Friday 10 February 2017

தலைமைச்செயலாளர், டிஜிபியுடன் கவர்னர் வித்யாசாகர் ராவ் நடத்திய ஆலோசனை நிறைவு

அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை கடந்த 5-ந்தேதி எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்தனர். இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை கவர்னர் மாளிகையில் கொடுத்திருந்தார். அந்த கடிதத்தை கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்றுக் கொண்டு புதிய அமைச்சரவை அமையும் வரை முதல்-அமைச்சர் பொறுப்பில் நீடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே கட்டாயப்படுத்தப்பட்டதால் முதல் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததாக  ஓ பன்னீர் செல்வம் கூறியிருந்தார். இதன்பின்னர்,நேற்று சென்னை வந்த கவர்னரை சசிகலா எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதேபோல், ஓ பன்னீர் செல்வமும் ஆளுநரை சந்தித்து பேசினார். 

சசிகலாவை ஆதரித்துள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேசமயம், கவர்னர் அழைக்கும்போது ஒன்றாக செல்வதற்கு வசதியாக விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக சசிகலா ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். எம்.எல்.ஏ.க்களை மீட்கக்கோரி தொடரப்பட்ட ஆட்கொணர்வு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுபற்றி விசாரிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன், டி.ஜி.பி. ராஜேந்திரன் இன்று சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் தற்போதைய சூழ்நிலை, அதிகாரிகள் மாற்றம் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து டி.ஜி.பி.யுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தினார். மேலும், சசிகலாவுக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்.ஏ.க்கள் தற்போது எங்கிருக்கிறார்கள்? என்பது பற்றியும் ஆளுநர் கேட்டறிந்ததாக தெரிகிறது. 

டி.ஜி.பி.யை தொடர்ந்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் ஆணையர் ஜார்ஜ், உளவுப்பிரிவு கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன் ஆகியோரும் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த ஆலோசனை நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment