Tuesday 1 April 2014

ஆதாரமற்றுப்போன ஆதார்!


அரசு மானியம், நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவித்தொகை அளிப்பதில் மிகப்பெரும் ஊழல் நடப்பதால் அதைத் தடுத்து, பணப்பலன் நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஆதார் அடையாள அட்டைத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

 அமெரிக்காவின் கிரீன் கார்டு போல, இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அனைத்து தேவை மற்றும் தகவலுக்கான ஒரே அட்டையாக ஆதார் அமைய வேண்டும் என்றுதான் இத்திட்டத்தைத் தொடங்கினார்கள்.
ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு காட்டிய அவசரம், இத்திட்டத்தை மக்களுக்குப் பெரும் இடையூறாக மாற்றியது. எதிர்ப்புகள் கிளம்பின.

பணப்பலன்களை வங்கியில் செலுத்துவதில் எந்தத் தடையும் இல்லை. மக்கள் அதை விரும்பவும் செய்தார்கள். ஆனால், பயனாளியின் வங்கிக்கணக்கு, ஆதார் அட்டை எண்ணுடன் இணைந்ததாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை பலருக்கு சாத்தியமில்லாமல் போனது. அங்குதான் பிரச்னையே தொடங்கியது.

ஏன் இவ்வளவு அவசரம் காட்ட வேண்டும்? அத்தனை விரைவாக இந்தியர் அனைவரையும் இந்த ஆதார் எண்ணுக்குள் கொண்டுவந்துவிட வேண்டிய தேவைதான் என்ன? இந்தக் கேள்விகளுக்கு விடை-தேர்தல் நேரத்தில் சாதனையாகச் சொல்லிக்கொள்வது மட்டுமே அல்ல. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், அதாவது புகைப்படம் எடுத்தல், அட்டை வழங்குதல் உள்ளிட்ட சேவைகளுக்கு தனியார் நிறுவனத்தை ஒப்பந்த அடிப்படையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாலும், இதற்கு சில அல்லது ஒரு அரசியல்வாதியின் வாரிசு ஒப்பந்தம் பெற்றிருந்ததாலும், ஆட்சி முடிவதற்குள் மொத்த வேலையையும் முடித்து பணம் பார்த்துவிட வேண்டும் என்ற அவசரம்தான் பல துறைகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதன் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தை நிதானமாக, சரியான யோசனையுடன் செய்திருந்தால், இவர்கள் முதலில் பள்ளி மாணவர்களுக்கு தனி அடையாள எண் வழங்குவதில் தொடங்கியிருப்பார்கள்.

அனைவருக்கும் கல்வி உரிமை என்று சட்டம் இயற்றிய பிறகு, மாணவர்கள் அனைவருக்கும் தனி அடையாள எண் வழங்குவது எளிது, அவசியம் என்பதோடு, மாணவர்களின் உடல்நலப் பரிசோதனைகள், மருத்துவம் ஆகியவற்றை இலவசமாக அளித்தல், சாதி, மதம், ஊர், பெற்றோர், தகவல்களை ஒருகுடை கண்காணிப்பில் கொண்டுவருதல், உயர்கல்வி, கல்வி உதவித்தொகை ஆகியவற்றை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துதல், அவர்கள் மணம் புரிந்து தனியான குடும்பமாக மாறும்போது எரிவாயு இணைப்பு, குடும்ப அட்டை, கடவுச்சிட்டை ஆகியவற்றுக்கான அடிப்படையாக இயல்பாகவே ஆதார் அட்டை ஒரு சான்றாக மாறுதல் எல்லாமும் எந்த இடையூறும் இல்லாமல் நடந்தேறியிருக்கும்.

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 30 வயதுக்குள் இருக்கும் அனைவருமே ஆதார் அடையாள அட்டை வைத்திருக்கும் நிலை உருவெடுத்திருக்கும்.
முன்யோசனை இல்லாமல் முதியோர் உதவித்தொகைக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்றார்கள். ரூ.1,000 உதவித் தொகைக்கு ரூ.50 போஸ்ட்மேனுக்கு லஞ்சமாகச் செல்வது இதனால் தடுக்கப்படும் என்றாலும், ஆதார் அட்டை இல்லாத ஏழை முதியோர்கள் உதவித்தொகை வாங்க முடியாமல் போனது.
நடைமுறை சாத்தியங்களைப் பற்றிய கவலையே இல்லாமல், வேலைவாய்ப்பு உறுதித் திட்டக் கூலியைப் பெற ஆதார் அட்டை கட்டாயம் என்றார்கள். ரூ.150 கூலி முழுதாக கிடைப்பதில்லை என்பது உண்மையே. ஆனால் ஆதார் எண்ணுடன் இணைந்த வங்கிக் கணக்கு பல கிராம மக்களுக்கு சாத்தியமில்லாமல் போனது. ஆகவே எதிர்ப்பு கிளம்பியது.

தேவையில்லாமல், எரிவாயு உருளைக்கான மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றார்கள். எரிவாயு உருளை இணைப்பு பெற்ற அனைவருக்கும் வங்கிக் கணக்கு இருக்கிறது. ஆனால் அதனை ஆதார் அட்டை எண்ணுடன் இணைத்தால்தான் மானியம் என்றார்கள். பல ஆயிரம் குடும்பங்கள் கொந்தளித்தன.

திட்டம் என்னவோ தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய நல்ல முயற்சிதான். ஆதார் அட்டை வழங்குவதன் மூலம், அகதிகள் என்கிற பெயரில் நடக்கும் ஊடுருவல்களைத் தடுக்க முடியும். ஓரளவுக்கு மானியம் முறையாகப் பயனாளிகளைச் சேர்வதை உறுதிப்படுத்தவும் முடியும். தவறான என்ணத்துடன் முறையான திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஆதார் அட்டைக்கு ஏற்பட்டிருக்கும் அவலம்தான் ஏற்படும். விளைவு? இப்போது நீதிமன்ற உத்தரவினால், அரசின் உதவிகளைப் பெற ஆதார் எண் கட்டாயமில்லை என்று அறிவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது மத்திய அரசு.

No comments:

Post a Comment