏற்க மறுப்பு: கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அண்ணா துப்புரவுத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஆர். ராஜேந்திரன் தலைமையில் தொழிலாளர்கள், துப்புரவுப் பணிக்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும், கூடுதல் பணிச்சுமை கொடுப்பதை தவிர்க்க வேண்டும், ஓய்வூதியம் பெறும் பணியாளர்களுக்கு குறித்த காலத்தில் பணப்பயன் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து கூட்டத்தில் தெரிவிக்க வந்தனர். அப்போது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

No comments:

Post a Comment