Tuesday 5 May 2015

தமிழகத்தில் வீடுகளில் சூரிய மின்தகடு அமைக்க 2,715 பேருக்கு அனுமதி



தமிழகத்தில் வீடுகளில் சூரியமின்தகடு மேற்கூரை அமைக்க 2 ஆயிரத்து 715 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டதில், முதல் கட்டமாக 547 வீடுகளில் உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது.

சூரியமின்தகடு மேற்கூரை

தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்குவதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு சூரிய மின்சக்தி கொள்கையை வெளியிட்டார். முதல் கட்டமாக 10 ஆயிரம் வீடுகளுக்கு சூரியமின்தகடு மேற்கூரை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி இந்த பணி மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

சோலார் பேனல் அமைக்கும் முறையில் 5 ஏக்கர் நிலத்தில் மெகாவாட் கணக்கில் மின்சாரம் உற்பத்தி செய்வது மற்றும் வீட்டு கட்டிடங்களுக்கு 1 கிலோவாட் முதல் 100 கிலோவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்வது ஆகிய 2 முறைகளில் அமைக்க அனுமதிக்கப்படுகிறது.

முதல் கட்டமாக வீடுகளுக்கு 1 கிலோ வாட் என்ற அளவில் அமைப்பதற்கு மட்டும் மானியம் வழங்கப்படுகிறது. ஒரு கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல் அமைக்க 10 சதுர அடி இடம் மட்டுமே போதுமானது. மாறாக ஏக்கர் கணக்கில் அமைப்பவர்களுக்கு மானியம் வழங்கப்படுவதில்லை.

அரசு அலுவலகங்கள்

வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் சோலார் பேனல் அமைக்க ரூ.47 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை வீட்டு உரிமையாளர்கள் செலவிட வேண்டிவரும். அதற்கு மேல் ஆகும் தொகைக்கு மானியமாக ரூ.20 ஆயிரம் மாநில அரசு வழங்குகிறது. மீதம் உள்ள தொகைக்கு மத்திய அரசிடமிருந்து 30 சதவீத மானியத்தை தமிழக அரசு பெற்று தருகிறது.

புதிதாக கட்டப்படும் அரசு அலுவலக கட்டிடங்கள் மற்றும் பழைய அரசு அலுவலக கட்டிடங்களில் படிப்படியாக சூரிய மேற்கூரை மின் அமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதுபோல ஊராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சோலார் பேனல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து எரிசக்தி துறை அதிகாரிகள் கூறியதாவது:-

300 நாட்கள் உற்பத்தி

காற்றாலை மற்றும் புனல் மின்சார நிலையங்கள் சீசன் காலங்களில் மட்டுமே எதிர்பார்த்த அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. ஆனால் ஆண்டுக்கு சராசரியாக 300 நாட்கள் சூரிய வெப்பம் இருப்பதால் சூரிய சக்தி மின்கூரை அமைக்க நல்ல வரவேற்பு உள்ளது.

இதன் மூலம் தினமும் குறைந்தபட்சம் 4.5 முதல் 5 யூனிட்கள் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரத்தைக் கொண்டு ஒரு வீட்டில் 4 டியூப் லைட்டுகள், இரண்டு மின்விசிறிகள், ஒரு தொலைக்காட்சி பெட்டியை பயன்படுத்திக் கொள்ளலாம். மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருந்தால் சோலார் பேனல் மூலம் கிடைக்கும் மின்சாரம் போக மீதமுள்ள மின்சாரத்தை ‘கிரிட்’ மூலம் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.

2,715 விண்ணப்பங்கள்

சூரிய மேற்கூரை அமைக்கும் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு 1 கிலோ வாட் திறன் கொண்ட மேற்கூரை அமைக்க 2 ஆயிரத்து 715 பேரின் விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதில் முதல் கட்டமாக 547 வீடுகளில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சராசரியாக மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 735 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆன்-லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

ஒருவர் தனது வீட்டுக்கு சோலார் பேனல் அமைத்து அதன்மூலம் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த விரும்பினால் ஆன்-லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் இணையதளத்தில் ஷ்ஷ்ஷ்.௴மீபீணீ.வீஸீ இ-பார்ம்ஸை கிளிக் செய்ய வேண்டும். அதில் டொமஸ்டிக் கிளிக் செய்தால் விண்ணப்ப படிவம் வந்துவிடும். அதில் கேட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து மேற்கண்ட இணையதள முகவரிக்கு அனுப்பிவிட வேண்டும். விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு ஆன்-லைனிலேயே அனுப்பப்படும்.

இந்த இணையதளத்தில் சோலார் பேனல் விற்பனையில் ஈடுபட்டுள்ள 17 கம்பெனிகளின் பட்டியலும் இடம் பெற்றிருக்கும். அதில் ஏதாவது ஒரு கம்பெனியை வீட்டு உரிமையாளர் தேர்வு செய்து விண்ணப்பப் படிவத்தில் தெரிவிக்கலாம்.

ஒவ்வொரு வீட்டுக்கும் அதிகபட்சம் 1 கிலோ வாட் (1000 வாட் அவர்) திறன் கொண்ட சோலார் பேனலுக்கு மட்டுமே அரசு மானியம் கிடைக்கும். இந்த திட்டத்தை விரைவுப்படுத்துவதற்காக விண்ணப்பங்கள் 30 நாள் கால அவகாசத்தில் பரிசீலனை செய்து அனுமதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாதம் 150 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

மொட்டை மாடி

ஒரு கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல் (பேட்டரி இல்லாமல்) அமைப்பதற்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் செலவாகும். சோலார் பேனல் அமைக்கும்போது கம்பெனிக்கு மத்திய அரசின் 30 சதவீத மானியத் தொகையை கழித்துக் கொண்டு வீட்டு உரிமையாளர் கொடுத்தால், அந்த மானியத்தொகை கம்பெனிக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஒருவர் தனது வீட்டு மொட்டை மாடியில் சோலார் பேனல் வைத்த பிறகு அந்தந்த மாவட்டத்தில் உள்ள உதவி பொறியாளர் ஆய்வு செய்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு தகவல் தெரிவிப்பார். அதன்பிறகு ஒரு மாதத்திற்குள் மானியத் தொகை வழங்கப்பட்டுவிடும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார். 

No comments:

Post a Comment