Friday 21 July 2017

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியிலும் 50 வருட சாதனையை மீரா குமார் உடைத்தார்

ஜனாதிபதி பதவிக்கு பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பீகார் முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் போட்டியிட்டனர்.

பதிவான மொத்த வாக்குகளின் மதிப்பு 10 லட்சத்து 69 ஆயிரத்து 358. இதில், ராம்நாத் கோவிந்த் 7 லட்சத்து 2 ஆயிரத்து 44 வாக்குகள் பெற்று, எதிர்பார்த்தது போலவே அமோக வெற்றி பெற்றார். அவருக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 2,930 பேர் ஓட்டுப்போட்டு இருந்தனர். இவர்களில் 522 பேர் எம்.பி.க்கள் ஆவார்கள். ராம்நாத் கோவிந்த் 65 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று சாதனை படைத்தார்.
மீராகுமார் 3 லட்சத்து 67 ஆயிரத்து 314 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 

அவருக்கு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 1,844 பேர் ஓட்டுப் போட்டு இருந்தனர். இவர்களில் 225 பேர் எம்.பி.க்கள் ஆவார்கள்.

தோல்வியிலும் 50 வருட சாதனையை எதிர்க்கட்சிகள் தரப்பில் களமிறக்கப்பட்ட மீரா குமார் உடைத்து உள்ளார். ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் இரண்டாவது இடத்தில் அதிகமான வாக்குகளை வாங்கியவர்கள் என்ற நிலையை எட்டிஉள்ளார். கடந்த 1967-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் தலைமை நீதிபதி கோகா சுப்பா ராவ், அனைத்து எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்தவர். போட்டியிட்டு ஜாகிர் ஹுசைனிடம் தோல்வி அடைந்தார். எதிர்க்கட்சிகள் தரப்பில் களமிறங்கி 3.63 லட்சம் வாக்குகளை பெற்று சாதனைப் படைத்தார். அதனை 50 வருடங்களுக்கு பின்னர் மீரா குமார் உடைத்து உள்ளார். 

ஜனாதிபதி தேர்தலில் சுப்பா ராவின் இரண்டாவது சாதனையான 43 சதவித வாக்கு என்பது இன்றும் உடைக்க முடியாத வரலாறாக உள்ளது. இப்போது மீரா குமார் 34 சதவித வாக்குகளை பெற்று உள்ளார். பாரதீய ஜனதாவின் முதல் ஜனாதிபதி ஆகிஉள்ளார் ராம்நாத் கோவிந்த்.

No comments:

Post a Comment